ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

பெப்சி அமைப்புக்கு முடிவுகட்டிய தயாரிப்பாளர்கள் சங்கம்!

மின்னம்பலம் : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று 40 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்திருப்பவர் நடிகர் சிலம்பரசன்.
இவர் நாயகனாக நடித்து வெளியான திரைப்படங்களின் படப்பிடிப்பு, படம் வெளியீடு, சம்பள பஞ்சாயத்து என ஏதாவது ஒன்று இல்லாமல் இருந்தது இல்லை.   
 படப்பிடிப்புக்கு நேரம் தவறி வருவது அல்லது வராமல் இருந்து கொள்வது போன்ற காரணங்களால் தமிழ்சினிமா தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
இவற்றை எல்லாம் தெரிந்துகொண்ட பின்னரும் சிலம்பரசன் நடிக்கும் படங்களை தயாரிப்பது ஏன் என்கிற கேள்விகளை எழுப்புகிற போது, கதாநாயகன் பஞ்சம்தான் காரணம் என்கின்றனர் தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில். இவரை வைத்து படம் தயாரித்த பல தயாரிப்பாளர்கள் இப்போது சினிமாவிலேயே இல்லை என்கின்றனர்.நீண்ட நாட்களாக படங்கள் எதுவும் இன்றி வீட்டில் முடங்கிகிடந்த சிலம்பரசன் மாநாடு படம் மூலம் தமிழ் சினிமாவில் மறுபிரவேசத்திற்கு தயாரானார். அதனைத் தொடர்ந்து பல்வேறு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் சிலம்பரசன். அதில் கௌதம்மேனன் இயக்கத்தில் வேல்ஸ்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும்" வெந்து தணிந்தது காடு" படமும் ஒன்று.

சிலம்பரசன் தனது முந்தைய படங்களின் மூலம் ஏற்பட்ட நஷ்டம், தயாரிப்பாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொகை இவைகளை செட்டில் செய்தபின்னரே வெந்து தணிந்தது காடு படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படும். அதன்பின்னரே பெப்சி தொழிலாளர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் பெப்சி அமைப்புக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

குறைந்தபட்சம் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பிரச்சினையில் தீர்வு எட்டப்படவேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் சிலம்பரசன் தரப்புக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. அது சம்பந்தமான பேச்சுவார்த்தையில் தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, உஷாராஜேந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர். வழக்கம்போல வீட்டிற்கு சென்று சிம்புவிடம் பேசி விட்டு முடிவு கூறுகிறேன் என உஷா ராஜேந்தர் கூறி சென்றுள்ளார்.

இதற்கு பின் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.. பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணிக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். வருடந்தோறும் பெப்சி தொழிலாளர்கள் குழந்தைகள் கல்வி பயில 40 என்ஜினியரிங் இடங்கள், கொரோனா காலத்தில் பெப்சி அமைப்புக்கு லட்சக்கணக்கில் நிதியுதவி கொடுத்துள்ளதை சுட்டிக்காட்டிய ஐசரி கணேஷ், ஏற்கனவே ஏற்பாடு செய்துவிட்டதால் படப்பிடிப்பு நடைபெறாவிட்டால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும் என புலம்பியுள்ளார்.

அடிப்படையில் ஐசரி கணேஷ், ஆர்.கே.செல்வமணி இருவரும் அதிமுக ஆதரவாளர்கள் என்பதால் தயாரிப்பாளர்கள் சங்க முடிவுக்கு எதிராக ஆகஸ்ட் 6 அன்று சிலம்பரசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் பங்கேற்க அனுமதி வழங்கினார் ஆர்.கே.செல்வமணி. தயாரிப்பாளர்கள் சங்கத்தை சமாதானப்படுத்தும் வகையில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய 1 கோடி ரூபாய் பணத்தை சிலம்பரசன் தரப்பில் இருந்து கொடுக்க செய்தனர்.

படத்தின் இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்புக்கு போவதற்கு முன் சிலம்பரசன் சம்பந்தபட்ட அனைத்து பிரச்சினைகளும் பேசி முடிக்கப்படும் என உறுதி வழங்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளரின் படப்பிடிப்பு தடைபட கூடாது என கருதி சிலம்பரசன் படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பெப்சி அமைப்பின் செயல்களை தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளால் ஏற்க முடியவில்லை.

இதன் காரணமாக நேற்று மாலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாக குழு, செயற்குழு கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டது பெப்சி அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை காட்டிலும் அந்த அமைப்புடனான அனைத்து தொழில்ரீதியான தொடர்புகளை துண்டித்துக்கொள்வது என்கிற தீர்மானத்தை பெரும்பான்மையான நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆதரித்ததால் தீர்மானம் நிறைவேற்றபட்டது.

அதேபோன்று படப்பிடிப்புகளில் பெப்சி தொழிலாளர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டையும் தயாரிப்பாளர்கள் சங்கம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது தயாரிப்பாளர்களுக்கு கட்டுப்படியான சம்பளத்தில் பணியாற்ற கூடிய தொழிலாளர்களை படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த பெப்சி அமைப்பின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டியுள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம்.

-இராமானுஜம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக