ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் நியமனம்- தலைவர்கள் வாழ்த்து

BJP's L Ganesan tests positive for COVID-19 - Simplicity

மாலைமலர் :இளம் வயதிலேயே ஆர். எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிர பற்று கொண்ட இல.கணேசன் திருமணம் செய்து கொள்ளாமல் தனது வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு முழுநேர ஊழியராக பணியாற்றினார்.
சென்னை:  தமிழக பா.ஜனதா மூத்த தலைவரான இல.கணேசன் மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று பிறப்பித்தார்.
மணிப்பூர் கவர்னராக 24.7.2019-ல் நஜ்மா ஹெப்துல்லா நியமிக்கப்பட்டார்.
கடந்த 10-ந்தேதி முதல் அவர் விடுப்பில் சென்றார். அதைத்தொடர்ந்து சிக்கிம் மாநில கவர்னர் கங்கா பிரசாத் மணிப்பூர் மாநில கவர்னர் பொறுப்பையும் கவனித்து வந்தார்.

இந்த நிலையில் இல.கணேசன் மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இல.கணேசன் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். தனது அண்ணனின் பராமரிப்பிலேயே வாழ்ந்து வருகிறார்.

இளம் வயதிலேயே ஆர். எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிர பற்று கொண்டவர். அதனால் திருமணம் செய்து கொள்ளாமல் தனது வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு முழுநேர ஊழியராக பணியாற்றினார்.

பா.ஜனதா தொடங்கப்பட்டது முதல் கட்சி பணியில் ஈடுபட்டார். 1991-ல் பா.ஜனதா கட்சியின் மாநில அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு அகில இந்திய செயலாளர், அகில இந்திய துணை தலைவர் பொறுப்புகளையும் வகித்தார்.

பாஜக

அதன் பிறகு தமிழக பா.ஜனதா தலைவராக நியமிக்கப்பட்டார். 2009, 2014 பாராளுமன்ற தேர்தல்களில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

2016-ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் இருந்து டெல்லி மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். அந்த பதவியை ஒரு ஆண்டு வகித்தார். தற்போது கட்சியின் தேசிய குழு உறுப்பினராக இருக்கிறார்.

மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு இருப்பது பற்றி இல.கணேசன் கூறியதாவது:-

வடகிழக்கு மாநில மக்களுக்கு சேவை செய்ய மகிழ்ச்சியுடன் செல்கிறேன். இந்த வாய்ப்பை தந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இல.கணேசனை போனில் தொடர்பு கொண்டு மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் போனில் தொடர்பு கொண்டு இல.கணேசனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இல.கணேசனுக்கு தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பா.ஜனதாவின் மூத்த தலைவரும் நான் பெரிதும் போற்றும் இல.கணேசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

மூத்த தலைவர் இல.கணேசனை மணிப்பூர் மாநில கவர்னராக நியமித்து இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சிறந்த தேசியவாதியும் ஆன்மிகவாதியுமான இல.கணேசனுக்கு இப்பதவி வழங்கப்பட்டு இருப்பது 8 கோடி தமிழர்களுக்கும் வழங்கப்பட்ட அங்கீகாரமாக கருதுகிறேன். அவரது பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக