சனி, 14 ஆகஸ்ட், 2021

சிவசங்கர் பாபா: 300 பக்க குற்றப்பத்திரிக்கை!

 மின்னம்பலம் : பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபா மீது 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, அப்பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த ஜூன் 16ஆம் தேதி சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக மேலும் 18 மாணவிகள் புகார் அளித்ததையடுத்து, அவர் மீது மூன்று போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
 மூன்று வழக்குகளிலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் உள்ளார்.


சிவசங்கர் பாபாவின் அறையில் நடத்தப்பட்ட சோதனையில் கணினி, லேப்டாப் உள்ளிட்டவற்றில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த சிபிசிஐடி போலீசார், அப்பள்ளி ஆசிரியைகளிடமும் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கிலிருந்து ஜாமீன் வழங்கக் கோரி போக்சோ மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணையின்போது, இதுவரை சிவசங்கர் பாபா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால், அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், பாலியல் வழக்கில் சிவசங்கர் பாபா மற்றும் ஆசிரியைகள் பாரதி, சுஷ்மிதா, தீபா ஆகியோர் மீது 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 40 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெற்று அதற்கான ஆவணங்களும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

பாபா கைது செய்யப்பட்ட 59 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் ஜாமீன் மனு தள்ளுபடி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

-வினிதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக