புதன், 25 ஆகஸ்ட், 2021

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ,க்கள் பேசும்போது திமுக அமைச்சர்கள் குறுக்கிடு செய்யவேண்டாம் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

 மின்னம்பலம் : நடைபெற்றுவரும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ,க்கள் பேசும்போது திமுக அமைச்சர்கள் குறுக்கிடு செய்யவேண்டாம் என்று சட்டசபையிலேயே உத்தரவு போட்டுள்ளார் முதல்வர்.
ஆகஸ்ட் 24ஆம் தேதி, ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை மானிய கோரிக்கை நடைபெற்றத. இதில் இரு துறைக்கும் அமைச்சர்களான கே.என்.நேரு மற்றும் பெரியகருப்பன் பேசி எதிர்க்கட்சியினர் கேள்விகளுக்குப் பதில் கொடுத்தனர்.
கடந்த காலங்களில் துறை ரீதியான மானிய கோரிக்கையின் போது எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் விவாதம் செய்யாத, அளவுக்குக் கூச்சல் குழப்பம் செய்து உரிமையை மறுப்பார்கள். இதுதான் நடைபெற்று வந்தது.
உதாரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நடைபெற்ற ஆட்சியில், மானிய கோரிக்கையின் போது திமுக எம்.எல்.ஏ.க்கள் விவாதத்தைத் துவங்கும்போது, பெஞ்சைத் தட்டி சத்தம் போட்டுப் பேசுவதை மறிப்பார்கள் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள். இதை சம்பந்தப்பட்ட அமைச்சரும் கண்டுகொள்ளாமல் படித்துக்கொண்டிருப்பார். அந்த கோபத்தில் பலமுறை வெளிநடப்பு செய்தது உண்டு திமுக எம்.எல்.ஏ.க்கள்.

அதுபோன்ற செயல்கள் இனிவரும் காலங்களில் இருக்கக்கூடாது என்று முடிவு செய்த முதல்வர், சட்டமன்றம் கூடுவதற்கு முன்பே அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் ஒரு உத்தரவு போட்டிருந்தார்.

”சட்டமன்றத்தில் எதிர்க் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேசும்போது, நீங்கள் யாரும் கூச்சல் குழப்பம் செய்யக்கூடாது. சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் எதிர்க்கட்சியினர் கேள்விகளுக்குத் தெளிவான பதில் கொடுக்கவேண்டும்”என்பதுதான் அந்த உத்தரவு.

ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மானியத்தின் மீதான விவாதத்தில், திமுக எம்.எல்.ஏக்கள் உட்பட எட்டு எம்.எல்.ஏ.க்கள் பேசினார்கள். அதில் அதிமுக எம்.எல்.ஏவும் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சருமான வேலுமணி பேசும்போது, “எங்கள் ஆட்சியில் துவக்கப்பட்ட திட்டங்கள் நிறுத்தப்படுகிறது. அம்மா உணவகங்கள் தொடரவேண்டும், கோவையில் பல திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது” என்று பேசும்போது, அமைச்சர் நேரு குறுக்கிட்டு பேசத் துவங்கியதும், முதல்வர் ஸ்டாலின் தனது கை அசைவால் உட்காரச் சொன்னார். உடனே அமைச்சர் நேருவும் முடிவில் சரியான பதில் தருகிறேன் என்று அமர்ந்துவிட்டார்.

சிறிது நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் மைக் பிடித்து, “எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேசும்போது, அமைச்சர்கள் குறுக்கிட்டுப் பேசவேண்டாம். அவர்களை முழுமையாக பேசவிடுங்கள். கடைசியாக விளக்கம் சொல்லுங்கள்” என்றபோது, அதிமுக எம்.எல்.ஏ,கள் அனைவரும் திகைத்துப் போய்விட்டார்கள்.

சட்டமன்றத்தில் முதல்வர் வெளிப்படையாகப் பேசியதை அதிமுக மட்டும் அல்ல பாஜக உறுப்பினர்களும் பாராட்டியிருக்கிறார்கள்.

-வணங்காமுடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக