செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

கொடநாடு கொலை சட்டமன்ற விவாதம்: எடப்பாடி எதிர்க்கும் மர்மம்!

 மின்னம்பலம் : கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை நேற்று (ஆகஸ்டு 23) கவன ஈர்ப்புத் தீர்மானத்தை சபாநாயகரிடம் கொடுத்திருக்கிறார்.
கொடநாட்டில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த கொலை, மற்றும் முக்கிய ஆவணங்கள் கொள்ளை வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அது தொடர்பான கூடுதல் விசாரணை செய்ய தற்போதைய திமுக அரசு முடிவு செய்திருக்கிறது.
இந்நிலையில்தான் ஆகஸ்டு 18 அன்று சட்டமன்றத்தில் அதிமுக சார்பாக கொடநாட்டு எஸ்டேட் பிரச்சினையை எழுப்பினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. இதுபற்றி முன்னரே அனுமதி பெற்று பேசவேண்டும் என்று சபாநாயகர் சொன்னபோது,
அதை மறுத்து வெளிநடப்பு செய்தார். வெளியே வந்து, “கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் என்னையும் சேர்க்க சதி நடக்கிறது” என்று குற்றம் சாட்டினார் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக ஆகஸ்டு 19 ஆம் தேதி ஆளுநரையும் சந்தித்தார்.

இந்த நிலையில்தான் அதிமுக எதிர்பாராத இடத்தில் இருந்து ஒரு ஈட்டி பாய்ந்து வந்தது. “கொடநாடு எஸ்டேட் விவகாரம் பற்றி சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவருவேன்’ என்று ஆகஸ்டு 20 ஆம் தேதி தமிழக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப் பெருந்தகை கூற அது அரசியல் அரங்கில் பற்றிக் கொண்டது.

பொதுவாகவே சட்டமன்றத்தில் பல கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் சட்டமன்ற உறுப்பினர்களால் கொண்டுவரப்படும். அது தொடர்பான சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்படும். அதை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளலலாமா வேண்டாமா என்பது பற்றி அரசுத் தரப்புடன் ஆலோசித்து ஏழு நாட்களுக்குள் சபாநாயகர் முடிவெடுப்பார். இதுதான் சபை நடைமுறை.

இந்த நிலையில் செல்வப்பெருந்தகையின் அறிவிப்பு அதிமுக வட்டாரத்துக்குள் சலசலப்புகளை ஏற்படுத்தியது. ஏன் இந்த விவகாரத்துக்குள் செல்வப் பெருந்தகை உள்ளே வருகிறார் என்று ஆலோசித்த அதிமுக தலைவர்கள் தங்கள் வழக்கறிஞரான இன்பதுரையிடம் செல்வப் பெருந்தகை மேலுள்ள வழக்குகள் பற்றிக் கேட்டிருக்கிறார்ககள். அந்த விவரங்களை தயார் செய்ய சொல்லியிருக்கிறார்கள்.

நேற்று காலை சட்டமன்றம் தொடங்குவதற்கு முன்பு காலை எட்டுமணியளவிலேயே அமைச்சர் ஜெயக்குமார் ஃப்ரஷ்ஷான தோற்றத்தில் தனது பட்டினப்பாக்கம் வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். கூடவே இன்பதுரையும் இருந்தார்.

“அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக கொடநாடு பிரச்சினையை கருத முடியாது. நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகள் பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று விதிகளில் இருக்கிறது. எனவே இப்போது இந்த விவகாரத்தை சட்டமன்றத்தில் விவாதிக்கக் கூடாது. இதனால் எதிர்கட்சித் தலைவரை லாக் செய்கிறார்கள், மன ரீதியாக துன்பத்துக்கு உள்ளாக்குகிறாரக்ள்” என்றெல்லாம் அரசியல் ரீதியாக விளக்கினார் ஜெயக்குமார். அவரை அடுத்துப் பேசிய இன்பதுரை, “செல்வப் பெருந்தகை மீதுள்ள பழைய வழக்குகளை எல்லாம் பட்டியலிட்டு இவற்றையும் சட்டமன்றத்தில் விவாதிக்கலாமா?” என்று பர்சனல் அட்டாக்கிலும் இறங்கினார். இதன் மூலம் அதிமுக இந்த விஷயத்தில் எவ்வளவு பதற்றமாக இருக்கிறது என்பதைக் காட்டியது.

சட்டமன்றத்தில் எத்தனையோ விவாதங்கள் நடந்திருக்கின்றன. இந்த நிலையில் கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை பற்றிய விவாதத்தை ஏன் அதிமுக தவிர்க்க விரும்புகிறது? ஏன் அதைத் தடுக்கிறது?

அதிமுக, திமுக என சில சீனியர்களிடம் விசாரித்தோம்.

“எடப்பாடி பழனிசாமி போலீஸ் துறை அமைச்சராக முதலமைச்சராக பதவி வகித்தவர். இப்படிப்பட்ட குற்றவியல் வழக்குகள் பற்றி சட்டமன்றத்தில் விவாதம் நடந்தால் என்ன ஆகும் என்பது அவருக்குத் தெரியும்.

இந்த விஷயத்தில் அவராகவே வந்து சட்டமன்றத்தில் சிக்கிக் கொண்டார். ஆகஸ்டு 18 ஆம் தேதி அவர்தான் இப்பிரச்சினையை முதலில் சட்டமன்றத்தில் எழுப்பினார். வழக்கில் தொடர்புடைய சயான், காவலாளி கிருஷ்ண பகதூர், மேனேஜர் நடராஜன் உள்ளிட்டோரது வாக்குமூலங்கள் பற்றி பல தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இந்த பிரச்சினையை சட்டமன்றத்தில் விவாதமாக்கினால் காவல்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் அதற்கு பதில் சொல்ல வேண்டும். அப்படி பதில் சொல்லும்போது கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தைக் குறிப்பிட்டு அதில் கடந்த காலத்தில் விசாரணைகளில் ஏற்பட்ட ஓட்டைகளை உடைத்து தற்போது கூடுதல் விசாரணைக்கு ஏற்பட்டிருக்கும் தேவை பற்றி முதல்வர் விரிவாக எடுத்துச் சொல்லுவார். சாட்சிகள் பற்றியும் அவர் விரிவாக பதிவு செய்வார். இது அத்தனையும் சட்டமன்றப் பதிவேட்டில் பதிவாகும். இது எடப்பாடி பழனிசாமிக்கு உட்கட்சி ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும்,சட்ட ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் கடுமையான சிக்கலை ஏற்படுத்தும். இதனால்தான் இந்த விவகாரம் சட்டமன்றத்தில் விவாதத்துக்கு வருவதை எப்படியாவது தடுக்க முயல்கிறது அதிமுக. ஆனால் திமுகவோ இதை சட்டமன்றத்தில் ஆவணமாக்கியே தீருவது என்ற முடிவோடு இருக்கிறார்கள் “என்கிறார்கள்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக