திங்கள், 23 ஆகஸ்ட், 2021

அகதிகளின் குடியுரிமை கோரிக்கையும் தாயகம் திரும்பியோரின் குடியுரிமை விடயமும்

 ந. சரவணன்  :  அகதிகளின் குடியுரிமை கோரிக்கையும் அடிப்படை புரிதலற்றவர்களின் பரப்புரையும்....
சமீபத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டில்  அசாதாரண நிலை உருவாகும்போது,
அங்கிருக்கும் மக்களில் தங்கள் நாட்டு மக்களும் இருப்பதை உணர்ந்த உலகின் பல நாடுகள், அந்தந்த நாட்டவர்களை  பாதுகாப்பாக தங்கள் நாட்டிற்கு அழைத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்தன,
அதில் நாடுகளின் தூதுவர்களாக இருந்தவர்கள், ராஜாங்க ரீதியான அதிகாரிகள், மற்றும் ஏதாவதொரு காரணத்தின் பொருட்டு ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு சென்றவர்கள் என அனைவரையும் உள்ளடக்கிய செயற்பாடாகவே இருந்தது.
பொதுவாக இயற்கை பேரிடர், கொரோனா பெருந்தொற்று  காலங்களிலும்கூட  தன் நாட்டு மக்களுக்காக உலக நாடுகள் இதுபோன்றதொரு ஏற்பாட்டை செய்தது,
அப்படியான ஏற்பாட்டை, இந்தியா இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போர் நடக்கும்போது செய்திருக்க வேண்டும்.
1964, மற்றும் 1974 ல் நடைப்பெற்ற இந்தியா இலங்கை ஆகிய இரண்டு நாட்டு ஒப்பந்தத்தின்படி இந்தியாவிற்கு நாடு திரும்ப வேண்டிய 6 இலட்சம் பேரில் 1983 வரை 4 இலட்சத்து 61 ஆயிரம் மட்டுமே நாடு திரும்பியிருந்தனர். போர் சூழல் காரணமாக அவர்களால் நாடு திரும்புவதற்கான நடைமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க முடியவில்லை. இந்திய தூதரகம் செல்வதோ,அதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அலுவலகம் செல்வதோ, இந்தியா வருவதற்கான அனுமதி மற்றும் பயண ஆவனங்களை பெறுவதோ என அனைத்திலும் சிக்கல் இருந்தது,அந்த நேரத்தில் இந்தியா தன் நாட்டு மக்கள் நாடு திரும்புதலில் உள்ள சிக்கலை தீர்க்க முன்வந்திருக்க வேண்டும், அதை செய்யவில்லை.

கூடவே இரண்டு நாட்டு ஒப்பந்தங்களும் முறையாக மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதற்கான போதிய வழிமுறைகளை செய்யவில்லை. இரு அரசுகளும் தங்களுக்கு மக்களை பங்குப்போட்டு கொண்டதுதான் நடந்ததே தவிர அம்மக்களிடம் அதுப்பற்றிய கருத்துக்கேட்போ அல்லது அதைப்பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்தவோ இல்லை. எனவே அவர்கள் போர் சூழலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள உயிர்பிழைக்க  முறையான அனுமதியின்றியும் மற்றும் சான்றுகளின்றியும் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தனர். அவர்களை முறையாக கையாளாமல், இரு நாட்டு ஒப்பந்தங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
அவர்கள் அனைவரும் தமிழகத்திலுள்ள பல்வேறு முகாம்களில் வசிக்கின்றனர்.

இலங்கையில் 1948 ல் குடியுரிமை பறிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி, இலங்கை நாட்டு பிரஜையாகவும் இல்லாமல், இந்திய நாட்டு பிரஜையாகவும் இல்லாமல் நாடற்றவர்களாக இருப்பவர்களே மேற்கூறியப்படி முகாமில் இருக்கும் இந்திய வம்சாவளியினர், முறையாக கையாளப்பெறாமல் ஒப்பந்தமே சரியாக முடித்து வைக்காததின் விழைவாக இப்படி நாடற்று இருப்பவர்களின் நிலைக்கு இந்தியாவே காரணம், ஏனெனில், இலங்கையில் வெவ்வேறு காலகட்டங்களில் நாடற்றவர்களாக இருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டு விட்டது. இன்னொருபடி மேலே போய், தமிழக முகாம்களிலுள்ள நாடற்றவர்கள் என இருப்பவர்களை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைத்து அடையாளம் கண்டு அவர்கள் ஒருவேளை நாடு திரும்பும்பட்சத்தில் அவர்களுக்கு இலங்கையில் குடியுரிமை வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. ஆதலால் இலங்கையை பொறுத்தவரையில் இதில் சிக்கலில்லை.
ஆனால், தற்போது முகாம்களிலுள்ள நாடற்றவர்கள் இலங்கை செல்வதில் சிக்கல் இருக்கிறது. அவர்களுக்கு அங்கு காணி நிலமோ, சொத்துக்களோ சொந்தபந்தங்களோ பெரிதாக இல்லை. எந்தப்பிடிப்பும் இல்லாத இடத்திற்கு அவர்கள் ஏன் திரும்பி போகக்கூடாது என்று கேட்பது அபத்தமானது. அல்லது அவர்கள் திரும்பி போவார்கள் என்று இந்தியா எதிர்ப்பார்பதும் சாத்தியமில்லாதது.

அப்படி இருப்பவர்களுக்கு பதில் பதில் கூற வேண்டிய இடத்தில் இந்தியா இருக்கிறது என்றும் அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கேட்பதும், இலங்கையிலிருந்து போரின் காரணமாக தமிழகத்திற்கு வந்து, முகாம்களிலிருந்து தற்போது இந்திய குடியுரிமை கேட்பதும் வேறு வேறானது.
இதில் உள்ள அடிப்படை புரியாமல் தமிழகத்திலுள்ள அகதிகளிடத்தில் பிளவு செய்ய முற்படுகிறார்கள் என்றும், இது குடியுரிமை கோரிக்கைக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறுவதும் புரிதல் குறைப்பாடன்றி வேறு இல்லை.

அவர்கள் பிளவை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள் என்று உறக்க பேசி பேசி உண்மையில் பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதே இந்த இந்த அடிப்படை புரிதல் குறைப்பாடு உள்ளவர்களன்றி வேறு யாருமில்லை. இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு முயற்சிக்கும் ஆர்வத்தில் அடிப்படையாக உள்ள பிரச்சினையினை கவனிக்காதவர்களின் கவனக்குறைவு பிரச்சினையினை தீர்க்க உதவாமல் மேலும் சிக்கலைத்தான் உண்டாக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக