சனி, 7 ஆகஸ்ட், 2021

ஆப்கானில் உச்சக்கட்ட பதற்றம்..வெறும் 24 மணி நேரத்தில் 2முக்கிய நகரங்கள்.. தாலிபான்களின் அசுர வளர்ச்சி

Vigneshkumar -   Oneindia Tamil News : காபூல்: ஆப்கான் அரசுப் படைகள் மீது தாலிபான்கள் தங்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், வெறும் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு பிராந்திய தலைநகரைத் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த கடந்த 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்கப் படைகள் கடந்த சில வாரங்களுக்கு முன் இருந்து வெளியேறத் தொடங்கிவிட்டன.
இன்னும் சில வாரங்களில் அமெரிக்கப் படைகள் முற்றிலுமாக வெளியேறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தனை காலம் இதற்காகவே காத்திருந்த தாலிபான்கள், அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதுமே தங்கள் தாக்குதலைத் தொடங்கிவிட்டனர்.
தாலிபான்கள் தாலிபான்கள் கடந்த காலங்களைப் போல இல்லாமல், இந்த முறை தாலிபான்களின் திட்டம் புதிய வகையில் இருந்தது. அதாவது இந்த முறை எல்லைப் பகுதிகளைக் கைப்பற்றுவதில் தாலிபான்கள் அதிக ஆர்வம் காட்டினர். இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே வர்த்தகம் அதிகளவில் நடைபெறும் முக்கிய எல்லை கடக்கும் பகுதிகளை விரைவாக தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதன் பிறகு மெல்லக் கிராமங்கள், சிறு நகரங்களைக் கைப்பற்றத் தொடங்கினர்.

இதுவரை ஆப்கனில் இருக்கும் சுமார் 80% பகுதிகளைக் கைப்பற்றியுள்ளதாகத் தாலிபான்கள் அறிவித்துள்ளன. மேலும், பல இடங்களில் பேச்சுவார்த்தை மூலம் கைப்பற்றியுள்ளதாகவும், பல்வேறு இடங்களில் ஆப்கன் ராணுவம் சரணடைந்து வருவதாகவும் தாலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டன. மக்கள் அதிகளவில் வசிக்கும் முக்கிய நகர்ப்புறங்களில் மட்டும் தங்கள் தாக்குதலைத் தாலிபான்கள் தொடங்காமல் இருந்தனர்.

இந்தச் சூழலில் நேற்றைய தினம் தெற்கு நிம்ரோஸ் மாகாணத்தின் தலைநகர் ஜராஞ்ச்சை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதும், தாலிபான்கள் கைப்பற்றும் முக்கிய நகராக இந்த ஜராஞ்ச் உள்ளது. இதுவரை நகர்ப்புறங்களில் தங்கள் தாக்குதல்களைத் தொடங்காமல் இருந்த தாலிபான்கள் இப்போது அதையும் தொடங்கியுள்ளன. ஜராஞ்ச் நகரிலுள்ள ஆளுநர் அலுவலகம், போலீஸ் தலைமையிடம் ஆகியவற்றைத் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த வெற்றி தாலிபான்களுக்கு புதியதொரு உத்வேகத்தை அளித்துள்ளது. இந்த வெற்றியைத் தாலிபான்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக இந்த ஜராஞ்ச் பகுதி ஈரான் எல்லையில் அமைந்துள்ளதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அதிலும் எந்தவொரு பெரிய தாக்குதலையும் மேற்கொள்ளாமல் இந்த நகரைத் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக்கக் கூறப்படுகிறது இந்த வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த முக்கிய நகரங்களில் தாலிபான்கள் தங்கள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், 24 மணி நேரத்தில் 2ஆவது நகராக ஜவ்ஜானில் உள்ள ஷெபர்கன் நகரத்தைத் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஆப்கன் அரசுப் படைகள் மற்றும் அதிகாரிகள் விமான நிலையத்திற்குப் பின்வாங்கிவிட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்கு இரண்டு முக்கிய மாகாண தலைநகர்களைக் கைப்பற்றியுள்ளது தாலிபான்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.

காபூலில் தாலிபான்கள் நடத்திய மற்றொரு தாக்குதலில் அரசு ஊடகங்கள் மற்றும் தகவல் மையத்தின் தலைவர் தாவா கான் மேனாபாலை தாலிபான்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான், அமைச்சர் ஒருவர் குறி வைத்து தாலிபான்கள் தாக்குதல் நடத்தினர். நல்வாய்ப்பாக அவர் தப்பித்துக் கொண்டார். ஆனால், இந்த முறை ஊடக செய்தித்தொடர்பாளரை தாலிபான்கள் கொன்றுள்ளனர். ஆப்கானில் தற்போதுள்ள அரசு கவிழும் வரை உள்நாட்டுப் போருக்கு முடிவே இல்லை என தாலிபான்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக