வியாழன், 19 ஆகஸ்ட், 2021

ஆப்கான் பெண் கவர்னர் சலீமா மசாரி திடீர் கைது ! தாலிபான்களுக்கு எதிராக போராடிய ஆப்கான் கவர்னர்!

 Shyamsundar -  e Oneindia Tamil :    காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான் படைகளுக்கு எதிராக போராளி குழுக்களுடன் பயிற்சி எடுத்து வந்தவரும், தொடர்ந்து தாலிபான் படைகளை எதிர்த்து வந்தவருமான கவர்னர் சலீமா மசாரி கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண் கவர்னரான இவர் திடீரென கைது செய்யப்பட்ட சம்பவம் தாலிபான்களின் ஆட்சி முறை மீதான கேள்வியை எழுப்பி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தாலிபான்கள் தங்களுக்கு என்று ஒரு இமேஜை உருவாக்க முயன்று வருகிறார்கள்.
அதாவது உலக அளவில் தங்கள் முகம் மோசமாக இருப்பதை சரி செய்ய தீவிரமாக முயன்று வருகிறார்கள். உலக நாட்டு மக்களிடம் நம்பிக்கையை பெறுவதோடு தங்கள் சொந்த நாட்டு மக்களிடம் நம்பிக்கையை பெற வேண்டும், அவர்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்பதில் தாலிபான்கள் தரப்பு தீர்க்கமாக இருக்கிறது.

இதனால்தான் காபூலை வென்ற முதல் நாளே, எங்கள் நாட்டில் பெண்களுக்கு சம உரிமை அளிப்போம். ஹிஜாப் அணிவது கட்டாயம்தான். ஆனால் பெண்களுக்கான அனைத்து உரிமைகளும், வாய்ப்புகளும் வழங்கப்படும், பெண் கல்வியும் ஊக்குவிக்கப்படும் என்று தாலிபான் படைகள் தெரிவித்து இருந்தன.

பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் மிதவாதத்தை கடைபிடிக்க தாலிபான்கள் முயன்று வருகிறார்கள். தாலிபான்களின் இந்த மாற்றம் கவனிக்கத்தக்கதாக இருந்தாலும் கூட பெரிய அளவில் நம்பிக்கை அளிக்க கூடிய ஒன்றாக இல்லை.

தாலிபான்களின் பழைய ஆட்சி காரணமாக இன்னும் ஒரு அச்சம் அங்கு நிலவும் வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில்தான் தாலிபான்கள் முதல் 3 நாள் ஆட்சியிலேயே மாற்றத்தை வெளிப்படுத்த தொடங்கினார்கள். முதலில் தங்கள் ஆட்சியில் பெண் அரசியல் தலைவர்கள் இருக்க வேண்டும். பெண் அரசியல் தலைவர்களுக்கு ஆட்சியில் இடம் அளிப்பதாக கூறி தாலிபான்கள் அழைப்பு விடுத்து இருந்தது. அதோடு பெரிய மாற்றமாக பெண் செய்தியாளர்கள் தொடர்ந்து தாலிபான்களின் ஆப்கானிஸ்தானில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். பெண் செய்தியாளர்கள் பொது இடங்களில் செய்தி சேகரித்தனர். தாலிபான்களிடமே மைக்கை நீட்டி பேட்டிகளை எடுத்தனர். இதனால் தாலிபான்கள் பெண்கள் விஷயத்தில் தங்கள் கொள்கையை மாற்றி விட்டதோ என்றே எண்ணம் தோன்றி வருகிறது.

ஆனால் என்ன ஆனால் என்ன தாலிபான்கள் கொஞ்சம் கொஞ்சமாக இதில் நல்ல பெயர் எடுத்துவந்த நிலையில், திடீரென ஆப்கானிஸ்தானின் முக்கியமான பெண் கவர்னர்களில் ஒருவரான சலீமா மசாரி கைது செய்யப்பட்டு உள்ளார்.
ஆப்கானிஸ்தானின் மூன்று பெண் கவர்னர்களில் சலீமாவும் ஒருவர். ஆப்கானிஸ்தானில் மிகவும் வலிமை வாய்ந்த பெண் தலைவர்களில் ஒருவராக இவர் பார்க்கப்பட்டார்.
பால்க், சாகர்கிண்ட் பகுதியின் கவனராக இருந்தார். ஆப்கானிஸ்தானில் மொத்த நாடும் தாலிபான் வசம் சென்ற போதும்.. நெஞ்சுரத்தோடு தாலிபான்களை எதிர்த்து வந்தவர்தான் சலீமா. இது என்னுடைய நாடு.. நான் எங்கும் செல்ல மாட்டேன்.. யார் வெளியேறினாலும் நான் வெளியேற மாட்டேன் என்று உறுதியாக அறிவித்தார்.

 அதோடு ஆப்கானிஸ்தானில் இருந்து பல்வேறு சிறு சிறு போராளி குழுக்களோடு சேர்ந்து தாலிபான்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கினார். ஆப்கானிஸ்தானின் பயிற்சி பெற்ற ராணுவமே பல இடங்களில் தாலிபான்களுக்கு எதிராக போரிட மறுத்து தாலிபான்களிடம் சரண் அடைந்தது. ஆனால் சலீமா அப்படி அச்சத்தோடு தாலிபான்களிடம் சரண் அடையவில்லை. நான் கடைசிவரை போராடுவேன்.. என்று கையில் துப்பாக்கியை தூக்கி பால்க் சாகர்கிண்ட் எல்லை பகுதியை காத்து வந்தார். அந்த பகுதி தாலிபான் வசம் எளிதாக சென்று விடாமல் காப்பாற்றியது இவர்தான்.

பெரும் மோதல் மற்றும் போராட்டத்திற்கு இடையில்தான் சலீமாவின் பால்க் மாகாணம் வீழ்ந்தது. பல மாகாண கவர்னர்கள் சண்டை வேண்டாம், தாலிபான்களிடம் சரண்டர் ஆகுங்கள் என்று ஆப்கான் படையிடம் மத்தியசம் பேசிய போது சலீமா மட்டும் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று கூறி தாலிபான்களுக்கு எதிராக போராடி வந்தார். தாலிபான்கள் மொத்தமாக நாட்டை பிடித்ததில் இருந்தே சலீமா மீது ஒரு கண்ணாக இருந்தது. இவரால் தேவையில்லாத பிரச்சனைகள் வரலாம் என்று தாலிபான்கள் அச்சம் தெரிவித்தது. மக்கள் இவர் பக்கம் செல்லும் வாய்ப்புகள் அதிகம் இருந்தது. கைது கைது இவரும் தாலிபான் ஆட்சிக்கு வந்த பின்பும் கூட அவர்களிடம் சரண் அடையவோ, சமாதானம் பேசவோ தயாராக இல்லை. இந்த நிலையில்தான் சலீமாவை தாலிபான்கள் கைது செய்துவிட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. தொடர்ந்து சலீமா ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு எதிராக தாலிபான்கள் காய் நகர்த்தி வந்தது. மொத்தமாக ஆட்சி கைப்பற்றப்பட்ட நிலையில் தாலிபான் அவரை சுற்றி வளைத்து கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த பரபரப்பு கைது அரங்கேறியது.

சன்னி , ஷியா பிரிவு மோதலும் இதில் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சலீமா ஷியா பிரிவை சேர்ந்தவர். இவரின் மாகாணத்தில் ஷியா மக்கள் அதிகம் இருக்கிறார்கள். இதனால் இவர்கள் தொடர்ந்து சன்னி ஆதிக்கம் கொண்ட தாலிபான்களை எதிர்த்து வந்தனர்.
இதன் காரணமாக இங்கு ஏற்கனவே, தாலிபான் ஆட்சிக்கு முன்னே பல தாக்குதல்கள் நடந்து இருக்கின்றன. ஐஎஸ் அமைப்பிற்கு கூட இந்த மாகாணம் என்றால் ஆகாது. தொடர்ந்து இந்த மாகாணம் மீது கவர்னர் சலீமா மீது ஐஎஸ், தாலிபான்கள் எல்லாம் குறியாக இருந்தனர். இந்த நிலையில்தான் ஆட்சிக்கு வந்ததும் சலீமா கைது செய்யப்பட்டுள்ளார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக