புதன், 14 ஜூலை, 2021

திரைக்கதை, கதை சுருக்கம் Logline ... உங்களுக்கு திரைப்பட உருவாக்கத்தில் ஆர்வம் இருந்தால்....

No photo description available.

Singara Velan  :  logline.  : சில வாரங்களுக்கு முன்பு லைகா நிறுவனம் எல்லோரிடமும் கதை சுருக்கம் (Synopsis) கேட்டிருந்தது. ஆனால் நிறைய பேரிடம் திரைக்கதை மட்டுமே இருந்ததால் அவசரம் அவசரமாக கதை சுருக்கத்தை எழுதி அனுப்பி இருப்பீர்கள்.
அதேபோல் நிறைய பேர் கதை சுருக்கத்தை அனுப்பும் போது கூடவே Logline ம் சேர்த்து அனுப்பி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்திருப்பீர்கள். ஏனென்றால் இந்த Logline என்பது மிக முக்கியமானது. அதேசமயம் நிறையப் பேருக்கு இது அவ்வளவு சுலபத்தில் எழுத வந்துவிடாது என்பதுதான் பிரச்சினை.
நிறைய பேர் நினைக்கலாம். திரைக்கதை, கதை சுருக்கம் இருந்தால் போதும் Logline அவ்வளவு முக்கியம் இல்லை என்று. ஆனால் இது உண்மை அல்ல. முன்பெல்லாம் எந்த நிறுவனமும் யாரிடமும் திரைக்கதைகளை கேட்பது கிடையாது. ஆனால் இன்று கதை சுருக்கத்தை அனுப்புங்கள் என்று கேட்கும் அளவிற்கு காலம் முன்னேறியுள்ளது. நிச்சயம் நாளை கதை சுருக்கம் வேண்டாம். Logline மட்டும் அனுப்புங்கள் போதும் என்று சொல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் ஆயிரக்கணக்கான பேர் நாளை கதை சுருக்கத்தை அனுப்பும் போது அவற்றை படிப்பதற்கு அவர்களுக்கு நேரம் இருக்காது.


முதலில் ஒரு Logline எப்படி எழுத வேண்டும் என்பதை விட அதில் எதுவெல்லாம் இருக்கக் கூடாது என்பதை பார்த்து விடலாம்.
1. கதாபாத்திரங்களின் பெயர் இருக்கக் கூடாது.
மாணிக்கம் என்பவன் சென்னையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டு அமைதியாக வாழ்ந்து வருகிறான்.‌ ஒரு ரௌடி அவன் வாழ்க்கையில் குறுக்கிடவே மாணிக்கம் என்பவன் மும்பையில் மானிக் பாட்ஷாவாக ஒரு டானாக எப்படி வாழ்ந்தான் என்று கதை விரிகிறது.
இதில் மாணிக்கம், மாணிக் பாட்ஷா போன்றவை தேவையில்லை. ஏனென்றால் இந்த பெயர்கள் படிப்பவர்களுக்கு பிடிக்காமல் போய்விட்டால்..?
2. துணை நடிகர்கள் வரக் கூடாது.
அமைதியாக வாழ்ந்து வரும் ஒரு ஆட்டோ ஓட்டுனர் தன் தங்கைகளின் திருமணத்திற்காக, தன் தம்பியின் எதிர்காலத்திற்காக...
இந்த அண்ணன், தம்பி, தங்கை, நண்பன் போன்றவர்கள் தேவையில்லை.‌ நேராக ஹீரோ, ஹீரோயின், வில்லன் என்று விஷயத்திற்கு வந்துவிட வேண்டும். அதேசமயம் கதையே நட்பு, பாசத்தை பற்றியது என்றால்தான் நண்பன், தங்கையை குறிப்பிட வேண்டும்.
3. ஒற்றை வரியில் இருக்கக் கூடாது.
அமைதியான மனிதன் ஒரு மாஃபியா வாக மாறினால்...
ஒரு சாதாரண மனிதன் ஒருநாள் முதல்வரானால்....
லஞ்சம் வாங்குபவர்களை ஒருவர் கொலை செய்தால்...
இந்த மாதிரி ஒற்றை வரியில் இருக்கக் கூடாது. ஒரு கதையை பற்றிய முழு விவரமும் இருக்க வேண்டும்.
அப்படி என்றால் ஒரு Loglineல் எவை இருக்க வேண்டும்?
1. Protoganist மற்றும் Antoganist இருக்க வேண்டும். அவர்களுடைய தொழில்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
Protoganist என்பது ஹீரோ அல்லது முதன்மை கதாப்பாத்திரம். Antoganist என்பது எதிர்ப்பாளர் அல்லது வில்லன். இங்கு வில்லன் என்பது சுனாமி, நிலநடுக்கம், ஏலியன்ஸ் என்றுகூட இருக்கலாம்.
அதேபோல் ஒரு சாதாரண மனிதன் திடீரென்று ஒருநாள் முதல்வரானால்... என்று இல்லாமல் ஒரு ரிப்போர்ட்டர் ஒருநாள் முதல்வரானால்... என்று அந்த ஹீரோவின் தொழில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
2. Inciting Incident.
ஒரு ஹீரோவை ஒரு முக்கியமான செயலை செய்வதற்கு அவனைத் தூண்டி கதையை ஆரம்பிப்பதற்கும், அந்த கதைக்குள் பார்வையாளர்களை உள்ளே இழுக்க வைக்கும் அந்த காட்சிக்கு பெயர் தான் Inciting Incident (தூண்டுதல் சம்பவம்).
எது இல்லை என்றாலும் இது அவசியம் இருக்க வேண்டும். இதுதான் ஒரு கதையின் தரத்தை முடிவு செய்யும்.
ஒரு ஆளைக் கடத்த இருப்பதைப் பற்றிய செய்தி போலீஸுக்கு தெரிந்துவிடுகிறது. தன் கூட்டத்தை சேர்ந்தவன் தான் அந்த உளவாளி என்பது அந்த தலைவனுக்கு தெரிந்தாலும் அதையும் மீறி அந்த ஆளை எப்படி கடத்துகிறார்கள் என்பதுதான் கதை.
உளவாளி போலீஸுக்கு ரகசியத்தை சொல்லும் இடம் அல்லது கொள்ளைக் கூட்ட தலைவனுக்கு இது தெரிய ஆரம்பித்த பிறகு தன்னுடைய திட்டத்தை மாற்ற ஆரம்பிக்கும் இடம். இவற்றில் ஏதாவது ஒன்று Inciting Incident ஆக இருக்கலாம்.
3. Major Conflicts or Challenges.
கதையின் முக்கியமான பிரச்சினைகள் அல்லது சவால்கள் அவசியம் இடம் பெற வேண்டும்.
ஹுரோ ஒரு ஆளைக் கடத்த இருப்பது போலீஸுக்கு தெரிந்துவிடுகிறது. இறுதியில் ஹீரோ வெற்றிப் பெற்றானா அல்லது போலீஸ் அவர்களை பிடித்ததா என்பதுதான் கதை.
இதில் சுவாரஸ்யம் எதுவுமே இல்லை. ஏனென்றால் இதில் எந்த பிரச்சனையும் சொல்லப்படவில்லை.
மாறாக தன் கூட்டத்தை சேர்ந்தவன் போலீஸுக்கு தகவல் கொடுப்பது, ஹீரோ தன் திட்டத்தை மாற்றுவது போன்றவற்றை சேர்த்து எழுதும் போது அந்த Logline சுவாரஸ்யமான ஒன்றாக மாறிவிடுகிறது.
இவற்றைத் தாண்டி இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் இவையே போதுமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக