வியாழன், 26 ஆகஸ்ட், 2021

கே.டி. ராகவன் - அண்ணாமலை மீது மதன் ரவிச்சந்திரன் அடுக்கும் புகார்கள் - புதிய ஆடியோ வெளியீடு

BBC - tamil : தமிழ்நாடு  பா.ஜ.கவின் தலைவர் கே. அண்ணாமலையின் ஒப்புதலுடன்தான் கே.டி. ராகவன் குறித்த சர்ச்சைக்குரிய வீடியோவை, தான் வெளியிட்டதாக யூ டியூபர் மதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலையுடன் பேசியபோது தான் பதிவு செய்ததாகக் கூறி சில ஆடியோ பதிவுகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை பா.ஜ.கவின் மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை மதன் ரவிச்சந்திரன் என்ற யூடியூபர் தனது 'மதன் டைரி' என்ற சேனலில் வெளியிட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்ததையடுத்து, கே.டி. ராகவன் தனது கட்சிப் பதவியை விட்டு விலகினார்.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்க கட்சி அளவில் குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டார். அதில், தன்னை சந்தித்த மதனிடம் வீடியோக்களை காண்பித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லிய பிறகும் மதன் அவற்றை வெளியிட்டுவிட்டதாக கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை மதன் ரவிச்சந்திரன் மற்றும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் வெண்பா என்ற பெண் பா.ஜ.கவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாஜக தமிழக மேலிடம் அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய வீடியோவை அண்ணாமலையின் ஒப்புதலுடனேயே வெளியிட்டதாக யூடியூபர் மதன் தெரிவித்திருக்கிறார். அதற்கு ஆதாரமாக தானும் அண்ணாமலையும் பேசியதாகக் கூறும் குரல் பதிவுகளை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
 
இந்தக் குரல் அண்ணாமலையுடையதுதானா என்பதை பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.

அதில், "நான் ஒரு வாய்ப்பை உங்களுக்கு உருவாக்கித் தருகிறேன். பெரும்பாலும் டெல்லியில் ஏற்பாடு செய்து தருகிறேன். நீங்கள் இதை (வீடியோவை) அங்கே காட்டவேண்டும். முக்கியமானவர்களிடம் இதைக் காட்ட வேண்டும். இதுபோன்ற மிக மோசமான நபர்கள் நீக்கப்பட வேண்டும் என்பதை புரிய வைப்போம்" என ஒருவர் பேசுவது கேட்கிறது. இது அண்ணாமலையின் குரல் என்கிறார் மதன் ரவிச்சந்திரன்.

மேலும், "நாடு, கட்சி, தனி நபர்கள் போன்றவற்றைக் காப்பாற்ற வேண்டும் என்ற பரந்த நோக்கத்திற்காக இதைச் செய்ய வேண்டும். கட்சியைக்கூட விடுங்கள். உங்களுக்கு பா.ஜ.க பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், நாடு மிக முக்கியம். இந்த வீடியோக்களை வைத்து பரபரப்பை ஏற்படுத்தினால், மதன் ரவிச்சந்திரன் என்ற பிராண்ட் நிற்கும். ஆனால், 15 மிகப் பெரிய எதிரிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். ஏனென்றால், இவற்றை வெளியிடுவதன் மூலம் ஒரு மனிதனின் அரசியல் வாழ்வையே அறுத்து எறிகிறோம்.

30-40 ஆண்டுகளாக அவர்கள் உருவாக்கிய அரசியல் வாழ்க்கையை அறுத்து எறிகிறோம். ஆதனால், அவர்கள் எதிரிகளாகி விடுவார்கள். அப்படிச் செய்தால் அதில் உடனடியாக நீதி கிடைக்கும். எறும்புப் புற்றில் மருந்தடிப்பதைப் போல. ஆனால், உங்களுக்கு இதில் சங்கடம் வரக்கூடாது என நினைத்தால், ஆறு மாதம் காத்திருக்கலாம்" என்கிறது அந்தக் குரல் பதிவு.
உத்தரவாதம் கொடுத்த அண்ணாமலை

இந்த வீடியோக்களை வெளியிட்டால் எனக்கு வேலை போய்விடும் என்று மதன் ரவிச்சந்திரன் சொன்னபோது, "கண்டிப்பாக உங்களை வேலையை விட்டு தூக்க மாட்டார்கள். நானே (பத்திரிகையின் உரிமையாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு) சந்தித்துப் பேசினேன். எதுவும் கமலாலயத்தில் நடக்கவில்லையா, தலைவர்கள் தப்பு செய்யவில்லையா என்று கேட்டார்கள். அதை நான் சொல்ல முடியாது, அது என் வேலையில்லை என்றேன்." என அந்தக் குரல் குறிப்பிடுகிறது.

வாட்ஸ்அப்பில் மட்டுமல்லாமல் நேரில் பேசும்போதும் "போட்டு விடுங்க" என்றும் கட்சியைச் சேர்ந்த பெண்ணுக்கு நீதி வேண்டும் என்றும் அண்ணாமலை கூறியதாக மதன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

"நான் தலைவனான பிறகு கட்சித் தலைவர் அறையின் கதவை கண்ணாடிக் கதவாக மாற்றி விட்டேன். இந்த அறைக்குள் என்னென்னவோ நடக்கிறது. இப்போது உள்ளே நுழையும் யாரும் தலைவரைப் பார்க்கலாம். நான் என் அறைக்கு எந்தப் பெண்ணையம் தனியாக நுழைய அனுமதிப்பதில்லை. குஷ்பு உள்பட யாராக இருந்தாலும் சரி. ஒரு சிறிய புரட்சியை செய்துள்ளேன்" என அண்ணாமலை பேசியதாகவும் ஒரு குரல் பதிவு அதில் இடம்பெற்றுள்ளது.

அவர்கள் எனக்கு ஆதரவாக இருப்பதாக சொல்லி என் வாழ்க்கையை நடு ரோட்டுக்குக் கொண்டு வந்து விட்டார்கள் என்றும் தன் வேலையும் அதனால் போய் விட்டதாகவும் மதன் ரவிச்சந்திரன் அந்த வீடியோவில் குறிப்பிடுகிறார்.

மேலும், இந்த வீடியோக்கள் குறித்துப் பேசும்போது, "நீங்க கொஞ்சம் பாதுகாப்பாக இருங்க. அவர்கள் ஈவு இரக்கமின்றி (ruthless) இருப்பார்கள். ரொம்ப எக்ஸ்போஸ் ஆகிவிடாதீர்கள். எனக்கு தமிழ்நாட்டில் யாரும் ஆர்டர் போட முடியாது. அதை அமித் ஷா தெளிவுபடுத்தி விட்டார். நான் தலைவராக இருக்கும்போது ஏதும் நடக்காது" என்று சொல்லும் குரல் பதிவு ஒன்றும் இதில் இடம்பெற்றுள்ளது.

தன்னுடைய பெயரில் வெளி வந்த அறிக்கையை தான் எழுதவில்லையென்றும் வெறும் கையெழுத்துமட்டுமே போட்டதாகவும் அண்ணாமலை தன்னிடம் கூறியதாக மதன் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

மேலும் முதலில் வீடியோக்களை வெளியிடுங்கள் என்றும் பிறகு வெளியியிடாதீர்கள் என்றும் பிறகு மீண்டும் வெளியிடுங்கள் என்றும் மாற்றி மாற்றி அண்ணாமலை தன்னிடம் பேசியதாகவும் மதன் ரவிச்சந்திரன் கூறியிருக்கிறார்.
பேரம் பேசினாரா அண்ணாமலை?
பாஜக மூத்த தலைவர் பி.எல். சந்தோஷுடன் மாநில பாஜக தலைவர் கே. அண்ணாமலை

இந்த வீடியோக்களை முன்வைத்து அண்ணாமலை தன்னிடம் பேரம் பேசியதாகவும் மதன் ரவிச்சந்திரன் கூறியிருக்கிறார்.
அதற்கு சாட்சியமாக வெளியிட்ட குரல் பதிவில், "தமிழ்நாட்டில் யாரும் செய்யாததைச் செய்திருக்கிறீர்கள். நீங்கள் மாவட்ட செயலாளரானால், உங்களுக்கு்க கீழே பத்து பேர் இருப்பான். 2026ல் எம்.எல்.ஏவாக நிற்பீர்கள். ஆனால், நாளை காலையே ஏதும் நடந்து விடாது. 5 வருடத் திட்டமாக இது இருக்க வேண்டும். மாநில அளவில் பொறுப்புக் கொடுத்து விடுகிறேன். இலக்கியப் பிரிவு என்ற ஒன்றை உருவாக்கிவிடலாம். என்ன செய்ய வேண்டுமென சொல்லுங்கள். செய்யலாம். இதைவிட வேறு என்ன சொல்ல முடியும்" என்கிறது அந்தக் குரல்.

மேலும், "(ஊடகத் தொடர்பாளர்) பிரசாத்தின் விலகல் கடிதம் என் டேபிளில் இருக்கிறது. எப்போதோ அவரைத் தூக்கியாகிவிட்டது. என்னைப் பற்றி தமிழிசை மேடத்திடம் தப்பாகச் சொல்லி, கீழே விழுந்து கால் உடைந்து ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறார். நீண்ட காலத்திற்கு முன்பே ராஜிநாமா வாங்கி விட்டேன்" என்கிறது அந்தக் குரல் பதிவு.

அண்ணாமலைதான் அந்த வீடியோவைப் போடச் சொன்னார். இளம் தலைவராக இருக்கிறாரே என்று நம்பி அதில் இறங்கினேன். இப்போது மறுக்கிறார் என்றும் மதன் ரவிச்சந்திரன் குற்றம்சாட்டுகிறார்.

இதற்குப் பிறகு, மதன் ரவிச்சந்திரனுடன் சேர்ந்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட வெண்பா என்ற பெண் பேசும்போது. "சம்பந்தப்பட்ட பெண்களுக்கு ஏதாவது ஆனால், அதற்கு அண்ணாமலை மட்டும்தான் காரணம். சம்பந்தப்பட்டவர்களை அழைத்து நடவடிக்கை எடுக்கச் சொன்னால், வீடியோவை போடும்படி சொன்னது அண்ணாமலைதான். சம்பந்தப்பட்ட பெண்களுக்கு ஏதாவது ஏற்பட்டால் நீங்கள்தான் பொறப்பு" என்றும் குறிப்பிட்டார்.
மேலும் ஒரு சர்ச்சை ஆடியோ
இதேவேளை, பா.ஜ.கவின் மாவட்டத் தலைவி என ஒருவர் தொலைபேசியில் பேசும் பதிவும் இந்த வீடியோவின் முடிவில் இடம்பெற்றிருக்கிறது. அதில் இருக்கும் தகவல்கள் பொது வெளியில் எழுதத் தக்கவையாக இல்லை.

இந்த விவகாரம் மீண்டும் வெடித்திருக்கும் நிலையில் இது தொடர்பாக பா.ஜ.க. எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக