ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

தமிழ் சினிமா: நீண்ட காலம் கழித்து திறக்கப்பட்ட திரையரங்குகள் சந்திக்கும் சவால்கள் என்ன?

திரையரங்கு
BBC :“கொரோனா பொது முடக்கம் காரணமாக பல்வேறு துறைகளும் மிகுந்த பாதிப்புகளை சந்தித்துள்ளன. அதேபோல் திரைத்துறையும் திரையரங்கங்களும் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன. திரையரங்க உரிமையாளர்களுக்கும், அதில் பணிபுரிபவர்களுக்கும் கோவிட் பரவல் கடினமான காலகட்டத்தை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்திலுள்ள திரையரங்கங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பொது முடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த திங்கட்கிழமை முதல் தமிழகம் முழுவதும் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.
ஆனால், தற்போது திரையரங்கங்களுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
வரும் நாட்களில் முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகும்போது, திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என திரையரங்க உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

திரையரங்கங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப மேலும் சில வாரங்கள் தேவைப்படும் என்கிறார் கோவையைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர் பாலசுப்பிரமணியம்.
சுமார் 1,000 திரையரங்கங்கள் உள்ளன. ஒரு திரையரங்கத்தில் குறைந்த பட்சம் 25 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர் என்றால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரத்திற்காக திரையரங்கங்களை நம்பியுள்ளனர். மிக நீண்ட நாட்களாக உரிய வருவாய் கிடைக்காததால் இவர்கள் அனைவரும் பெரும் சிக்கல்களை சந்தித்துள்ளனர்.

தற்போது மீண்டும் திரையரங்கங்கள் திறக்கப்பட்டு, ஏற்கனவே வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படங்களையும், ஆங்கில திரைப்படங்களையும் முதற்கட்டமாக வெளியிட்டுள்ளோம்.

படக்குறிப்பு,திரையரங்கு

திடீரென தமிழக அரசு திரை அரங்குங்களுக்கான தளர்வுகளை அறிவித்துள்ளதால், முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப்படாமல் இருந்தது. அறிவிப்பு வந்த பின்னரே திரையரங்கங்களில் பராமரிப்பு பணிகளை துவங்கினோம். அதனால் பழையபடி திரையரங்கங்கள் செயல்பாட்டுக்கு வர இன்னும் சில வாரங்கள் தேவைப்படும்.

தற்போது ஒரு காட்சிக்கு வெகு சொற்ப அளவிலேயே பார்வையாளர்கள் வருகின்றனர். இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.

வீட்டிலிருந்து திரைப்படங்களை பார்க்க தற்போது பல்வேறு தொழில்நுட்பங்கள் இருந்தாலும், திரையரங்கிற்கு வந்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. உரிய கோவிட் பாதுகாப்பு வழிகாட்டுதல்களோடு திரையரங்கங்கள் திறக்கப்பட்டுள்ளன. விரைவில் அதிக அளவிலான திரைப்பட ரசிகர்கள் திரையரங்கை நோக்கி வருவார்கள்” என்கிறார் பாலசுப்பிரமணியம்.

இவர் கடந்த 38 ஆண்டுகளாக திரைத்துறை சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

நீண்ட கால இடைவேளைக்கு பிறகு திரையரங்குகளை மீண்டும் இயக்குவது மிகவும் சவாலான காரியம் என தெரிவிக்கிறார் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்.

“செப்டம்பர் முதல் வாரத்திலிருந்து புதிய தமிழ் திரைப்படங்களை திரையரங்கில் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது அரசு வழிகாட்டுதலின்படி திரையரங்க வளாகத்தில் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு காட்சிகள் துவங்கியுள்ளன.

நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு திரையரங்குகளை மீண்டும் இயக்குவது மிகவும் சவாலான காரியம். அதிக பரப்பளவு கொண்ட திரையரங்க வளாகங்கள் நீண்ட நாட்கள் மூடப்பட்டு இருந்ததால் அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

படக்குறிப்பு,டிக்கெட் கவுன்டர்.

இதேபோல் கோவிட் காரணமாக திரையரங்கங்களில் பணியாற்றிய பணியாளர்கள் பலர் வேறு வேலைக்கு சென்று விட்டனர். எனவே, புதிய பணியாளர்களை தேர்வு செய்து பணியமர்த்த வேண்டும்.

மேலும், தற்போது துப்புரவுப் பணிகள் முடிவடைந்த பின்பு புதிய தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

ஒரு திரைப்படம் திரையரங்கிற்கு வருவதற்குமுன் குறைந்தது ஒரு வார காலமாவது விளம்பரங்கள் செய்யப்பட வேண்டும். அந்த வகையில் தற்போது தான் புதிய படங்களுக்கான விளம்பரப் பணிகள் துவங்கியுள்ளன. வரும் வாரங்களில் அவை திரைக்கு வர உள்ளன. அதற்கு பின்னர் திரையரங்கிற்கு அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களுக்கு கோவிட் குறித்த பயத்தை போக்க, திரையரங்க பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. தடுப்பூசி போட்டதைக் குறிக்கும் வகையில் பணியாளர்கள் அனைவரும் பேட்ச் அணிந்திருப்பர். இதனால் பார்வையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

மேலும், திரையரங்கிற்கு வருபவர்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கப்பட உள்ளது. 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் கொரோனா அச்சமின்றி பார்வையாளர்கள் திரைப்படங்களை கண்டு செல்ல முடியும்” என்கிறார் இவர்.

கோவிட் பொது முடக்கம் காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள போதும், வரும் நாட்களில் திரையரங்க கட்டணங்கள் உயர்த்தப்படாது என திரையரங்க உரிமையாளர்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.

படக்குறிப்பு,திரையரங்கு

கோவிட் பரவல் ஏற்படுத்தியுள்ள மனச்சோர்வை போக்குவதற்காக மக்கள் திரையரங்கை நோக்கி வருவார்கள் என்று கூறுகிறார் திரையரங்க உரிமையாளர் மன்னார்.

‘கோவிட் காலகட்டத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாத போது ப்ரொஜெக்டர், ஜெனரேட்டர், யுபிஎஸ் பேட்டரி போன்ற கருவிகளை அவ்வப்போது இயக்க வேண்டும். குறைந்தது 30 நிமிடங்கள் வரை கண்டிப்பாக தினமும் இயக்க வேண்டும். அப்படி செய்தால்தான் அவை பழுதாகாமல் இருக்கும். அந்த வகையில் எனது திரையரங்கில் உள்ள கருவிகளை அவ்வப்போது இயக்கி வந்தோம். அதனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் உடனடியாக புதுப்பிக்கப்பட்டு திரைப்படங்கள் திரையிட தயாராகியுள்ளோம்.

கோவிட் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து பார்வையாளர்களை வரவேற்க தயாராகி வருகிறோம். கோவிட் காரணமாக ஏற்பட்டுள்ள மனச்சோர்வை போக்குவதற்காக மக்கள் திரையரங்கை நோக்கி வர காத்திருக்கின்றனர்.

புதிய படங்கள் திரையரங்கிற்கு வரும்போது கண்டிப்பாக அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வருவார்கள். பொழுதுபோக்கிற்காக பல்வேறு விஷயங்கள் இருந்தாலும் மிக குறைந்த செலவில் திரையரங்கில் திரைப்படங்களை காண்பது பெரும் மகிழ்ச்சியை தரும் பொழுதுபோக்காக என்றென்றும் உள்ளது’ என்கிறார் திரையரங்க உரிமையாளரும், திரைப்பட வினியோகிஸ்தருமான மன்னார்.

கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்குகளை இயங்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறித்து பொதுமக்களிடம் பேசினோம்.

‘கேரளா உள்ளிட்ட தமிழகத்திற்கு அருகில் உள்ள மாநிலங்களில் கோவிட் தொற்று அதிகமாகி வரும் சூழலில் தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது உட்பட பல்வேறு தளர்வுகள் அளித்திருப்பது சிறப்பான நடவடிக்கையாக தோன்றவில்லை’ என்கிறார் ஐடி பணியாளர் ஹரினி.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,திரையரங்கைத் திறப்பது இறுக்கத்தில் உள்ள பொதுமக்களுக்கு உற்சாகம் தருமா?

‘கோவிட் பாதிப்பின் முதல் அலையின் போது உருவான அலட்சியம் இரண்டாம் அலைக்கு வழிவகுத்தது. தற்போது மூன்றாம் அலை வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திரையரங்குகளை திறப்பது மீண்டும் கோவிட் தொற்று பரவ காரணமாக அமையலாம் என்பது என்னுடைய கருத்து’ என்கிறார் இவர்.

‘திரையரங்கங்கள் குளிர் சாதன வசதி இல்லாமல் இயங்க முடியாது. இதனால் திரையரங்கிற்கு செல்பவர்களுக்கு இயல்பாகவே கோவிட் பரவல் குறித்த அச்சம் ஏற்படுகிறது. ஆனால் திரையரங்கிற்கு சென்று திரைப்படம் பார்ப்பது என்பது மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஓர் அரிய அனுபவம். உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்கங்கள் செயல்படுவது மிகவும் முக்கியமாகும்’ என்கிறார் கல்லூரி மாணவர் பிரசன்னா.

‘கோவிட் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட நீண்ட பொது முடக்கத்தால் திரைத்துறையினர் பல்வேறு வருவாய் இழப்புகளை சந்தித்து வருகின்றனர். திரையரங்கை சார்ந்துள்ள பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்கிறார் விக்னேஷ்.

எல்லாத் துறைகளையும் செயல்பட அனுமதிப்பது போல் திரையரங்குகளையும் செயல்பட அனுமதிக்க வேண்டும். கோவிட் பரவலை முன்னிட்டு பாதுகாப்பாக செயல்பட உரிய வழிகாட்டுதல்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை முறையாக பின்பற்றி திரையரங்கில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வருவாய் உருவாக்கிட அரசு உதவ வேண்டும்.

திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களும் கோவிட் கட்டுப்பாடுகளை கடைபிடித்து திரைப்படங்களை திரையரங்கில் கண்டு ரசிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் தமிழகத்தைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக