புதன், 21 ஜூலை, 2021

ஆயுள் தண்டனை கைதிகளை முன்விடுதலை செய்ய வேண்டும்...” - மு. தமிமுன் அன்சாரி

நக்கீரன் செய்திப்பிரிவு  :  இன்று (21.07.2021) தியாக திருநாளான பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகைக்குப் பிறகு, நாகை மாவட்டம் தோப்புத்துறையில் மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “கடந்த இரண்டு ரமலான் பண்டிகைகளையும், ஒரு பக்ரீத் பண்டிகையையும் கரோனா காரணமாக கொண்டாட முடியவில்லை. இவ்வாண்டு தொற்று குறைந்துள்ளதால் முகக் கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியோடு மக்கள் தொழுகை நடத்தி பிரார்த்தனை செய்தனர்.
பக்ரீத் வாழ்த்து அறிக்கைகள் விடுத்த தலைவர்கள், சமூக வலைதளங்கள் வழியாக வாழ்த்து கூறிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கரோனா தொற்று ஒழிந்து உலகம் மீண்டு வரவும், மக்கள் மகிழ்ச்சியான இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்பதும் முக்கிய பிரார்த்தனையாக இருந்தது.


 
எதிர்வரும் அண்ணா பிறந்தநாளையொட்டி, 10 ஆண்டுகளை நிறைவுசெய்த ஆயுள் தண்டணை கைதிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். அதில் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் மற்றும் 60 வயதைக் கடந்த  கைதிகளுக்கும், நோயாளி கைதிகளுக்கும் அவர்களுக்கு முன் விடுதலை கிடைக்கும்வரை வீடுகளிலேயே தங்கியிருக்க பரோல் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்தியதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது. இதற்காக தமிழக முதல்வருக்குப் பாராட்டுகள்” என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக