செவ்வாய், 20 ஜூலை, 2021

திமுக வழக்கறிஞர் அணியில் சலசலப்பு.. "இதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டோம்.." சத்தமாக கேட்கும் முனுமுனுப்பு

 Veerakumar  -  Oneindia Tamil :   சென்னை: திமுக வழக்கறிஞர் அணியிலிருந்து அதிருப்தி முனுமுனுப்புகள் அதிகம் கேட்கத் தொடங்கியுள்ளது.
இதற்கு காரணமும் இருக்கிறது. திமுக வழக்கறிஞர் அணி எப்போதுமே மிகவும் பலமானது.
எத்தனையோ வாய்தா கேட்டு இழுத்தடிப்பு செய்தாலும்கூட இறுதியாக சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவர் தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு சிறை தண்டனை பெற்றுத் தரும் அளவிற்கு உரிய ஆவணங்களை திரட்டியது.
ஜெ. வழக்கில் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டதில் திமுக வழக்கறிஞர் அணிக்கு பெரிய பங்கு இருக்கிறது.
வழக்கறிஞர் அணி முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவின்போது மெரினா கடற்கரையில் அவருக்கு நினைவிடம் அமைப்பதற்கு அப்போதைய எடப்பாடி பழனிசாமி அரசு நிலம் ஒதுக்க மறுத்தது.
இதை எதிர்த்து நள்ளிரவிலும் கூட நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி, சட்ட பாயிண்ட்களுடன் நீதிபதியை சம்மதிக்க வைத்ததிலும் திமுக வழக்கறிஞர்களின் பங்கு அபாரமானது. இந்த வழக்கில் வாதாடிய வில்சன் ராஜ்யசபா எம்பியாக்கப்பட்டார்.



அதிமுகவும் அப்படித்தான் இதேபோன்று ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்காக ஆஜராகி வந்த நவநீதகிருஷ்ணன் வழக்கை வெகு நாட்களுக்கு இழுத்தடிப்பு செய்ய மிக முக்கிய பங்காற்றினார். ஜெயலலிதா நேரில் ஆஜராகாமல் தொடர்ந்து விலக்குகளை பெற்றபடியே இருந்தார். எனவே, அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இப்படி வழக்கறிஞர் அணிக்கு இரு திராவிட கட்சிகளும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளன. ஆனால், இப்போது திமுக 10 வருடங்கள் கழித்து அதிகாரத்துக்கு வந்துள்ள நிலையில், வழக்கறிஞர் அணியினர் பதவிகளைப் பெறலாம் என்று நினைத்திருந்தால், கட்சியின், வேறு பிரிவுகளில் இருந்து போட்டி அதிகரித்து இருக்கிறது.

பதவியிடங்கள் விஷயம் இதுதான்.. தமிழக நீதிமன்றங்களில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள், ப்ளீடர்கள் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப சமீபத்தில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் திமுகவின் வழக்கறிஞர் அணியில் இருப்பவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பார்கள். கட்சி மேலிடமும் வழக்கறிஞர் அணியிலிருந்துதான் தகுதியானவர்களை தேர்வு செய்யும்.

பல அணிகளும் போட்டிக்கு வருகிறது இந்த முறை இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணியில் இருக்கும் வழக்கறிஞர்கள் பலரும் அரசு வழக்கறிஞர் பதவியை கைப்பற்ற விண்ணப்பித்து உதயநிதி மூலமாகவும், திமுக குடும்பத்தினர் மூலமாகவும்முயற்சித்து வருகின்றனர். இதனால் போட்டிகள் அதிகரித்துள்ளது.

சட்டப் போராட்டங்கள் இது ஒருபுறமெனில், கடந்த 10 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஆளும் கட்சியினர் தொடர்ந்த வழக்குகளை எதிர் கொள்ள, கட்சிக்காக சட்ட போராட்டங்களை நடத்தியது நாங்கள் . இப்போ இளைஞரணியும், மாணவர் அணியும் மகளிர் அணியும் பதவிகளை கைப்பற்ற நினைப்பது அநியாயம் என்ற குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.

அதிருப்தி குரல்கள் "வழக்கறிஞர் பிரிவில் உள்ள பலருக்கும் பல ஆண்டு கால சட்டத்துறை அனுபவம் இருக்கிறது . சீனியாரிட்டியும் இருக்கிறது. ஆனால், தலைமையின் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மட்டும்தான் இல்லை. குடும்ப உறவுகளின் சிபாரிசில் மற்ற அணியிலுள்ள வழக்கறிஞர்கள் எங்களுக்குரிய பதவிகளை கைப்பற்ற நினைப்பது ஜீரணிக்க முடியவில்லை.." என்கிற புலம்பல்கள் வழக்கறிஞர்கள் அணியில் அதிக டெஸிபலில் கேட்கிறது. கட்சித் தலைமை இவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும். இத்தனை காலமாக தொடர்ந்து, திமுகவிற்கு சட்டப் போராட்டத்திற்கு கை கொடுத்ததால், சட்டத்துறை தொடர்பான பதவிகளில் வழக்கறிஞர் அணியினருக்குத் தான் முன்னுரிமை தர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக