வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

இன்று அன்னை தமிழில் அர்ச்சனை.. விரைவில் கோயில்களில் தமிழில் குடமுழுக்கு.. அமைச்சர் சேகர் பாபு அதிரடி

  Vigneshkumar   -  Oneindia Tamil  :   சென்னை: "அன்னை தமிழில் அர்ச்சனை" என்ற திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் விரும்பினால் இனி கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.
அதன்படி இன்று முதலாவதாகச் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் தமிழ் மொழியில் அர்ச்சனை தொடங்கப்பட்டது.
தமிழில் குடமுழுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் தமிழ் மொழியில் நடத்தப்பட்ட வழிபாட்டைத் தொடங்கி வைத்து, வழிப்பட்டார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "பெரும்பான்மை மக்கள் விருப்பப்பட்டால் தமிழ்நாட்டிலுள்ள அக்கோவில்களில் தமிழில் குடமுழுக்கு செய்யப்படும்.
அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.



எந்த விதமான சச்சரவுக்கு இடமில்லாமல், யார் மனதும் புண்படாமல், ஆகம விதிகளைப் பின்பற்றி முறையாகக் குடமுழுக்கு அனைத்து கோவில்களுக்கும் செய்யப்படும்.
முதற்கட்டமாக 47 பெரிய கோவில்களிலும் அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு 539 கோவில்களில் தமிழில் அர்ச்சனை விரிவுபடுத்தப்பட உள்ளது.

முருகர், விநாயகர், பெருமாள், சிவன், அம்மன் என தனித்தனி கடவுளர்களுக்கும் ஏற்ற வகையில் "போற்றிப் புத்தகங்கள்" தனித்தனியாக 14 வகைகளில் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளது. ஆடி மாத திருவிழாக்கள் கரணமாக மக்கள் கூட்டம் அதிகரிக்கலாம் என்பதால் சில கோயில்கள் மூடப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் எந்த மதத்தினரின் பண்டிகை வந்தாலும் சம்மந்தப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் மூடப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

 அறநிலையத்துறை அமைச்சராக சேகர் பாபு பொறுப்பேற்றது முதலே பல அதிரடி நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார். முதல்கட்டமாகத் தமிழ்நாட்டில் இருக்கும் கோயில்கள் நிலங்களை ஆக்கிரமித்தவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கோயில் நிலங்களில் கல்லூரிகள் கட்டப்படும் எனக் கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் சேகர் பாபு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக