புதன், 18 ஆகஸ்ட், 2021

கலப்பட டீசல் விற்பனை: குண்டர் தடுப்பு சட்டம் பாயும்!

மின்னம்பலம் : தமிழகத்தில் கலப்பட டீசல் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளான சேலம், சங்ககிரி, நாமக்கல், திருசெங்கோடு, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் கலப்பட டீசல் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை கூடுதல் டிஜிபிஆபாஸ்குமார் உத்தரவுப்படி, காவல் துறையினர் பல குழுக்களாக பிரிந்து மேற்படி பகுதிகளில் கலப்பட டீசல் வாகன சோதனையை தீவிரமாக மேற்கொண்டனர்.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கலப்பட டீசல் சம்பந்தமாக மொத்தம் ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 26,400 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அந்த டீசல் ஏற்றி வந்த ஐந்து டேங்கர் லாரிகள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் கடத்தல் செயலில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அதில் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கள்ள சந்தை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்க நடவடிக்கை  ற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதில் கடந்த 13ஆம் தேதி அன்று சேலம் மாவட்டம் சங்ககிரி குப்பனூர் பிரிவு சாலையில் வாகன தணிக்கையின்போது கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த டேங்கர் லாரியில் சுமார் 4,000 லிட்டர் அளவுள்ள கலப்பட டீசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

டிரைவர் மதியழகன், கிளீனர் செல்வம், உரிமையாளர் திருப்பூரைச் சேர்ந்த இன்பராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதேபோல் பொள்ளாச்சி கே.ஜி.சாவடி எட்டிமடை கே.பி.எஸ். குடோன் அருகில் 12ஆம் தேதி வாகன சோதனையில் 4,000 லிட்டர் ஏற்றி வந்த லாரி மற்றும் வாகனங்களை ஓட்டி வந்த டிரைவர்கள் சபாபதி மற்றும் செல்வ கருப்பையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் சேலம் கேது நாயக்கன்பட்டியில் கடந்த 5ஆம் தேதி வாகன தணிக்கையில் 1,350 லிட்டர் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டு வெங்கடேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் சங்ககிரி முதல் எடப்பாடி ரோடு வாரி பேக்கரி முன்பு கடந்த 6ஆம் தேதி வாகன தணிக்கையில் 17,050 லிட்டர் கலப்பட டீசல் ஏற்றி வந்த லாரிகளின் உரிமையாளர்களான ஆரோக்கியராஜ், கவுதம், சங்கர் மற்றும் பழனிசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் நாமக்கல் தொட்டிப்பட்டியில் கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி 7,000 லிட்டர் கலப்பட டீசலை ஏற்றி வந்த லாரியின் ஒட்டுநர் மற்றும் உரிமையாளர் ஆனந்தராஜ், தமிழ்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல் முத்தாலப்பட்டி பைபாஸ் ரோட்டில் வாகன தணிக்கையில் கடந்த 1ஆம் தேதி 1,000 லிட்டர் கலப்பட டீசல் ஏற்றி வந்த லாரியின் டிரைவர் ஈஸ்வரன் கைது செய்யப்பட்டார். மேலும் சேலம் தேசிய நெடுஞ்சாலை பச்சபாளி ரோட்டில் 350 லிட்டர் கலப்பட டீசல் டேங்கரில் வைத்து அரசு அனுமதி இல்லாமல் கள்ளத்தனமாக அங்கு செல்லும் வாகனங்களுக்குக் குறைந்த விலையில் விற்பனை செய்ய வந்த டேங்கர் உரிமையாளர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து கலப்பட டீசல் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க கடுமையான நடவடிக்கை எடுக்க தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

-ராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக