வியாழன், 12 ஆகஸ்ட், 2021

ஒன்றிய அரசின் ஒட்டச் சுரண்டலை அம்பலமாக்கிய வெள்ளை அறிக்கை...

May be an image of 2 people and text that says 'ஒன்றிய அரசின் ஒட்டச் சுரண்டலை வெட்ட வெளிச்சமாக்கிய வெள்ளை அறிக்கை...'
கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் இருக்கிறார்கள்" - சி.பி. எம். கனகராஜ் குற்றச்சாட்டு! | nakkheeran
கனகராஜ் சி பி எம்

Kanagaraj Karuppaiah   :  ஒன்றிய அரசின் ஒட்டச் சுரண்டலை வெட்ட வெளிச்சமாக்கிய வெள்ளை அறிக்கை...
தமிழ்நாடு அரசு நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் 9.8.21 அன்று வெளியிட்டுள்ளார். அறிக்கையிலுள்ள விபரங்கள் எதுவும் புதியதல்ல. ஆனால், மொத்தமாக தொகுத்துப் பார்க்கும் போது தமிழக நிதிநிலையின் திசைவழியைப் புரிந்து கொள்ள முடிகிறது.
வெள்ளை அறிக்கை என்பது புதிதல்ல. பொதுவாக, நிதிநிலை அறிக்கைக்கு முன்பாக ஒன்றிய அரசாங்கம், பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடுவதைப் போன்றதுதான். மாநிலங்கள் வழக்கமாக இதைச் செய்வதில்லை. ஆனால், கடந்த காலங்களில் பல மாநிலங்கள் தமிழகம் உட்பட வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கின்றன.
இந்த வெள்ளை அறிக்கையை முன்வைத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.



தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பதற்காகத்தான் திமுக இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது என்பது அதிமுக மற்றும் பாஜகவின் முனைப்பான வாதங்கள்.
வெள்ளை அறிக்கையின் இறுதிப் பகுதியில் இது தேர்தல் அறிக்கையை அமல்படுத்துவதிலிருந்து விலகிச் செல்வதற்கான சாக்கு அல்ல என்று நிதியமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதை முன்வைத்து மின்சாரம், போக்குவரத்து, மோட்டார் வாகனம், குடிநீர், சொத்து வரி ஆகியவற்றை உயர்த்தப் போகிறார்கள் என்று ஒரு பகுதி வாதிடுகிறது.

இதுதான் சரியான தருணம், நட்டத்தில் இயங்கும் மின்சாரம், போக்குவரத்து இவற்றையெல்லாம் தனியார்மயமாக்கி விடுங்கள் என்று ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது.
இன்னொரு கூட்டம் இந்த எல்லாவற்றையும் வெறும் எண்ணிக்கையாக மட்டும் பார்த்து இந்த எண்ணிக்கையை எப்படி நேர்படுத்துவது என்பதைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருக்கிறது.
ஆனால், இந்த அறிக்கையிலுள்ள மிக முக்கியமான பகுதி பலராலும் கண்டு கொள்ளப்படாமலும், விவாதிக்கப்படாமலும் லாவகமாக கடந்து செல்லப்படுகின்றன.

அது ஒன்றிய அரசிடமிருந்து மாநிலங்கள் பெறும் வரி வருவாய் குறைக்கப்பட்டிருப்பதும், வரிப் பங்கீட்டில் பல்வேறு தந்திரங்களின் மூலம் மாநில அரசுகளின் பங்கை ஒன்றிய அரசு சுரண்டித் திண்பதும் என்பதே.
இன்னொரு அம்சத்தையும் வெள்ளை அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது. அதாவது ஒன்றிய அரசாங்கம் கார்ப்பரேட் வரியை 30%லிருந்து 22% ஆக குறைத்ததன் காரணமாக ஒன்றிய அரசுக்கு 1,45,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக மாநிலங்களின் பங்கும் பறிபோயிருக்கிறது.
அதாவது, இந்த 1,45,000 கோடி ரூபாயில் மாநிலங்களின் பங்கு 41% (59,450 கோடி) ஆகும். இந்தத் தொகையில் தமிழகத்தின் பங்கு 2425 கோடி ரூபாய். இது கார்ப்பரேட்டுகளின் வருமானம் இதே நிலையில்தான் இருக்கும் என்றால் கூட ஆண்டுக்காண்டு இந்தத் தொகை தமிழகத்துக்கு மறுக்கப்படுவதாக அமையும் (மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய அரசின் கார்ப்பரேட் காதல் எந்த அளவிற்கு பொங்கி வழிகிறது என்றால் தனிநபர் வரி கட்டுவோர் 10 லட்சத்துக்கு மேல் பெறுகிற தொகைக்கு 30 சதவிகிதம் வரி கட்ட வேண்டும். ஆனால், கார்ப்பரேட் நிறுவன வரி எத்தனை நூறு கோடியாகவே, ஆயிரம் கோடியாகவோ இருந்தாலும் 22 சதவிகிதம் கட்டினால் போதும்).

மேலும், 1. ஒன்றிய அரசு தான் ஒட்டுமொத்தமாக வசூலிக்கும் வரிகளை மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. 14வது நிதிக்குழு மாநிலங்களுக்கு 32 சதவிகிதத்திலிருந்து 42 சதவிகிதமாக உயர்த்திக் கொடுப்பதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறது. அதையே, மோடி சொல்லும் Co-Opearative Federalism என்கிற தங்கள் கொள்கையில் உறுதியாக இருப்பதாக சங்பரிவார் பீற்றித் திரிந்தது. ஆனால், இது ஒரு அப்பட்டமான ஏமாற்று வேலை என்பதை வெள்ளை அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.
மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) மத்திய வரிகளின் பங்கு ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்படுவதற்கு முன்பிருந்த 1.88 சதவிகிதம் என்பதிலிருந்து 2020-21 இல் 1.28 சதவிகிதமாக குறைந்துவிட்டது. அதாவது மூன்றில் ஒரு பங்கு குறைந்திருக்கிறது.
சதவிகிதம் குறைந்தாலும், கொடுக்கப்படும் ரூபாய் அதிகமாகியிருக்கிறது என்று கச்சை கட்டிக் கொண்டு வரக்கூடும். அதுவும் கூட ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதற்கு முந்தைய ஆண்டில் கொடுக்கப்பட்ட 24,537 கோடி ரூபாயோடு ஒப்பிட்டால் நான்கு ஆண்டுகள் கழித்து 24,906 கோடி ரூபாய்தான் தமிழகத்திற்கு கிடைத்திருக்கிறது. அதாவது நான்கு ஆண்டுகளில் பணமாக அதிகரித்த தொகை 373 கோடி ரூபாய் மட்டும்தான். அதாவது வெறும் 1.5 சதவிகிதம்தான்.


2. நிதிக்குழு கொஞ்சம் கொஞ்சமாக மாநிலங்களுக்கான பங்கை குறைத்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் 2011ம் ஆண்டு மக்கள் தொகையை ஒரு காரணியமாக எடுத்துக் கொண்டதன் மூலம், தமிழ்நாட்டின் பங்கு 4.969 சதவிகிதத்திலிருந்து 4.023 சதவிகிதமாக குறைந்துவிட்டது. அதாவது மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய நிதிப் பங்கில் நான்கில் ஒரு பங்கு வெட்டிச் சுருக்கப்பட்டுவிட்டது.

3. வஞ்சமாக ஒன்றிய அரசாங்கம் தனது நிதி வருவாயை பெருக்கிக் கொள்வதற்காக குறுக்கு வழியைக் கையாள்வது மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. 2011-12ம் ஆண்டில் மேல் வரி மற்றும் கூடுதல் வரி (CESS and SURCHARGE) 10.4 சதவிகிதமாக இருந்தது. 2019-20ம் ஆண்டில் இது 20.2 சதவிகிதமாக அதிகரித்துவிட்டது. அதாவது இந்தப் பணத்தில் ஒரு நயா பைசாவைக் கூட ஒன்றிய அரசாங்கம் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
உதாரணமாக, ஏப்ரல் 2017 இல் பெட்ரோல் மீதான கலால் வரி 9.4 ரூபாயாக இருந்தது. ஏப்ரல் 2020 இல் இது 1.4 ரூபாயாக குறைந்துவிட்டது. இதே காலத்தில் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள அவசியம் இல்லாத மேல் வரி மற்றும் கூடுதல் வரி 12 ரூபாயிலிருந்து 31.50 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. அதாவது 2017 ஏப்ரலில் பெட்ரோல் மீதான மொத்த வரி 21.48 ரூபாய். இதில் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய தொகை 9.48 ரூபாய். மாறாக ஏப்ரல் 2020 இல் பெட்ரோல் மீதான ஒன்றிய அரசின் மொத்த வரி 32.90 ரூபாய். ஆனால், மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய தொகை வெறும் 1.40 ரூபாய்.

4. மாநிலங்களின் மூலம் உள்ளாட்சிகளுக்கு செலவிடப்படும் நிதியையும் தான் குறிப்பிடும் பணிகளுக்குத்தான் செலவிடும் முறையிலும், அதில் மாநில அரசு ஒரு பகுதியை செலவிட்டால்தான் மீதமுள்ள நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கும் என்கிற நிலையையும் உருவாக்கிவிட்டது. மாநில அரசுகள் உள்ளாட்சிகளுக்கு வரும் நிதிகளை மாநிலத்தின் குறிப்பான சூழலுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ள முடியாது. தவிரவும் அந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொள்ள மாநில அரசு தனது நிதியிலிருந்து கூடுதலாக செலவு செய்ய வேண்டும்.
உதாரணத்திற்கு ஒரு குறிப்பிட்ட திட்டத்தின் மதிப்பீடு 100 கோடி என ஒன்றிய அரசாங்கம் ஒதுக்கீடு செய்யும். அந்த ஒதுக்கீட்டை பயன்படுத்துவதற்கு மாநில அரசு செலவழிக்க வேண்டிய தொகை மாநில அரசிடம் இல்லை என்றால் அந்தப் பணம் செலவழிக்கப்படாமல் பேப்பரில் மட்டுமே மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டதாக இருக்கும். இப்படி கொடுக்கப்படும் நிதிகளை டைடு பண்ட்ஸ் அதாவது இணைக்கப்பட்ட நிதி என்கிறார்கள். 14வது நிதிக்குழுவில் இப்படி இணைக்கப்பட்ட நிதியின் விகிதம் 40 சதவிகிதமாக இருந்தது. இதை 15வது நிதிக்குழு 50 சதவிகிதமாக மாற்றிவிட்டது. இதை சில வல்லுநர்கள் 57 சதவிகிதம் என்கிறார்கள். அதாவது ஒன்றிய அரசு ஒதுக்கும் நிதிகளில் 57 சதவிகிதம் குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே செலவிட முடியும். அதுவும் அந்த நிதியைச் செலவழிப்பதற்கு மாநில அரசுக்கு நிதி ஆதாரம் இருக்க வேண்டும்.

5. இது தவிர, ஒன்றிய அரசு சில திட்டங்களை அறிவித்துவிட்டு அந்தத் திட்டங்களில் தன்னுடைய பங்கை குறைத்துக் கொண்டே வருகிறது.
உதாரணமாக, எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கான +2வுக்கு பிந்தைய கல்வி உதவித் தொகை நீண்ட நெடுங்காலமாக 75 சதவிகிதத்தை ஒன்றிய அரசு கொடுத்து வந்தது. 25 சதவிகிதத்தை மட்டுமே மாநில அரசுகள் கொடுத்து வந்தன. மோடி ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு ஒன்றிய அரசுக்கு 60 சதவிகிதம், மாநில அரசுகளுக்கு 40 சதவிகிதம் என்று மாற்றப்பட்டுவிட்டது. அதையும் கூட ஒன்றிய அரசு முறையாக மாநில அரசுகளுக்குக் கொடுப்பதில்லை. இப்படி பல திட்டங்களில் ஒன்றிய அரசு தன்னுடைய பங்கை சுருக்கிக் கொண்டு மாநில அரசுகளின் மீது அடாவடித்தனமாக சுமையை ஏற்றி வருகிறது.
இதில் லேட்டஸ்ட் சுமைதான் பிரதம மந்திரி பயிர் பாதுகாப்பு திட்ட பிரீமியம் தொகை. சென்ற ஆண்டுக்கு முன்பு வரையிலும் இதற்கான பிரீமியம் தொகையில் 49 சதவிகிதம் ஒன்றிய அரசும், 49 சதவிகிதம் மாநில அரசும், 2 சதவிகிதம் விவசாயிகள் கட்டிக் கொண்டிருந்தார்கள். தற்போது இந்த விகிதம் பாசனப் பயிர்களுக்கு 25:73:2 என்றும், மானாவாரி பயிர்களுக்கு 30:68:2 என்றும் மாற்றப்பட்டிருக்கிறது. இந்த ஒரு மாற்றத்தினால் மட்டும் 2016-17ம் ஆண்டில் தமிழக அரசு செலுத்திய தொகை 566 கோடி ரூபாய் என்பதிலிருந்து 2020-21 இல்  1918 கோடி ரூபாயாக அதிகரித்துவிட்டது.
இப்போது அதிமுக அரசு இல்லை. ஆனாலும், ஒன்றிய பாஜக அரசின் இந்த அத்துமீறல்களும், ஒட்டச் சுரண்டலும் நிற்கப் போவதில்லை. எனவே, இதர மாநிலங்கள், ஜனநாய உள்ளம் கொண்டோர், தமிழக மக்கள் அனைவரையும் இணைத்து மாநிலங்களுக்கு உரிய பங்கை வழங்கு என்று வலுவாகக் குரல் எழுப்ப வேண்டியதை வெள்ளை அறிக்கை தெள்ளென முன்வைத்துள்ளது.
(...தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக