செவ்வாய், 13 ஜூலை, 2021

டிவி விவாதங்களில் இனி அதிமுக பங்கேற்காது! உண்மை காரணம் என்ன?

மின்னம்பலம் : ஊடக விவாதங்களில் அதிமுக கழக நிர்வாகிகளோ, செய்தித் தொடர்பாளர்களோ, கழகத்தைச் சார்ந்தவர்களோ... யாரும் இனி பங்கேற்க மாட்டார்கள் என அதிமுக தெரிவித்துள்ளது.
தற்போது தொலைக்காட்சி விவாதங்கள் தவிர்க்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக மாறிவிட்டது. நாட்டில் நடக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் எனப் பல தரப்பினரும், விவாதம் நடத்தி தங்களது கருத்துகளைப் பதிவு செய்வார்கள். இதுபோன்ற விவாதங்களில் ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பிலும் பேச்சாளர்கள் அல்லது நிர்வாகிகள் பங்கேற்பது வழக்கம். ஆனால், இனி தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுக பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (ஜூலை 12) அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,   உண்மை காரணம் என்ன? விரிவான கட்டுரை



“மக்களின் அடிப்படைத் தேவைகள், தினசரி பிரச்சினைகள் பல இருக்கின்றபோது, அதைப்பற்றி எல்லாம் சிறிதளவும் கவலைப்படாமல், ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாக இருக்கக் கூடிய ஊடக நிறுவனங்கள், அதிமுகவின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் சிறுமைப்படுத்தும் நோக்கிலும் மனம்போன போக்கில் ஊடக அறத்திற்குப் புறம்பாகவும் கழகத் தலைவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்ற விதத்திலும், விவாதத் தலைப்புகளை வைத்து நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவது வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது.

மேற்சொன்ன காரணங்களால், ஊடக விவாதங்களில் அதிமுக சார்பில் கழக நிர்வாகிகளோ, செய்தித் தொடர்பாளர்களோ, கழகத்தைச் சார்ந்தவர்களோ யாரும் இனி பங்கேற்க மாட்டார்கள் என்பதையும் எங்களைப் பிரதிநிதிப்படுத்துவதாகக் கூறிகொண்டு யாரையும் வைத்து பேசுவதை நிறுத்துமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கழகத்தின் பெயரை வேறு எந்த வகையிலும் பிரதிபலிக்கும்படி யாரையும் தங்கள் ஊடக வழியாகக் கருத்துகளை தெரிவிக்க அழைக்கவோ, அனுமதிக்கவோ வேண்டாம் என்றும் வேறு யாரையும் அழைத்து அவர்களை அதிமுக என்று அடையாளப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக