செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

பாஜக கே.டி.ராகவனின் பாலியல் வீடியோ லீக் ... ராஜினாமா

 மாலைமலர்  :என் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். இதை சட்டப்படி சந்திப்பேன் என்று கே.டி. ராகவன் கூறி உள்ளார்.
சென்னை:  தமிழ்நாடு  பா.ஜனதா பொதுச் செயலாளராக இருப்பவர் கே.டி.ராகவன். முன்னணி நிர்வாகியான இவர் கட்சி விவாதங்களில் பங்கேற்று பிரபலமானவர்.
இவரைப் பற்றி சமூக வலைத்தளத்தில் பாலியல் வீடியோ ஒன்று வைரலாகி பரவி வருகிறது. இது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வீடியோவை வெளியிட்டவர் பா.ஜனதாவில் பல ஆண்டுகளாகவே பாலியல் சீண்டல்கள் நடப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க தயங்கியும், முக்கிய நிர்வாகிகள் என்பதால் அவர்களின் மிரட்டலுக்கு பயந்து இருப்பதாகவும், இதே போல் மேலும் சிலரது வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவால் அதிர்ச்சி அடைந்த கே.டி. ராகவன் உடனடியாக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து தனது பதவியையும் ராஜினாமா செய்தார்.

பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக மக்களுக்கும், கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். என்னை சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். நான் 30 வருடமாக எந்த ஒரு பிரதிபலனும் இன்றி பணியாற்றி வருகிறேன்.

இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளிவந்ததை அறிந்தேன். என்னையும், என் கட்சியையும் களங்கப்படுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இன்று மாநிலத்தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆலோசனை செய்தேன். அதைத் தொடர்ந்து என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். என் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். இதை சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக