சனி, 21 ஆகஸ்ட், 2021

அரசு வழக்கறிஞர்கள்: திமுகவில் உலவும் உத்தேசப்பட்டியல்!

 மின்னம்பலம் : திமுக அரசு பதவியேற்று நூறு நாட்களுக்கு மேல் ஆகிவிட்டாலும் இன்னமும் பல்வேறு துறை நியமனப் பதவிகளில்.. முந்தைய அதிமுக அரசால் நியமிக்கப்பட்டவர்களே இருக்கிறார்கள்.
அதுவும் குறிப்பாக நீதித்துறை சார்ந்த அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்களில் இன்னமும் அதிமுகவினரே இருப்பதாக திமுகவினர் புலம்பி வருகிறார்கள்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தாலும் இன்னமும் ஆட்சியின் நிர்வாக நரம்புகளில் முழுமையாக திமுகவினர் பணியமர்த்தப்படவில்லை.
புதிய ஆட்சி அமைந்ததும் அரசு தலைமை வழக்கறிஞர் பதவிக்கு மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம் நியமிக்கப்பட்டார்.
அதுபோலவே அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் பதவிக்கு அசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டார். இந்த இருவரது நியமனங்களைத் தவிர அடிஷனல் அட்வகேட் ஜெனரல் உள்ளிட்ட முக்கியமான பதவிகளை நிரப்பாமலேயே வைத்திருந்தார் முதல்வர்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டவர்களே அந்த இடத்தில் இருக்கிறார்கள். சிலர் ராஜினாமா செய்துவிட்டனர்.

இதற்கிடையில் ஆகஸ்டு 8 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், ’தேர்தலில் வாய்ப்பு கிடைக்காத மாவட்டச் செயலாளர்களுக்கு வாரியத் தலைவர் பதவிகள் போன்ற பதவிகளைக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் அதை செய்ய முடியவில்லை. தற்காலிகமாக அதை நிறுத்தி வைத்திருக்கிறேன். கூட்டணிக் கட்சிகளுக்குத்தான் சில பதவிகளைக் கொடுத்திருக்கிறோம். கூட்டணிக் கட்சிகள், தோழமை அமைப்புகள் பதவி கேட்டு நிறைய தொந்தரவு கொடுக்கிறார்கள். அதனால்தான் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறோம். 

கட்சி நிர்வாகிகளுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம், கவலை எனக்கு நிறைய இருக்கிறது. என்னைப் பார்க்கும் பல பேர், ‘ஆட்சிக்கு வந்தாச்சு, முதல்வர் ஆகியாச்சு ஏன் உங்க முகத்துல மகிழ்ச்சியில்லை?’னு கேட்கிறாங்க. நான் மகிழ்ச்சியில்லாமல் இருப்பதற்கு இதுதான் காரணம். தற்காலிகமாகத்தான் வாரிய பதவிகளை நிறுத்தி வைத்திருக்கிறோம். விரைவில் கொடுப்போம்’ என்று பேசினார். இதுகுறித்து மின்னம்பலத்தில் ஆகஸ்டு 8 ஆம் தேதி நான் மகிழ்ச்சியாக இல்லை: மாசெக்கள் கூட்டத்தில் மனம் திறந்த ஸ்டாலின் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

உண்மையிலேயே கூட்டணிக் கட்சிகளின் தொந்தரவு அதிகமாகத்தான் இருக்கிறது என்கிறார்கள் திமுக தலைமை வட்டாரத்தில். நீதித்துறையில் அரசு வழக்கறிஞர் பணியிடங்களில் வாய்ப்பு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைத் தவிர கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ்,மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், மமக, கொமதேக, தவாக கட்சித் தலைமைகளிடம் இருந்து திமுக தலைமைக்கு பட்டியல் அனுப்பி வைத்திருக்கிறார்கள். இன்னின்ன பதவிகள் இன்னாருக்கு வேண்டும் என்றும் அந்த பட்டியலில் அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.

இதனால் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. நீதிமன்றத் தரப்பில் இருந்தே இன்னும் ஏன் இந்த பணியிடங்களை நிரப்பவில்லை என்று அரசிடம் துறை ரீதியாக கேட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் அடிஷனல் அட்வகேட் ஜெனரல் பதவிகளுக்கு விரைவில் நியமனம் நடைபெற இருக்கிறது என்ற தகவலும் அது குறித்த ஓர் உத்தேசப் பட்டியலும் இன்று திமுக வழக்கறிஞர்கள் மத்தியில் பரபரப்பாக உலவிக் கொண்டிருக்கிறது.

அடிஷனல் அட்வகேட் ஜெனரல் எனப்படும் கூடுதல் அரசு வழக்கறிஞர் பணியிடங்கள் மொத்தம் 9. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 7, மதுரை உயர் நீதிமன்றத்துக்கு 2 என நியமிக்கப்படுவர். சென்னை உயர் நீதிமன்றத்துக்கு குமரேசன், வி. அருண், ஜெ. ரவீந்திரன், ராமன்லால், நீலகண்டன், நசுருதீன், சிலம்பண்ணன் ஆகியோர் பெயர்களும், மதுரை உயர் நீதிமன்றத்துக்கு வீரகதிரவன், பாஸ்கர் ஆகியோர் பெயர்களும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தப் பட்டியல் ஆகஸ்டு 23 திங்கள் கிழமை அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று திமுக வட்டாரத்தில் சொல்கிறார்கள். இதில் குறிப்பிடத் தக்க விஷயம் என்னவெனில் இந்த பட்டியலில் இருக்கும் அனைவரும் திமுக வழக்கறிஞர்களே... கூட்டணிக் கட்சியினர் யாரும் இதில் இல்லை.

அடுத்தடுத்த நிலை பதவிகள் கூட்டணிக் கட்சியினருக்கு பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் திமுக வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக