செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

37 அணைகள் புனரமைப்பு: ரூ.610 கோடியில் உலக வங்கியுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்

37 அணைகள் புனரமைப்பு: ரூ.610 கோடியில் உலக வங்கியுடன் தமிழக அரசு ஒப்பந்தம்!

மின்னம்பலம் : தமிழ்நாட்டில்  37 அணைகள் புனரமைப்பு பணிக்கு ரூ.610 கோடியில் உலக வங்கியுடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது என்றும் முதலில் ஐந்து அணைகளுக்கு விரைவில் டெண்டர் விடப்படும் என்றும் நீர்வளத் துறை உயரதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின்  59 அணைகள் உட்பட 736 அணைகள் புனரமைப்பு திட்டத்துக்கு ஏற்கெனவே ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டு அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின், இரண்டாவது கட்டமாக அணைகள் புனரமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் 37 அணைகள் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


அதன்படி ரூ.54.47 கோடி செலவில் சாத்தனூர் அணை, ரூ.7.65 கோடியில் கிருஷ்ணகிரி அணை, ரூ.18.44 கோடியில் கெலவரப்பள்ளி அணை, ரூ.7.72 கோடியில் விடூர் அணை, ரூ.34.69 கோடியில் மணிமுக்தாநதி அணை, ரூ.7.48 கோடியில் மிருகானந்த நதி அணை, ரூ.4.25 கோடியில் சாத்தையாறு அணை, ரூ.8.40 கோடியில் இருக்கன்குடி அணை, ரூ.1.12 கோடியில் ராமநதி அணை, ரூ.2.50 கோடியில் வடக்கு பச்சையாறு அணை, ரூ.2.50 கோடியில் குண்டாறு அணை, ரூ.15.50 கோடியில் ஆணை குட்டம் அணை, ரூ.3 கோடியில் கடனாநதி அணை, ரூ.10.85 கோடியில் திருமூர்த்தி அணை உட்பட 37 அணைகளில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், உலக வங்கியுடன் அணைகள் இயக்கம் மற்றும் பராமரிப்பு ஒப்பந்தம் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக சோலையாறு, மேல் நீராறு, சாத்தனூர், கெலவரப்பள்ளி உட்பட ஐந்து அணைகளின் புனரமைப்பு பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, விரைவில் டெண்டர் விடப்பட்டு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட இருக்கிறது என்று நீர்வளத் துறை உயரதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

-ராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக