திங்கள், 9 ஆகஸ்ட், 2021

வெள்ளை அறிக்கையும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளும்!

 மின்னம்பலம் : நிதி நெருக்கடி இருந்தாலும் திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமென்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி.
நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் வெளியிட்ட நிதி நிலை வெள்ளை அறிக்கை பற்றி இன்று (ஆகஸ்டு 9) கருத்து வெளியிட்டிருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி,
“கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சி எப்படி நடந்தது ? எத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்தியது ? அரசின் வரவு-செலவு என்ன ? பற்றாக்குறை என்ன ? கடன் சுமை என்ன ? என்ற விபரங்களை அக்கு வேறு ஆணி வேறாக, சல்லடை போட்டு சலித்து அனைவரும் பாராட்டத்தக்க வகையில் வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சரை பாராட்டுகிறேன்.
எந்தவொரு ஆட்சியும் தொடங்கும் போது, கடந்த கால ஆட்சியினால் ஏற்பட்ட யதார்த்த நிலைமைகளை மக்கள் மன்றத்தில் முன்வைத்து தமது பணிகளை தொடங்குவது சரியான அணுகுமுறையாகும்.
அந்த அணுகுமுறையின்படி வெள்ளை அறிக்கையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை, தொலைநோக்கு பார்வை இல்லாத ஆட்சிமுறை, மக்கள் நலனில் அக்கறை இல்லாத சுயநலம் சார்ந்த செலவினங்கள், ஊதாரித்தனமான செலவுகள் ஆகியவற்றை செய்ததன் மூலமாக மக்கள் மீது வரலாறு காணாத கடன் சுமை ஏற்பட்டிருக்கிறது.

இதற்காக கடந்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்டினாலும், இந்த சுமையை இன்றைய தி.மு.க. அரசு ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கடன் சுமையின் பின்னணியில் தான் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிதிநிலைமை எப்படி இருந்தாலும், தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றும் என்று நிதியமைச்சர் கூறியிருக்கிறார்.

நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின்படி, கடந்த தி.மு.க. ஆட்சி பதவி விலகும் போது 2010-11 இல் கடன் சுமை ரூ.1,01,349 கோடி. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16.68 சதவிகிதம். 2021-22 இல் மொத்த கடன் சுமை ரூபாய் 5 லட்சத்து 70 ஆயிரத்து 189 கோடியாக பலமடங்கு உயர்ந்துள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 26.69 சதவிகிதமாகும். 14-வது நிதிக்குழு மாநில அரசின் கடனுக்காக விதித்த வரம்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவிகிதமாகும். அந்த வரம்பை கடந்த கால அ.தி.மு.க. ஆட்சி மீறி, பொருளாதார சீரழிவிற்கு வழிவகுத்துள்ளது. அதேபோல, 2010-11 இல் நிதி பற்றாக்குறை ரூபாய் 16 ஆயிரத்து 647 கோடி. 2020-21 இல் இது ரூபாய் 92 ஆயிரத்து 305 கோடியாக உயர்ந்துள்ளது.

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் நிர்வாக சீர்கேட்டினாலும், ஊழல் நடவடிக்கைகளாலும் கடுமையான கடன் சுமையில் சிக்கித் தவித்து வருகிறது. குறிப்பாக, மின்சார வாரியம், போக்குவரத்துத்துறை ஆகியவற்றின் கடன் ரூபாய் 2 லட்சம் கோடியை எட்டி விட்டது. அ.தி.மு.க. ஆட்சியின் காரணமாக தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் கடன் சுமை ரூபாய் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ஆக உள்ளது.

2011 இல் ஆட்சிக்கு வந்த அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, எங்களுக்கு வாக்களித்தால் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றிக் காட்டுவேன் என்று வீர சபதம் செய்தார். அவரது ஆட்சியும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்குவதை விட்டு, வரலாறு காணாத வகையில் கடன் சுமையை உயர்த்தி, திவாலான நிலையில் தமிழகத்தை படுகுழியில் தள்ளியிருக்கிறார்கள். படுகுழியில் விழுந்த தமிழகத்தை மீட்டெடுக்கிற கடுமையான பணி தி.மு.க. அரசுக்கு ஏற்பட்டுள்ளது”என்று சுட்டிக் காட்டியுள்ள அழகிரி,

“அதேபோல, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், அதற்கு இணையாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்காமல், கலால் வரியை பலமடங்கு உயர்த்தி ஏறத்தாழ ரூ.20 லட்சம் கோடி வரி விதித்து பா.ஜ.க. அரசு கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது. மக்கள் மீது சுமையை ஏற்றுகிற வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை பலமுறை உயர்த்தி கடுமையாக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. ஆனால், கலால் வரி மூலமாக பெறுகிற வருமானத்தை மாநில அரசுகளுக்கு பகிர்ந்து கொடுக்காமல் பெரும்பாலான வரி வருவாயை ஒன்றிய அரசே அபகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் மீதான வரி வருவாய் லிட்டருக்கு ரூ.21.46 ஆக இருந்தது. அதில், ரூபாய் 9.46 மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது, ஒரு லிட்டரில் கலால் வரி 33 ரூபாயாக உயர்ந்த நிலையில் மாநில அரசுக்கு ரூ.1 மட்டுமே வழங்கப்படுகிறது. இதைவிட ஒன்றிய பா.ஜ.க. அரசு ஒரு மக்கள் விரோத அரசு என்று கூறுவதற்கு வேறு சான்று தேவையில்லை. இதன்மூலம் கூட்டாட்சி அமைப்பை சீர்குலைத்து மாநிலங்களின் வருவாயை படிப்படியாக குறைத்து நிதி ஆதாரங்களை சீர்குலைத்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் அவலங்களை புள்ளி விவரத்தோடு, ஆதாரப்பூர்வமாக தமிழக மக்கள் எளிமையாக புரிந்து கொள்கிற வகையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு அ.தி.மு.க.வினர், தங்களது ஆட்சியின் சாதனைகள் என்று கூற முடியாத அளவிற்கு கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் அவலங்களை தோலுரித்துக் காட்டப்பட்டிருக்கிறது. கடந்த கால ஆட்சியினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து தமிழகத்தை மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதையில் தமிழகத்தை அழைத்துச் செல்கிற மகத்தான பொறுப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்த பெரும் பொறுப்பை மிகச் சிறப்பாக செய்து தாழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்ட தமிழகத்தை தலைநிமிரச் செய்கிற பணியை மிகச் சிறப்பாக முதலமைச்சர் செய்வார் என்கிற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது. கடந்த 3 மாதங்களாக தமிழக ஆட்சி செயல்படுகிற பாங்கை பார்க்கிற போது, தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது”என்று தெரிவித்துள்ளார் . கே.எஸ். அழகிரி.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக