ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்

 மின்னம்பலம் : தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக வாகை சந்திரசேகரை நியமனம் செய்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஒன்றிய அரசின் அமைப்பான சங்கீத நாடக அகாடமியின் நோக்கங்களை மாநில அளவில் செயல்படுத்துவதற்காகவும்,
தொன்மை வாய்ந்த தமிழகக் கலைகளைப் போற்றி, பேணிப் பாதுகாத்து வளர்க்கவும், கலைமாமணி விருது வழங்குதல், நலிந்த நிலையில் வாழும் கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்குதல்,
புகழ்பெற்ற மறைந்த கலைஞர்களின் குடும்பங்களுக்கு குடும்பப் பராமரிப்பு நிதியுதவி வழங்குதல், மாநிலங்களிடையே கலைக் குழுக்களைப் பரிமாற்றம் செய்தல் போன்ற பல்வேறு பணிகளைத் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் செய்து வருகிறது.
இம்மன்றத்தின் தலைவராக உள்ள இசையமைப்பாளர் தேவாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் அதன் புதிய தலைவராக வாகை சந்திரசேகரை நியமனம் செய்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளதோடு,


தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் தலைவர் பொறுப்பையும் வாகை சந்திரசேகர் வகிப்பார் என அறிவித்துள்ளார்.

நடிகராகவும் அரசியல்வாதியாகவும் வலம் வரும் வாகை சந்திரசேகர் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2016 முதல் 2021 வரை வேளச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

இவர் தனது நடிப்புத் திறமைக்காக 1991 ஆம் ஆண்டு, “கலைமாமணி விருது’’ பெற்றார்.

2003 ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் வழங்கப்படும் சிறந்த நடிகருக்கான “தேசிய விருது’’ பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக