வியாழன், 26 ஆகஸ்ட், 2021

தாலிபான்களால் ஆப்கனில் ஒரே வாரத்தில் 80 சதவீதம் குறைந்த தடுப்பூசி பணிகள்!

 தினமலர் : காபூல்:ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய ஒரே வாரத்தில் கோவிட் தடுப்பூசி போடும் பணிகள் 80% குறைந்துவிட்டதாக, யுனிசெப் தெரிவித்துள்ளது.
இதே நிலை நீடித்தால் ஆப்கனுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளில் பாதி விரைவில் காலாவதியாகிவிடும் என எச்சரித்துள்ளது.
அமெரிக்க படைகள் வாபஸ் பெற தொடங்கியதிலிருந்து ஆப்கனில் தலிபான்கள் வலுப்பெற தொடங்கினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு மாகாணங்களை கைப்பற்றியவர்கள், ஆகஸ்ட் 15 அன்று காபூலை கைப்பற்றினர்.
அதற்கு முந்தைய வாரம் 30 மாகாணங்களில் 1,34,600 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதும்,
இந்த எண்ணிக்கையானது 30,500 ஆக குறைந்ததாக யுனிசெப் தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள 34 மாகாணங்களில் 23-ல் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
ஆப்கனில் கடந்த ஜூன் மாதம் போலியோ தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை தலிபான்கள் திட்டமிட்டு சுட்டுக்கொன்றதாக அந்நாட்டு போலீசார் கூறினர். தடுப்பூசி மூலம் அமெரிக்கா ஆப்கானியர்களை கண்காணிக்க நினைப்பதாக தலிபான்களிடம் கருத்து உண்டு.

எனவே அங்கு சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட அஞ்சுகின்றனர். யுனிசெப் மூலம் சுமார் 20 லட்சம் ஜான்சன் மற்றும் ஜான்சன் தடுப்பூசிகள் ஆப்கனுக்கு வழங்கப்பட்டன. அதில் பாதி தடுப்பூசிகள் நவம்பரில் காலாவதி ஆகும் நிலையில் இருப்பதாக யுனிசெப் செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளார்.

4 கோடி மக்கள் தொகை கொண்ட ஆப்கனில் ஆகஸ்ட் 20 வரை 12 லட்சம் மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் தடுப்பூசி திட்டம் மூலம் 40 லட்சம் தடுப்பூசிகள் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது பற்றி பேசிய அத்திட்டத்தின் செய்தித் தொடர்பாளர், “நாட்டில் நிலவும் கலவர சூழலால் மக்கள் தங்கள் உயிர் மற்றும் உடைமைக்கு தான் முக்கியத்துவம் தருவார்கள். யுனிசெப் மற்றும் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து நாட்டில் தடுப்பூசி பணிகள் தொடர்வதை உறுதி செய்வோம்” என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக