புதன், 14 ஜூலை, 2021

தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமா சிறையில் .. இந்தியர்களுக்கு எதிராக வெடித்துள்ள கலவரம்

Durban, South Africa

.vikatan.com : ஜூமா சிறையிலடைக்கப்பட்டதை எதிர்த்துவரும் அவரின் ஆதரவாளர்கள், நாடு முழுவதும் வன்முறையில் இறங்கியுள்ளனர். இதில் அந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். செய்து முடிக்கும் வரை செய்ய முடியாதது போலத்தான் இருக்கும்' என்ற வரிகளைத் தாரக மந்திரமாகக் கொண்டு, நிற வெறிக்கு எதிராகப் போராடியவர் நெல்சன் மண்டேலா. வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டு, தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு, 27 ஆண்டுகள் சிறைவாசத்தில் இருந்தவர் அவர். விடுதலைக்குப் பிறகு, ஜனநாயக வழியில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமை பெற்ற தலைவர், மண்டேலா.

Looters outside a shopping centre alongside a burning barricade in Durban, South Africa
Looters outside a shopping centre alongside a burning barricade in Durban, South Africa
AP Photo / Andre Swart
உலக அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற மண்டேலாவின் சொந்த மண்ணில், இந்திய வம்சாவளியினர் மீது வெறி கொண்டு தாக்குதல்

 நடத்திக் கொண்டிருக்கிறார்கள், தென் ஆப்பிரிக்க மக்கள். கடந்த 2009-ம் ஆண்டில், தென் ஆப்பிரிக்காவின் அதிபராகப் பொறுபேற்ற ஜேக்கப் ஜுமாவின் மீது 1000 கோடி ரூபாய் ஊழல் புகார் சொல்லப்பட்டது. அதனால், கடந்த 2018-ம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்தார், ஜூமா. தொடர்ந்து, புதிய அதிபராக தென் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைவரான சிறில் ரமபோசா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

`ஊழல் வழக்குகளில் விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும்’ என்று ஜேக்கப் ஜுமாவுக்கு உத்தரவிட்டது, அந்நாட்டின் அரசியல் சாசன அமர்வு நீதிமன்றம். அதை ஏற்க மறுத்த ஜேக்கப் ஜுமாவுக்கு சட்டத்தை அவமதித்த காரணத்துக்காக, கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி, 15 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கியது, அந்நாட்டின் உச்ச நீதிமன்றம். தொடர்ந்து கடந்த ஜூலை 7-ம் தேதி ஜேக்கப் ஜுமா சரணடைய, அவர் நெடால் மாகாணத்திலுள்ள ஈஸ்ட் கோர்ட் சிறையில் அடைக்கப்பட்டார். ஜூமா சிறையிலடைக்கப்பட்டதை எதிர்த்துவரும் அவரின் ஆதரவாளர்கள், நாடு முழுவதும் வன்முறையில் இறங்கியுள்ளனர். இதில் அந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மிக்கிசெட்டி, மாஸ்டர் மெல்வின் ரெட்டி, டாக்டர். மேஸ்திரி
மிக்கிசெட்டி, மாஸ்டர் மெல்வின் ரெட்டி, டாக்டர். மேஸ்திரி

இது குறித்துப் பேசிய தென் ஆப்பிரிக்காவில் உள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் மிக்கி செட்டி, ``இதுவரை ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலவரத்தில் இறந்துள்ளனர். இதனால் தென் ஆப்பிரிக்காவில் பதற்றம் உருவாகி, பொது அமைதி கெட்டுப்போய்க் கிடக்கிறது. காவல்துறையும் ராணுவமும் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு அமைதியாக வேடிக்கை பார்த்துவருவது, கொடுமையின் உச்சம். இதனால் உலக அரங்கில் தலைகுனிவைச் சந்தித்துள்ளது, தென் ஆப்பிரிக்கா.

இக்கலவரத்தில், மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் அங்கு குடியேறிய இந்திய சமூகத்தினர் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். இந்தியர்களை இங்கிருந்து வெளியேற்ற முயற்சிகள் நடக்கின்றன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர்களான குப்தா சகோதரர்கள், ஜேக்கப் ஜுமா மீது சாட்டப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான், இந்திய வம்சாவளியினர் மீது கோபம் கொண்டு தாக்கி வருகிறார்கள், தென் ஆப்பிரிக்க மக்கள். `இங்கு வாழும் நாங்கள் மொழியால் பிரியாமல் ஒன்றிணைந்து ஒருவரை ஒருவர் பாதுகாத்து வருகிறோம். சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வீடுகளையும், தொழிற்சாலைகளையும் பாதுகாத்து வருகிறார்கள், எங்கள் தன்னார்வ இளைஞர்கள்" என்கிறார்.

Looters make off with goods at a store in Durban, South Africa
Looters make off with goods at a store in Durban, South Africa
AP Photo/Andre Swart

தென் ஆப்பிரிக்காவில் உள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் டாக்டர் மேஸ்திரி, ``மொத்த பொருளாதாரமும் கலவரக்காரர்களால் சூறையாடப்பட்டுவிட்ட நிலையில், எதிர்காலத்தைப் பற்றிய கவலையில், நம்பிக்கை இழந்து நடைப்பிணமாய் இருக்கிறோம். இலங்கை, மியான்மர் போன்ற நாடுகளில் வாழ்ந்த இந்தியர்களின் குடியுரிமையும் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டதைப் போன்ற நிகழ்வு நடந்து விடக்கூடாது என்ற அச்சத்திலிருக்கிறோம்.

எங்களுக்காக இறைவனிடம் வேண்டுங்கள். பூட்டிய வீட்டுக்குள் உணவு, மருந்து இல்லாமல் முடங்கிக் கிடக்கிறோம். வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்ல முடியாத இக்கட்டான நிலைமையில் இருக்கிறோம். இந்திய அரசும் சர்வதேச சமூகமும் தென் ஆப்பிரிக்காவில் நிலவுகிற இந்த அசாதாரண சூழலை கவனத்தில் கொண்டு உடனடியாக சகோதர சமத்துவ வாழ்வுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார்.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள `கிளேர் வுட் தமிழ்ச் சங்க’த்தின் தலைவர் மாஸ்டர் மெல்வின் ரெட்டி, ``அமெரிக்காவில் ஒரு கறுப்பினத்தவர் தாக்கப்பட்டால் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பது போல, எங்களைப் பாதுகாக்க அரசியல் எல்லைகளைக் கடந்து அரசியல் கட்சிகளும் மற்ற நாட்டு அரசுகளும் குரல் கொடுக்க வேண்டும்.

Durban, South Africa

இந்திய அரசு, டெல்லியில் உள்ள தென் ஆப்பிரிக்கா தூதரை உடனடியாக அழைத்து தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். வெளிவிவகாரத் துறையின் மூலம் தென் ஆப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். தென் ஆப்பிரிக்காவின் காவல்துறையும் ராணுவமும் கையறு நிலையில் இருக்கிற வேளையில், ஐ.நா மன்றத்தின் அமைதிப்படையை அனுப்பி அமைதியை நிலைநாட்ட வேண்டும்" என்கிறார்.

தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் இழப்புகளைச் சந்தித்துக் கொண்டேதான் இருப்பார்கள், தென் ஆப்பிரிக்காவில் வாழும் இந்திய சமூகத்தினர்.

- மல்லை.சி.ஏ.சத்யா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக