வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

ஆப்கானிஸ்தான் மேற்கு நாடுகளால் கைவிடப்படுகிறது! போர்க்களத்தில் இருந்து பெண் செய்தியாளரின் பார்வை

ஆப்கானிஸ்தான்
யோகிதா லிமாயே  -      பிபிசி செய்தியாளர், ஆப்கானிஸ்தானில் இருந்து
தாங்கள் பெண் கல்விக்கு எதிரானவர்கள் அல்லர் என்றும் பெண்களின் உரிமைக்கு உறுதியளிப்பதாகவும் கடந்த ஆண்டு தாலிபன்கள் கூறினார்கள்
ஒவ்வொரு முறையும் நான் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும்போதெல்லாம் என்னை அங்குள்ள மக்கள் அன்புடன் வரவேற்கிறார்கள். இந்தியாவில் இருந்து வருகிறேன் என்று தெரிந்தவுடன், தாங்கள் டெல்லிக்குச் சென்று வந்த நாள்களையும், அங்கிருந்ததை அவர்கள் எந்த அளவு விரும்பினார்கள் என்பதையும் பற்றி என்னுடன் பேசுகிறார்கள்.
டெல்லியின் சரோஜினிநகர் மற்றும் லஜ்பத் நகர் சந்தைகளில் வாங்கிய பொருள்களைப் பற்றி சிலாகிக்கிறார்கள். . பெரும்பாலும், அவர்கள் என்னிடம் இந்தி அல்லது உருது மொழியில் பேச முயற்சி செய்கிறார்கள். தங்களுக்குப் பிடித்த பாலிவுட் நட்சத்திரங்கள் யார் என்று கூறுகிறார்கள்."இந்தியாதான் ஆப்கானிஸ்தானின் உண்மையான நண்பன்" என்று நான் அண்மையில் ஆப்கானிஸ்தான் சென்றிருந்தபோது ஒருவர் என்னிடம் கூறினார். ஆப்கானிஸ்தானைத் தவிர பிற நாடுகளுக்கு எதிராக இந்தியா கிரிக்கெட் ஆடும்போது, ஆப்கானிஸ்தானில் இருப்பவர்கள் இந்தியாவுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதை நான் கண்டிருக்கிறேன்.

ஆனால் இதற்கு நேர்மாறாக ஆப்கானிஸ்தானில் இயங்கும் தீவிரவாதக் குழுக்கள் அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதாக அவ்வப்போது வரும் உளவுத் தகவல்கள் கூறுகின்றன. கடந்த காலங்களில் ஆப்கானிஸ்தான் மருத்துவமனைகளில் பணியாற்றிய இந்திய மருத்துவர்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டனர்.

அண்மையில் இந்திய பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திக்கி சுட்டுக் கொல்லப்பட்டார். ஆப்கானிஸ்தான் படைகளுடன் இருந்தபோது தாலிபன்கள் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து செய்தி சேகரித்து வழங்குவது எவ்வளவு ஆபத்தானது என்பதைக் கொடூரமாக நினைவூட்டும் சம்பவம் இது.

தனது வேலையில் அவர் துணிச்சலாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இருந்தார். சகாக்களில் அதிகமாக வியந்து பாராட்டப்பட்டவர் அவர். அவர் இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, டெல்லியில் இருந்து ஒரே விமானத்தில் அவரும் நானும் காபூலுக்குச் சென்றோம். விமான நிலையத்தில் எங்களது உடைமைகளுக்காகக் காத்திருந்தபோது, ஆப்கானிஸ்தான் மீதான அவரது அன்பைப் பற்றி இருவரும் பேசினோம். வாகன நிறுத்துமிடத்துக்குச் செல்வதற்கு முன் அடுத்த சில வாரங்களுக்கு என்ன செய்வது என்று பேசிக் கொண்டோம். பிரிந்து செல்வதற்கு முன்பாக "பாதுகாப்பாக இருங்கள்" என்று கூறிக்கொண்டோம்.

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து இருவரும் அனுப்பிய செய்திகளை இருவருமே கவனித்துக் கொண்டிருந்தோம். தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹாரில் இருந்து டேனிஸ் சித்திக்கி செய்தி சேகரித்து அனுப்பினார். நான் வடக்கே தாலிபன்களால் கைப்பற்றப்பட்ட குண்டூஸ் நகரில் இருந்து நான் செய்தி சேகரித்தேன்.

டேனிஷ் சித்திக்கின் மரணம் குறித்து அறிந்ததும் என்று வயிற்றில் குத்தியதைப் போல உணர்ந்தேன். என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் செய்தியாளராக நமது பணியைத் தொடர்ந்து செய்வதுதான் அவருக்குச் செய்யும் மரியாதைய இருக்கும் என்று அதிர்ச்சியில் இருந்து மீண்டதும் நான் முடிவு செய்தேன். தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மக்களின் நிலைமையை எடுத்துச் சொல்ல வேண்டும், அவர்களின் குரலை ஆப்கானிஸ்தானுக்கு வெளியே எடுத்துச் செல்ல வேண்டும் எனத் தீர்மானித்தேன்.

ஆப்கானிஸ்தான்
படக்குறிப்பு,

கடந்த சில நாள்களாக குண்டூஸ் நகருக்கு உள்ளேயும் சண்டை நடந்து வருகிறது.

ஆப்கானிஸ்தான் மக்கள் பல தசாப்தங்களாக வன்முறையின் நிழலில்தான் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது பேரழிவின் விளிம்பில் நிற்கிறார்கள்.

வெளிநாட்டுப் படைகள் நாட்டை விட்டு வெளியேறும்போது, ​​தாலிபன்கள் மிக வேகமாக நகரங்களைக் கைப்பற்றி வருகின்றனர். கடுமையான சண்டை மற்றும் அழிவுகளுக்கு மத்தியில் நாட்டின் பாதிப் பகுதியை அவர்கள் கைப்பற்றி வருகின்றனர்.

சில வாரங்களுக்கு முன்புவரை நான் இருந்த குண்டூஸ் நகரம் இப்போது தாலிபன்களின் வசம் இருக்கிறது. அந்த நகரத்தில் விமான நிலையத்தைத் தவிர மற்ற அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

நாங்கள் அங்கு இருந்தபோது கூட, ஒவ்வொரு இரவிலும் மணிக்கணக்கில், எறிகுண்டுகள் வெடிப்பதையும் மற்றும் துப்பாக்கிச் சத்தத்தையும் கேட்க முடிந்தது. நாங்கள் அடிக்கடி ஒலியைக் கேட்டு பதறியிருக்கிறோம். ஆனால் நகரத்தில் மக்கள் இதற்கெல்லாம் பழகிவிட்டார்கள். பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

அகதி முகாம்களின் மோசமான நிலை

வன்முறையிலிருந்து தப்பிய முப்பத்தைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், குண்டூஸ் நகரில் அடைக்கலம் புகுந்தனர். 45 டிகிரி வெப்பத்தில் துண்டுத் துணிகள் மற்றும் மூங்கில் குச்சிகளைக் கொண்டு கட்டப்பட்ட தற்காலிக கூடாரங்களில் அவர்கள் தங்கியிருந்தனர். அவர்களுக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை. நூற்றுக்கணக்கான மக்களுக்கு தண்ணீருக்காக சில குழாய்கள் மட்டுமே இருந்தன.

என் வாழ்க்கையில் நான் கண்ட மிக மோசமான நிலை இது. வங்கதேசம் மற்றும் கிரீஸ் நாடுகளின் அகதி முகாம்களிலும் நான் இருந்திருக்கிறேன். அங்கெல்லாம் மனிதநேய அமைப்புகள் உணவுகள் வழங்குவதையும் சிகிச்சையளிப்பதையும் பார்த்திருக்கிறேன்.

குண்டூஸ் நகரில் நான் இருந்த நான்கு நாட்களில் ஒரேயொரு முறைதான் உணவுப் பொருள்கள் வழங்குவதைப் பார்த்திருக்கிறேன்.

ஐக்கிய நாடுகள் அவை, சேவ் தி சில்ட்ரன் அமைப்பு போன்றவை குண்டூஸ் நகரில் விநியோகிப்பதற்குப் போதுமான அளவு பொருள்கள் இல்லாமல் தவித்தன. மக்களின் எண்ணிக்கை பல மடங்கு இருந்தது.

மனிதநேய உதவிகள் தேவைப்படும் சுமார் 1.8 கோடி மக்களுக்கு உதவுவதற்கான நிதியில் 40 சதவிகிதம் மட்டுமே தங்களுக்குக் கிடைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் அவை கூறியிருக்கிறது.

நாங்கள் குண்டூஸில் உள்ள முகாமுக்குள் நுழைந்தபோது மக்கள் எங்களைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் பலர் பெண்கள். தன்னுடைய கணவரும் மூன்று குழந்தைகளும் கொல்லப்பட்டதாக அவர்களில் ஒரு பெண் என்னிடம் கூறினார். மற்றொருவர் ஒரு மடித்த துண்டுக் காகிதத்தை என் கையில் வைத்து அழுத்தினார். அது அவரது மகனின் தேசிய அடையாள ஆவணம்.

அவரது பெயர் ஃபெனாப்ஷா. தனக்கு 77 வயதாவதாக அவர் சொன்னார். வயதுக்குரிய சுருக்கங்கள் அவரது முகத்தின் தெரிந்தன. எப்போதும் நீர் பொங்கியதால் அவருடைய கண்கள் மின்னிக் கொண்டிருந்தன. அவருடனான சில நிமிட உரையாடலில் அவரது மூன்று மகன்களும் சண்டையில் கொல்லப்பட்டதை அறிந்தேன்.

"நானும் இறந்திருக்க வேண்டும். என்னால் இந்த வேதனையுடன் வாழ முடியவில்லை" என்றார் அவர்.

ஆப்கானிஸ்தான்

தாலிபன்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் படைகளுக்கு இடையே நடந்த சண்டையில் அவர்களது அன்புக்குரியவர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் என்ற கற்பனைக்கு எட்டாத திகில் நிறைந்த கதையை பிறகு நான் அறிந்து கொண்டேன்.

அந்த நகரத்தில் உள்ள ஒரு முகாமில் மட்டுமே இருப்பவர்கள் கூறுவதைக் கேட்டால்கூட சண்டையில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்ற எண்ணிக்கையைக் கணக்கிடுவது கடினமாகிவிடும்.

தொடர்ந்து முன்னேறும் தாலிபன்

கடந்த சில நாள்களாக குண்டூஸ் நகருக்கு உள்ளேயும் சண்டை நடந்து வருகிறது. நான் அங்கிருந்தபோது சந்தித்த மக்களுக்கு இப்போது என்ன ஆகியிருக்கும் என்று கண்டுபிடிக்க முடியாது.

தலிபான்களால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் மனித உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. பெண்கள் தங்கள் குடும்பத்தில் ஒரு ஆண் உறுப்பினர் உடன் இல்லாமல் வெளியே செல்லக்கூடாது என்று தாலிபன்கள் உத்தரவிட்டிருக்கின்றனர் என்றும் 15 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளை தாலிபன்கள் வலுக்கட்டாயமாக திருமணம் செய்துகொள்கிறார்கள் என்றும் நான் கேள்விப்படுகிறேன்.

ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுகள் தாலிபன் இயக்கம் மறுத்திருக்கிறது.

தாங்கள் பெண் கல்விக்கு எதிரானவர்கள் அல்லர் என்றும் பெண்களின் உரிமைக்கு உறுதியளிப்பதாகவும் கடந்த ஆண்டு தாலிபன்கள் கூறினார்கள்

ஆனால் ஆப்கானிஸ்தானில் உள்ள பலர் தாலிபன்கள் சொல்வதற்கும் செய்வதற்கும் பெரும் வேறுபாடு இருப்பதாக எச்சரிக்கின்றனர்.

'தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு முடிவுகட்டிவிடுவார்கள்" என்று நாடாளுமன்ற பெண் உறுப்பினரான ஃபர்சானா கோச்சாய் கூறினார். நான் அவரை காபூலில் உள்ள வீட்டில் சந்தித்தேன்.

ஆப்கானிஸ்தானில் ஒரு நாடோடி பழங்குடி இனத்தில் இருந்து தனது 29ஆவது வயதில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர். அதுவும் அரசியல் தொடர்புகள் ஏதும் இல்லாமல் இல்லாமல் அவர் நாடாளுமன்றத்துக்கு வந்தது, ஆப்கானிஸ்தானில் ஜனநாயக மற்றும் பெண்களின் உரிமைகளுக்கான வெற்றிக் கதை.

ஆப்கானிஸ்தான்

இப்போதும் கூட, ஆப்கானிஸ்தான் சமூகத்தின் பெரும்பகுதி ஆணாதிக்க மற்றும் பழமைவாதத்தை கடைப்பிடிக்கிறது. ஆனால் முன்னர் அது மிகவும் மோசமாக இருந்தது.

எதிர்காலம் பற்றிய அச்சத்தில் பெண்கள்

தாலிபன் ஆட்சியின் போது, ​​பெண்கள் பள்ளிக்களுக்கோ வேலைக்கோ செல்ல அனுமதிக்கப்படவில்லை. குடும்பத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரின் துணை இல்லாமல் அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது.

இப்போது, அரசு, நீதித்துறை, காவல்துறை மற்றும் ஊடகங்களில் பெண்கள் முக்கிய பதவிகளை பெண்கள் வகிக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானில் பாராளுமன்றத்தில் பெண்களின் விகிதம் இந்தியாவை விட அதிகம்

ஃபர்சனாவின் வீட்டில் ஆப்கன் கிரீன் டீ நிறைந்த கோப்பைகள், சர்க்கரை பூசப்பட்ட வறுத்த பாதாம் இருந்த ஒரு பாரம்பரிய கிண்ணத்துடன் பேசிக் கொண்டிருந்தபோது, ​வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவது பற்றி "என்ன நினைக்கிறீர்கள்" என்று நான் அவரிடம் கேட்டேன்.

அவர்கள் பொறுப்பற்ற முறையில் வெளியேறுகிறார்கள் என்று அவர் கூறினார்.

"20 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் தலிபான்களுடன் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு, இப்போது நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் கூறிவிட்டார்கள். இது சர்வதேச சமூகத்தின் தோல்வி" என்று அவர் கூறினார்.

"இது பெண்களுக்கு மட்டுமல்ல, எல்லா மக்களுக்கும் கறுப்பு நாட்களாக இருக்கப் போகிறது. ஏனென்றால் நாங்கள் குரல் எழுப்பு முடியாது. சுதந்திரம் இருக்காது. வாழ்க்கையே இல்லாமல் போகும்"

இதற்கு முன் தாலிபன்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டபோது ஃபர்சனாவைப் போன்ற பலர் குழந்தைகளாக இருந்தனர். இப்போது அவர்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை இழப்பது, அவர்களுக்குத் தெரிந்த ஒரே வாழ்க்கையை இழப்பதாகத்தான் இருக்கும்.

ஆப்கானியர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்காக ஓரளவு பாதுகாப்பாக இருக்கும் இடங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் வருங்காலத்தைப் பற்றிய கணிப்பு தெளிவாக உள்ளது. உலகத்தால் கைவிடப்பட்ட உணர்வும்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக