ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

நடிகர் வடிவேலு டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக வருகிறார் புதிய சேனலில் ஆட்டம் ஆரம்பம்

நகைச்சுவை நடிகர் வடிவேலு

  Mohana Priya S -  /tamil.filmibeat.com :  சென்னை : தமிழ் சினிமாவில் தனக்கென அழுத்தமான இடத்தை பிடித்து வைத்துள்ளார் வைகைப்புயல் வடிவேலு. இவரது நகைச்சுவையை ரசிக்காதவர்களே இருக்க முடியாது எனலாம். மீம்களில் கூட வடிவேலு மற்றும் அவரது வசனங்கள் இல்லாமல் வரும் மீம்கள் மிக மிகக் குறைவு தான்.
ராஜ்கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் சினிமா பயணத்தை துவக்கிய வடிவேலு, ஏராளமான படங்களில் தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சவை நடிகராக வளர்ந்துள்ளார். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். ஆனால் பல்வேறு சர்ச்சைகளால் கடந்த 10 ஆண்டுகளாக எந்த சினிமாவிலும் நடிக்காத நிலையில் உள்ளார் வடிவேலு.
இம்சை அரசன் 23 ம் புலிகேசி படத்தின் அடுத்த பாகமாக இம்சை அரசன் 24 ம் புலிகேசி படத்தை தயாரிக்க டைரக்டர் ஷங்கர் முடிவு செய்தார். இந்த படத்தின் போது ஏற்பட்ட பிரச்னையால் வடிவேலு, இம்சை அரசன் 24 ம் புலிகேசி படத்தில் இருந்து பாதியிலேயே விலகினார். இதனால் வடிவேலுவிற்கு ரெட் கார்டு போடும் அளவிற்கு போனார் ஷங்கர்.



ஷங்கர் - வடிவேலு இடையேயான பிரச்சனை காரணமாக இம்சை அரசன் 24 ம் புலிகேசி படமும் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு ஒரு படத்தில் நடிக்க மீண்டும் ஒப்பந்தமாகி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் அதற்கு பிறகு அது பற்றிய எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் சில ஓடிடி தளங்களும் வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இதனை வடிவேலும் சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒப்புக் கொண்டார். இதற்கிடையில் நகைச்சவை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வடிவேலு ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல தெலுங்கு ஓடிடி தளமான ஆஹா தான் வடிவேலுவை நிகழ்ச்சி தொகுப்பாளராக ரீ என்ட்ரி கொடுக்க வைக்க போகிறதாம். ஆஹா ஓடிடி தளம், நகைச்சுவை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் சினிமாக்களை வழங்கி வருகிறது. இந்த ஓடிடி தளம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனுக்கு சொந்தமானது.

ஆஹா, விரைவில் தமிழில் ஒரு புதிய சேனலை துவங்க உள்ளதாம். இதற்கான பணிகள் நடந்து வருகிறதாம். மிக விரைவில் இந்த சேனல் துவங்கப்பட உள்ளதாம். இந்த புதிய சேனலில் நகைச்சுவை நிகழ்ச்சி தொகுப்பாளராக வடிவேலுவை அறிமுகப்படுத்த தான் ஆஹா நிர்வாகம் முயற்சித்து வருகிறது.

பல முறை வடிவேலுவிடம் பேசி, சம்மதிக்க வைத்துள்ளனராம். இது வடிவேலுவிற்கும் அவரது ரசிகர்களுக்கும் புதிய அனுபவமாக இருக்கும், நல்ல வரவேற்பும் கிடைக்கும் என ஆஹா நினைக்கிறது. விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.

ஏற்கனவே விஜய் டிவி.,யில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வருகிறார். அவரைத் தொடர்ந்து சன் டிவி.,யில் விஜய் சேதுபதி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில் நகைச்சுவை நிகழ்ச்சி தொகுப்பாளராக வடிவேலுவும் களமிறங்க உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக