ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

ஒரு பத்திரிகையாளரின் பார்வையில் …. அமரர் அமிர்தலிங்கம் 26 August 1927 – 13 July 1989

1981 மதுரை ஐந்தாவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டை கலைஞர் புறக்கணித்தார். அம்மாட்டுக்கு தலைமை தாங்கிய முதல்வர் எம்ஜியார் திரு அமிர்தலிங்கம் கலைஞர் கருணாநிதிக்கு ஆதரவானவர் என்ற எண்ணத்திலோ என்னவோ, மாநாட்டு தொடக்கநாளில் சம்பந்தமேயில்லாமல், அமிர்தலிங்கம்மீது சற்று காட்டமாகவே பேசினார் மாநாடு நடந்த ஆறு தினங்களும் எம்ஜியார் அமிர்தலிங்கம் மீது கொட்டிய தரமற்ற சொற்களே மாநாட்டு நிகழ்வுகளுடன் இணைந்த ஒரு பேசுபொருளாகவே தமிழ்நாடு முழுவதும் இருந்தது.
May be a black-and-white image of 1 person, sitting and indoor
அன்னை இந்திரா காந்தி - அமரர்கள் திரு திருமதி அமிர்தலிங்கம்

Subramaniam Mahalingasivam  :  அமிர்தலிங்கம் என்ற அரசியல் சொத்து! மந்திர உரை செய்த மாயம்
இலங்கையில் வாழ்கின்ற இரண்டு தேசிய இனங்களுமே ஒரே நதிமூலத்தையே கொண்டிருந்தாலும் அதாவது, இலங்கையின் ஆதி குடிகளான இயக்கர், நாகர், வேடர் என்ற இவர்களைத் தவிர்ந்த, சிங்களவர், தமிழர் என்ற இரு இனத்தவருமே இந்தியாவிலிருந்தே குடியேறியிருந்தபோதிலும்,
இலங்கையின் சரித்திரம் சிங்கள மக்களின் சரித்திரமாகவே எழுதப்பட்டது. மகாவம்சம்தான் இலங்கையின் ‘பைபிள்’போலானது.  
சோல்பரி அரசியலமைப்பில் பிரிட்டனிடமிருந்து இலங்கை சுதந்திரமடைந்த வேளையில்தான் இலங்கையில் எழுதப்படாது போன இலங்கைத் தமிழர்களின் சரித்திரம்பற்றிய ஒரு விழிப்பு எழத் தொடங்கியது.
அத்தோடு, தங்களுடைய வாழ்வுக் காலத்தில் தமிழ் இனத்தின் மொழி, பிரதேசம், சமூகம், கலாசாரம். கல்வி, பொருளாதாரம் சார்ந்த ஓர் அரசியல் விழிப்புணர்வும் அப்போதுதான் தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக ஏற்பட்டது; ஏற்படுத்தப்பட்டது.

அது, தங்களின் உரிமைக்கான ஒரு விடுதலைப் போராட்டமாகவும் வரலாற்றில் ஒரு வடிவத்தை எழுதத் தொடங்கியது.
தங்களுடைய அரசியல் உரிமைகளுக்காக சாத்வீக வழியிலான சமஷ்டி கோரிக்கையுடன் ஆரம்பித்த இந்த விடுதலைப் போராட்டம், ஈற்றில் தங்களுக்கென்று ஒரு தனிநாடு கோரிக்கையுடன் ஆயுத போராட்டமாக மாறி, உலக அரங்கிலும் அறியப்பட்டது. ஆக, சுதந்திரத்துக்குப் பின்னரான இந்த விடுதலைப் பேராட்ட வரலாற்றுக் காலத்தில், இலங்கைத் தமிழ் இனத்துக்கு எக் காலத்துக்குமான ஓர் அரசியல் சொத்தாக தன்னை அளித்தவர் அமிர்தலிங்கம்.
என்னுடைய பத்திரிகை வாழ்வு - பத்திரிகை அனுபவம் ஐம்பது ஆண்டுகளை அண்மித்துவிட்டது. இந்த வாழ்வில், அமிர்தலிங்கம் என்ற இந்த மனிதரை நான் தெரிந்துகொண்டதை மேலானதாக சொல்வேன். அவரைத் தெரிந்துகொண்டமை என்று சொல்வது, அவருடனான பழக்கத்தை நான் சொல்லவில்லை. அவரிடம் பொதிந்திருந்த எத்தனையோ வகையான உன்னதமான ஆற்றல்களையும் பண்புகளையும் அவற்றின் தனித்துவத்தையும் நான் உன்னிப்பாக தெரிந்துகொண்டேன்.
இலங்கைத் தமிழர்களுடைய விடுதலைப் போராட்டம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடன்தான் தொடங்குகிறது. இதை, அமிர்தலிங்கத்துடன் தொடங்கியது என்றும் சொல்லாம். முப்பது வருடங்கள் சாத்வீகவழியில் தீரங்களையும் தியாகங்களையும் நிறைத்த இப் போராட்டம், பின்னர் தீவிரவாத போக்கில் ஆயுத போராட்டமாக மாற்றம்பெற்றது. எஸ். ஜே. வி. செல்வநாயகமோ அல்லது ஜீ. ஜீ. பொன்னம்பலமோ சந்தித்திருக்காத மிகச் சிக்கலான ஒரு மாறுதல் காலத்து தலைவராக அமிர்தலிங்கம் விளங்கினார். அதுவும், முன்னரெப்போதும் இல்லாதவிதத்தில் அக்காலத்தில் பராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவுமிருந்தார். அத்துடன், நாட்டைப் பிரிக்கும் தனிநாடு கோரிக்கையுடன் அவர் அப்போது பாராளுமன்றம் சென்றிருந்தார்.
இப்படி, ஓர் அசுர நெருக்குதலில் மார்தட்டி, சாதுரியத்துடன் நிமிர்ந்து நின்ற ஒரு பெரும் தலைவர் அமிர்தலிங்கம். தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதனையொத்த இயக்கங்ளையும் தடைசெய்வதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது, குற்றக்கூண்டில் நிறுத்தப்பட்ட எதிரியைப்போல, அத்தனை சட்டவாதிகளினதும் சரமாரியான கணைகளை எதிர்த்து, தன்னையும் அவர்களையும் (புலிகளையும்) காட்டிக்கொடாது, கத்திமேல் நடந்ததான அந்த பேச்சு, அந்த நிலைமாறுகால தலைவனை புடமிட்டு காண்பித்தது. இப்போதும் சொல்வேன், அமிர்தலிங்கத்தின் இந்த உரையைத் தெரிந்த எவராலும், அவருக்கு எதிராக துப்பாக்கி நீட்ட முடியாது.    
துணிச்சலும், தீரமும், ஆளுமைகளும் மிக்க அரசியல்வாதியான அமிர்தலிங்கம், இலங்கையின் ஓர் உன்னத அரசியல் கனவானாக பரிணாமமானதை இக் காலப்பகுதியில் ஒரு பாராளுமன்ற நிருபராக அருகிருந்து நான் அவதானித்தேன்; கண்டேன். அவரைநான் தெரிந்துகொண்டதாக சொல்வது இதைத்தான். பொதுவாக, எல்லா பாராளுமன்ற நிருபர்களுமே இதனைத்  தங்களில் உணர்ந்தார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழ் மக்களின் அரசியலுக்கு அவர் பயன்படுத்தும் சாதுரியத்தில் அரசாங்கம் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொணர்ந்தது. ஆனால், இலங்கையின் மிகச் சிறந்த எதிர்க் கட்சிகட்சித் தலைவர் ஒருவராகவே அனைத்து கட்சிகளும், பல்கலைக்கழக மாணவர்கள், பௌத்த பிக்குகள் உள்பட்ட பெரும்பாலான சிங்கள மக்களும் அவரை மதித்தார்கள். உலக அரசியலில் சரித்திரமாகும் சிறிமாவோ பண்டாரநாயக்க, தன்னுடைய குடியுரிமையையும் இழந்து, அந்த பாராளுமன்ற சபையைவிட்டு வெளியேறுகையில் சொன்ன கடைசி வார்த்தை, ‘கௌரவ எதிர்க்கட்சித் தலைவரையும் கௌரவ நல்லூர் உறுப்பினரையும் (மு. சிவசிதம்பரம்) என் உயிருள்ளவரை மறக்கமாட்டேன்’, அவர் வார்த்தைகளால் மாத்திரம் இதைச் சொல்லவில்லை, அவர் கண்களில் அப்போது கண்ணீர் சொட்டியது.          
ஐந்து நிமிஷமோ அல்லது ஐந்து மணித்தியாலங்களோ, தமிழோ அல்லது ஆங்கிலமோ, சந்தர்ப்பத்துக்கும் சபைக்கும் ஏற்ப பேசவல்ல மகா சமர்த்தர் அமிர்தலிங்கம். இலங்கையின் அரசியலமைப்பு 1978இல் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ஆட்சி முறைக்கு மாற்றப்பட்டபோது, அந்த சட்டமூலம் மீதான விவாதத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி பங்குபற்றவில்லை. ஆனால், ஏன்  தாங்கள் அதில் பங்குபற்றவில்லை என்பதை விளக்கி, அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் ஐந்து மணித்தியாலங்கள் உரையாற்றினார். அது, அப்போது அந்த பாராளுமன்றத்தில் பேசப்பட்ட மிக நீண்ட உரையாகவிருத்தது. அமிர்தலிங்கத்தையடுத்து பிரேமதாச பேசினார். அவர் ஐந்தரை மணித்தியாலங்கள் பேசினார். அமிர்தலிங்கத்தின் பேச்சு சாதனையாகிவிடக்கூடாது என்பதற்காகவே பேசினார்.
ஆனால், அமிர்தலிங்கம் பேசி அமர்ந்தபோது, அப்போது சபாநாயகராகவிருந்த ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் அக்கிராசனத்தில் இருந்தபடி, குறிப்பொன்றை பாராளுமன்ற செயலாளர்மூலம் அர்தலிங்கத்திடம் சேர்ப்பித்தார். அதனைப் படித்த அமிர்தலிங்கம், சபாநாயகரைப் பார்த்து தலையை அசைத்து, ஒரு புன்முறுவல் செய்தார்.   
‘இப்படி ஓர் அருமைவாய்ந்த உரைக்கு தலைமைதாங்க கிடைத்ததையிட்டு நான் பெருமைப்படுகிறேன்’ என்று சபாநாயகரின் அந்தக் குறிப்பு இருந்தது.    
1977 பொதுத் தேர்தலில் இலங்கையில் சிறிமாவோ பண்டாரநாயக்கவினுடைய ஆட்சி மாறி, ஜே. ஆர். ஜயவர்த்தன புதிய ஆட்சியை அமைத்தார். அதுபோலவே இந்தியாவில் இந்திரா காந்தியினுடைய ஆட்சி மாறி, மொரார்ஜி தேசாய் பிரதமரானார். இந்த ஆட்சி மாற்றத்தில் ஜே. ஆர். ஜயவர்த்தனவும் மொரார்ஜி தேசாயும் புதிய நண்பர்களானார்கள். இலங்கையில் தமிழர் அரசியல் நடவடிக்கைகளில் இளைஞர்களின் தீவிரவாதமும் தீவிரமாகிக்கொண்டிருந்தது. அரசுக்கு தலையிடியாகும் இந்த விவகாரத்தைத் தணிக்கும் ஒரு முயற்சியாக, பிரதமர் ஜயவர்த்தனவின் அழைப்பில் மொரார்ஜி தேசாய் இலங்கை வந்தார். அவ்வேளையில் அவருடன் பேச அமிர்தலிங்கத்தின் அலுவலகம் பலவாறாக முயன்றும் முடியவில்லை. எனினும், பாராளுமன்றத்தில் மொரார்ஜி தேசாய்க்கான வரவேற்பில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் அமிர்தலிங்கத்துக்கு ஐந்து நிமிடங்கள் பேசுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.
பேச்சு முடிந்த பின்னர், மொரார்ஜி தேசாய் தரப்பிலிருந்து வந்த அழைப்பில், அமிர்தலிங்கம் சில சுற்றுக்கள் மோரார்ஜி தேசாயுடன் பேசினார். டெல்லி திரும்புமுன்னர், ‘இலங்கையில் தமிழர்களுடைய அரசியல் பிரச்னை, அவர்களுக்கு கௌரவமான விதத்தில் தீர்க்கப்படவேண்டும்’ என்று, பத்திரிகையாளர்களிடம் மொரார்ஜி தேசாய் குறிப்பிட்டார். விமான நிலைய வழியனுப்பு வைபவத்தில், இந்தியா வர அமிர்தலிங்கத்துக்கு ஒரு விசேட அழைப்பையும் மொரார்ஜி தேசாய் விடுத்தார்.
பாராளுமன்ற வரவேற்பில், அந்த ஐந்து நிமிட மந்திர உரையின் மாயம் இது.         
இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் தீர்வில் இந்தியாவின் முக்கியத்துவத்தையும் தேவையையும் சரியாக அதன் பரிமாணங்களோடு உணர்ந்தவர் அமிர்தலிங்கம். அதில் இந்திய தலைவர்களுடன் அவர் பேணிய உறவு ஒருபுறமிருக்க, இந்திய தலைவர்கள் இவரிடம் காண்பித்த மதிப்பும் அபிமானமும் கருத்தில் கொள்ளவேண்டியது. அதிலும், இந்திரா காந்தி ஓர் அரசியல் கனவானாகவே அவரை மதித்தார். அந்த மதிப்பில் அமிர்தலிங்கத்துக்கு இந்தியாவிலும் உலக நாடுகளிலும் அவசியமான ஆதரவுக்கு இந்திரா காந்தி பெரிதும் அநுசரணையாகவிருந்தார்.
டெல்லி ராஷ்டிரபதி பவனில், சுதந்திரதின இரவு விருந்துக்கு (1983) அமிர்தலிங்கத்தை அழைத்த பிரதமர் இந்திரா காந்தி, அவரை சில நிமிடங்கள் தாமதித்து வரச்சொன்னார். விருந்தினர்களுடன் நிறைந்திருந்த மண்டபத்தில் அமிர்தலிங்கம் பிரவேசித்தபோது, இந்திரா காந்தி எழுந்துவந்து அவரை வரவேற்றார். எல்லோர் கவனமும் அமிர்தலிங்கம்மீது திரும்பியது.    
தேர்தலில் தோல்வியுற்ற கருணாநிதி, 1981 மதுரை ஐந்தாவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டை புறக்கணித்தார். கருணாநிதிக்கு ஆதரவானவர் என்ற எண்ணத்திலோ என்னவோ, மாநாட்டு தொடக்கநாளில் சம்பந்தமேயில்லாமல், அமிர்தலிங்கம்மீது சற்று காட்டமாகவே முதலமைச்சர் எம். ஜி. ஆர். பேசியமை, ஆறு தினங்களும் மாநாட்டு நிகழ்வுகளுடன் இணைந்த ஒரு பேசுபொருளாகவே தமிழ்நாடு முழுவதும் இருந்தது. ஏழாம் நாள் இறுதிநாள் நிகழ்வுகளில் பிரதமர் இந்திரா காந்தி கலந்துகொண்டார்.
அன்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட இந்திரா காந்தி, மேடைகளில் அருகிலிருந்த எம். ஜி. ஆர். பக்கம் திரும்பவில்லை. மாலை, குதிரைப்பத்தய திடலில் பிரமாண்டமான முடிவு வைபவம். அங்கும் மேடையில் அருகருகேதான் இருந்தார்கள். அமிர்தலிங்கம் அங்கு வரவும் இந்திரா காண்பித்த வாஞ்சையில் திகைத்துப்போன எம். ஜி. ஆர்., அமிர்தலிங்கத்தை ஆரத் தழுவினார்.           
ஆக, இப்படி இந்தியாவுடன் - இந்திராவுடன் பேணிய - ஏற்படுத்திய நம்பிக்கையுடனான நட்பில் அமிர்தலிங்கம் ஈட்டிய சொத்து ஒன்றுதான் இலங்கை - இந்திய ஒப்பந்தம். இதனை இலங்கைத் தமிழ் மக்களுக்கான முழுமையான அரசியல் தீர்வாக எவருமே கொள்ளவில்லை  - சொல்லவில்லை. ஆனால் அதேவேளை, இது மிக எளிதாக ஏற்பட்டுவிட்ட ஒன்றும் அல்ல. தெற்கு ஆசியாவின் கிழநரியான ஜே. ஆர்., ‘இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட பின்னர், நான் தொடர்ந்து பதவியிலிருக்க எனக்கு பாதுகாப்பாக இருப்பீர்களா’ என்று இந்தியாவைக் கேட்டுத்தான் ஒப்பமிட்டார்.
ஒப்பந்தத்தைப்பற்றிய வாத பிரதிவாதங்களுக்குள் இப்போது செல்லவில்லை. ஆனால், ஒப்பந்தம் கைச்சாத்திட்ட தினம் அமிர்தலிங்கத்திடம் லண்டனிலிருந்து தொலைபேசியில் இந்திய அமைதிப்படை பற்றி கேட்டபோது. எந்த ஒரு நாட்டின் இராணுவமும் எக்காரணத்துக்காகவும் இன்னொரு நாட்டுக்குள் செல்வது பெரிதும் வரவேற்புக்குரியதல்ல. ஆனால், எங்களுடைய நிலைமையில் இந்திய இராணுவம் உடனடியாக வராவிட்டால், இங்கு பெரும் ‘மசக்கர்’ நடந்துவிடும் என்று சொன்னார்.
அமிர்தலிங்கத்துக்கும் இந்தியாவுக்குமிடையில் சில இரகசிய முன்னெடுப்புகள் நடைபெறுவதாகத்தான் அமிர்தலிங்கம் கொலைசெய்யப்பட்டார். அப்படியொரு முன்னெடுப்பு நிகழ்ந்திருந்தால், அது இந்திய - இலங்கை ஒப்பந்தத்தைவிட கூடுதலானதாக இருந்திருக்குமா அல்லது குறைந்ததாக இருந்திருக்குமா?
எப்படியிருந்தாலும், அது இப்போது முடிந்த கதை. அமிர்தலிங்கத்தின் வாழ்வும் அந்தக் கதையோடு முடிந்தது. ஆனால், அமிர்தலிங்கம் ஈழத் தமிழர்களின் அரசியல் சொத்து. அது, மறைக்கப்பட்ட ஒரு சொத்தாக இருப்பதுதான் நம்முடைய இனத்தின் அவலம்.
முப்பது ஆண்டுகள் சாத்வீக போராட்டமும் முப்பது ஆண்டுகள் ஆயுத போராட்டமுமாக இலங்கையில் தமிழர்களுடைய உரிமைப் போராட்டம் ஓய்ந்தபோது, மற்றொரு பத்தாண்டுகளை அதற்குப் பின்னர் தமிழர் அரசியலில் தலைப்பட்ட அரசியல்வாதிகள் கடத்திச் சென்றுவிட்டனர். நம்மிடமிருந்த - இருக்கின்ற சொத்துக்களை இவர்கள் தெரிந்திருக்கிறார்களோ என்னவோ ஆனால், நம்முடைய மக்களுக்கு ஓரளவுக்கு பயனாகவல்லதாக நம்மிடம் இப்போது இருப்பது அமிர்தலிங்கம் தேடிவைத்த இலங்கை - இந்திய ஒப்பந்தம்தான். அதனை நம்முடைய மக்களுக்கு பயனாக்குவதுதான் இந்த அரசியல் வாதிகள் இப்போது அவசியமாக செய்யவேண்டியதும் செய்யக்கூடியதுமாகும்.
- மாலி
`ஈழநாடு' வாரமலர் - 29.08.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக