வியாழன், 29 ஜூலை, 2021

ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ரா: ஆபாசப் படம் , கோடிகளில் வாழ்க்கை, சர்வதேச தொடர்புகள்

ராஜ் குந்த்ரா

BBC  :ஆபாச படங்கள் தயாரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறார் நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ரா. இந்த வழக்கில் அவருடன் சேர்த்து ரயான் தார்ப் என்பவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு உள்ளார்.
கடந்த 20ஆம் தேதி கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ரா, ஆபாச படங்களை தயாரித்ததாக காவல்துறை தரப்பு நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியிருக்கிறது. அதன் பேரில் அவரை முதலில் 23ஆம் தேதிவரையும் பின்னர் 27ஆம் தேதிவரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்த மும்பை நீதிமன்றம், பின்னர் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காலில் வைக்க உத்தரவிட்டது. மும்பையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓடிடி தளங்களில் வெளியாவதற்காக தயாரிக்கப்பட்ட ஏராளமான ஆபாச காட்சிகள் நிறைந்த ஹார்டு டிஸ்குகளை மும்பை காவல்துறையினர் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்காக சமீபத்தில் நேரில் அழைக்கப்பட்ட ராஜ் குந்த்ராவை பின்னர் காவல்துறையினர் கைது செய்தனர். ராஜ் குந்த்ராவுக்கான போலீஸ் காவலை நீட்டிக்க காவல்துறை விரும்பியது. ஆனால், அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆபாச படங்களை வெளியிட்டு அதன் மூலம் பணத்தை வசூல் செய்த ராஜ் குந்த்ரா, வியான் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். அதில் ஏராளமான அன்னிய செலாவணி பரிவர்த்தனையில் ராஜ் குந்த்ரா ஈடுபட்டதாக கூறப்பட்டது.

தொடர்புகளுக்கு உதவிய வாட்ஸ்அப் குழுக்கள்

ராஜ் குந்த்ராவிடம் நடத்திய விசாரணையில், "ஹாட்ஷாட்ஸ் செயலியில் தகவல்களை பகிரும் முன்பாக, தமது தொடர்புகளில் இருப்பவர்களை இணைக்கும் வகையில் மூன்று வாட்ஸ்அப் குழுக்களை ராஜ்குந்த்ரா உருவாக்கியதாக காவல்துறை தரப்பு கூறுகிறது. அந்த குழுவில் நடிகர், நடிகைகளின் சம்பளம், காணொளிகள், இதர விவரம் விவாதிக்கப்பட்டன.

ஆரம்பத்தில் தமது கூட்டாளி உமேஷ் குமாருடன் சேர்த்து ஹாட்ஷாட்ஸ் செயலியை ஆர்ம்ஸ் பிரைம் மீடியா நிறுவனம் மூலம் கெர்னின் என்ற நிறுவனத்துக்காக உருவாக்கினார் ராஜ் குந்த்ரா. பிறகு ஆர்ம்ஸ் பிரைம் மீடியா நிறுவனத்தில் இருந்து அவர் விலகினார்.

ஆபாச காணொளிகள் தயாரித்து அவற்றின் மூலம் பணம் சம்பாதிக்கவே இந்த நிறுவனத்தை அவர் உருவாக்கியதாகவும், அந்த ஹாட்ஷாட் செயலியை லண்டனைச் சேர்ந்த நிறுவனத்துக்கு அவர் விற்றார் என்றும் மும்பை குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையாளர் மிலிந்த் பரம்பே தெரிவித்தார்.

ராஜ் குந்த்ரா அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது சில ஏற்கவியலாத காணொளிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

யார் இந்த ராஜ் குந்த்ரா?

ராஜ் குந்த்ரா

ராஜ்குந்த்ரா, ஒரு பஷ்மினா சால்வை வியாபாரி, வைர வியாபாரி, ஐபிஎல் அணியின் இணை உரிமையாளர் என பல அடையாளங்கள் கொண்டவர். 'சர்ச்சைகள்' அவரது வாழ்வில் புதியவை கிடையாது.

ராஜ் குந்த்ராவின் தந்தை லூதியாணாவில் இருந்து பிரிட்டனுக்குச் சென்று குடியேறியவர். அங்கு லண்டனில் பிறந்ததால் பிரிட்டிஷ் குடியுரிமையை பெற்றிருந்தார் ராஜ் குந்த்ரா.

இவரது தந்தை பேருந்து ஓட்டுநராக இருந்தார். பிறகு சிறிய கடை ஒன்றை நடத்தினார். இவரது தாய் அந்தக் கடையில் உதவியாளராக இருந்தார். கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்ட குந்த்ரா, நேபாளத்துக்கு சென்று வந்த பிறகு தமது வாழ்க்கைப் பாதை மாறியதாக கூறுவார்.

நேபாளத்தில் இவர் பஷ்மினா சால்வைகளை வாங்கி வந்து லண்டனில் விற்றார். அந்த தொழிலுக்கு வரவேற்பு கிடைக்கவே தொழில் முனைவோராக வலம் வந்தார் ராஜ் குந்த்ரா. அந்தத் தொடர்புகள், அவரை வைர வியாபாரத்துக்கு உள்ளே நுழையச் செய்தன. பெல்ஜியம், ரஷ்யா என பல நாடுகளிலும் இவரது தொடர்புகள் விரிவடைந்தன. பின்னர் சொந்தமாக ஆர்.கே. கலெக்ஷன்ஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கினார். அதன் மூலம் விலை உயர்ந்த ஆடைகள், ஆயத்த ஆடைகளை விற்பனை செய்தார் ராஜ். அந்தத் தொழில் அவருக்கு செல்வச் செழிப்பை ஏற்படுத்தியது.

பின்னர் அவரது நிறுவனம் உலோகம், ரியல் எஸ்டேட், சுரங்க திட்டங்களுக்கு ஒப்பந்தம் எடுப்பது, எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்வது என விரிவடைந்தது.

தனி வாழ்க்கை

ராஜ் குந்த்ரா

ராஜ் குந்த்ரா கவிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தலீனா என்ற மகள் உள்ளார். இந்த தம்பதி 2009இல் மணமுறிவு செய்துகொண்டது.

மும்பை பட உலகில் கொடிகட்டிப் பறந்த ஷில்பா ஷெட்டியின் குடும்பம் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாடுவதற்குப் பேர் போனது. அந்த வகையில் 2007இல் செலிப்ரிட்டி பிக் பிரதர் நிகழ்ச்சியில் ஷில்பா ஷெட்டி பட்டம் வென்றிருந்தார். அந்த நிகழ்வுக்குப் பிந்தைய பாராட்டு விழாவில்தான் ராஜ் குந்த்ராவும் ஷில்பா ஷெட்டியும் முதல் முறையாக சந்தித்தனர்.

ஷில்பா ஷெட்டி நடத்தி வரும் அறக்கட்டளை பணியுடன் தன்னை இணைத்துக் கொண்டார் ராஜ். அந்த நட்பு காதலாகி பிறகு மணம் முடிக்கும் அளவுக்கு வளர்ந்தது. முதல் மனைவியை விவாகரத்து செய்த பிறகு 2009, நவம்பர் மாதம் 22ஆம் தேதி ஷில்பாவை ராஜ் திருமணம் செய்து கொண்டார். அந்த காலத்தில் தமது விவகாரத்துக்கு காரணம் ஷில்பா ஷெட்டிதான் என்று முதல் மனைவி கவிதா குற்றம்சாட்டினார்.

ஷில்பா - ராஜ் தம்பதிக்கு 2012, மே 21ஆம் தேதி மகன் பிறந்தார். அவரது பெயர் வயான். அடுத்த ஆண்டு 'பணத்தை எப்படி சம்பாதிக்கக் கூடாது' என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார் ராஜ். 2020இல் இந்த தம்பதிக்கு மகள் பிறந்தாள். அவளது பெயர் சமிக்ஷா.

ராஜ் குந்த்ரா ஆன்லைன் வீடியோ தொழிலில் முதலீடு செய்தார். அவர் பெஸ்ட் டீல் டிவி என்ற பெயரில் ஒரு வலைத்தளத்தை உருவாக்கினார். 2012இல் சூப்பர் ஃபைட் லீக் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கினார். அதில் அவரது கூட்டாளியாக இருந்தவர் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். ஆனால், வளரும் முன்பாகவே அந்த நிறுவனம் மூடுவிழா கண்டது.

இது தவிர லண்டனில் இருந்து இயங்கி வரும் டிரேட் கார்ப் என்ற நிறுவனத்திலும் ராஜ் குந்த்ரா முதன்மை செயல் தலைவராக இருக்கிறார்.

பிட்காயின் முதல் நிழல் உலக தொடர்புகள்வரை

ராஜ் குந்த்ரா

2018ஆம் ஆண்டில் ரூ. 2,000 கோடி அளவுக்கு இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிட்காயின் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறப்பட்ட புகாரில் ராஜ் குந்த்ராவை அழைத்து இந்திய அமலாக்கத்துறை விசாரித்தது. அதற்கு முன்னதாக, 2017ஆம் ஆண்டில் வேறொரு பணப்பரிவர்த்தனை மோசடி வழக்கிலும் அவர் தொடர்புபடுத்தப்பட்டிருந்தார். அப்போது ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக ராஜ் குந்த்ரா, ஷில்பா ஷெட்டி மற்றும் மூவர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.

இந்த நேரத்தில் தங்களுடைய பெஸ்ட் டீல் டிவி நிறுவனத்திடம் இருந்து ரூ. 5 கோடிக்கு படுக்கை விரிப்பான்களை வாங்கும் ஆர்டரை ரவி மோகன்லால் பலேரியா என்ற வியாபாரி கொடுத்திருந்தார். ஆனால், பின்னாளில் தன்னை இருவரும் ரூ. 23 லட்சம் அளழுக்கு மோசடி செய்ததாக பலேரியா குற்றம்சாட்டினார். ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா, தர்ஷித் ஷா, உதய் கோத்தாரி, வேதாந்த் விகாஸ் பல்லி ஆகியோர் மீது மோசடி வழக்கு தொடரப்பட்டது.

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம், வெளிநாடு வாழ் இந்தியரான, மும்பையில் வாழ்ந்து வரும் சச்சின் ஜோஷி, ஷில்பா, ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது சத்யூக் கோல்ட் நிறுவனம் தொடர்பாக ஒரு புகாரை அளித்திருந்தார். 2014ஆம் ஆண்டில் அந்த நிறுவனத்தில் இயக்குநராக இருந்த ராஜ் குந்த்ரா, ஷில்பா ஷெட்டி, மொஹம்மத் சைஃபி உளிட்டோர் பணப்பரிவர்த்தனை மோசடி செய்ததாக புகாரில் கூறப்பட்டிருந்தது.

ராஜ் குந்த்ராவின் நிதிப்பரிவர்த்தனைகள் நிழல் உலக நபராக அறியப்படும் இக்பால் மிர்ச்சி என்பவருடன் தொடர்புடையதாக புலனாய்வுத்துறை சந்தேகம் எழுப்பி வந்தது. இது தொடர்பாக ராஜ் குந்த்ராவுக்கு ஒருமுறை இந்திய அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பி விசாரித்தபோதும், தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் ராஜ் குந்த்ரா.

சூதாட்டத்தில் சிக்கி மீண்ட கதை

ராஜ் குந்த்ரா

பட மூலாதாரம், STRDEL

ராஜ் குந்த்ராவும் ஷில்பா ஷெட்டியும் இந்தியன் ப்ரீமியர் லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களாக இருந்தனர். அந்த அணியில் 2009இல் இவர்கள் முதலீடு செய்திருந்தனர்.

2013இல் ஐபிஎஸ் சீசன் நடந்தபோது, சூதாட்டம் நடந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் ராஜ் குந்த்ராவை டெல்லி காவல்துறையினர் விசாரித்தனர்.

2015ஆம் ஆண்டில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு, ராஜ் குந்த்ரா, பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனின் மருமகனான குருநாத் மெய்யப்பன் ஆகியோர் மீது வாழ்நாள் தடை விதித்து நடவடிக்கை எடுத்தது. அப்போது ராஜ் குந்த்ராவின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐபிஎல் போட்டியில் விளையாட இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் ராஜ் குந்த்ரா மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவரை பின்னாளில் டெல்லி காவல்துறை வழக்கில் இருந்து விடுவித்தது.

அது குறித்து அப்போது கருத்து தெரிவித்த ராஜ் குந்த்ரா, "எனக்கு சூதாட்ட விவகாரத்தில் தொடர்பு இல்லை என்று டெல்லி காவல்துறை கூறியுள்ளது. ஆனால், இந்த வழக்கால் எனது மதிப்பும் செல்வாக்கும் சீரழிக்கப்பட்டு விட்டது. நான் செய்யாத குற்றத்துக்காக ஏன் அவதிப்பட வேண்டும்? ராஜஸ்தான் அணியுடனான எனது உறவு உணர்வுபூர்வமானது. அந்த உணர்வு போலி கிடையாது," என்று கூறினார்.

ராஜ் குந்த்ரா

பிறகு இதே ராஜ் குந்த்ரா, "சூதாட்டம் இருக்கவே இருக்காது என கூற முடியாது. சூதாட்டம் என்பது இல்லாவிட்டால் கிரிக்கெட் பார்ப்பதையே ரசிகர்கள் நிறுத்தி விடுவார்கள். எனவே, சூதாட்டத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு ஆட்டத்தின்போதும் ரூ. 4,000 கோடி முதல் ரூ. 5,000 கோடிவரை பணம் புழங்குகிறது. எனவே, கிரிக்கெட் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க நேரம் வந்து விட்டது," என்று பேசினார்.

நடுத்தர குடும்பத்தில் பிறந்து ஆடம்பர வாழ்க்கை வாழ பல தொழில்களை செய்து வந்த ராஜ் குந்த்ராவின் தொழில் வளர்ச்சிக்கு உதவிய தொடர்புகள் மற்றும் அவற்றின் பின்புலம் மர்மம் நிறைந்ததாகவே பார்க்கப்படுகிறது. இப்போது அவர் சிக்கியிருக்கும் ஆபாசப் படத் தயாரிப்பு விவகாரத்திலும் அவருக்கு நேரடி பங்களிப்பு உள்ளதா என்பதை சட்டத்தின் முன் நிரூபிப்பது மும்பை காவல்துறையினருக்கு சவாலானதாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக