வியாழன், 22 ஜூலை, 2021

முதல் ஹிட் லிஸ்டில் மூன்று மாஜிக்கள்: திட்டம் மாறியது ஏன்?

முதல்  ஹிட் லிஸ்டில் மூன்று மாஜிக்கள்: திட்டம் மாறியது ஏன்?

மின்னம்பலம்  : >முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரும்,  அதிமுகவின் கரூர் மாவட்டச்
செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இன்று (ஜூலை 22)
அதிகாலை முதல் தமிழகத்தின் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தினார்கள்.
கரூரில் உள்ள விஜயபாஸ்கருக்குச் சொந்தமான வீடு, நிறுவனங்கள், அவரது  
உறவினர்களின் வீடுகள் அலுவலகங்கள்  என  சுமார் இருபதுக்கும் மேற்பட்ட
இடங்களில் இந்த சோதனை நடந்தது.
இந்த சோதனைக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்
 ஓ.பன்னீர் செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்
கண்டனம் தெரிவித்த நிலையில்.  .சோதனை முடிவில் முன்னாள் அமைச்சர்
விஜயபாஸ்கர் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதியப்பட்டுள்ளதாக லஞ்ச
ஒழிப்புத் துறை போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆளுங்கட்சி வட்டாரத்தில் இதுகுறித்து பேசியபோது, “அதிமுக ஆட்சி
நடக்கும்போதே அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு
அமைச்சர்கள் மீது ஆளுநரிடம்  புகார்களை அளித்தது திமுக.
மேலும், திமுக
ஆட்சி அமையும் பட்சத்தில் அதிமுகவின் ஊழல் அமைச்சர்கள் மீது விசாரணை
நடத்திட தனி நீதிமன்றம் அமைக்கப்படுமென்றும் ஸ்டாலின் வாக்குறுதி
அளித்திருந்தார்.இந்தப் பின்னணியில் திமுக ஆட்சி அமைத்த பிறகு கொரோனா ஒழிப்புப் பணியில் தீவிரம் காட்டியது. இப்போது கொரோனா கட்டுக்குள் வந்திருப்பதாக அரசு கூறும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான அக்னிப் பார்வையை திமுக அரசு வீசத் தொடங்கியிருக்கிறது.

அதன் முதல் கட்டமாகத்தான் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரைக் குறித்து வைத்து சோதனைகள் நடத்தப்பட்டன. லஞ்ச ஒழிப்புத் துறை தலைவராக கந்தசாமி ஐபிஎஸ் நியமிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே திமுக சார்பில் தயாரித்து ஆளுநரிடம் அளிக்கப்பட்ட ஊழல் புகார்கள் அவரது பார்வைக்கும் அனுப்பப்பட்டன. மேலும் திமுக அமைப்புச் செயலாளராக இருக்கும் ஆர்.எஸ்.பாரதிக்கு கட்சிப் பணிச் சுமையை குறைக்கும் வகையில் துணை அமைப்புச் செயலாளராக அன்பகம் கலை நியமிக்கப்பட்டார். முன்னாள் அமைச்சர்களின் ஊழல் விவகாரங்கள், அது தொடர்பான வழக்குகளில் கவனம் செலுத்தி வந்த ஆர்.எஸ்.பாரதி அந்த ஊழல் வழக்குகளின் மீதே கவனம் செலுத்துமாறு திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அந்தப் பணிகளில் ஆர்.எஸ்.பாரதி தீவிரமாகியுள்ளார். இதுகுறித்து மின்னம்பலத்தில் அறிவாலயம் கலை ஆகும் அன்பகம் கலை: ஆர்.எஸ்.பாரதிக்கு புது அசைன்மென்ட் என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் இன்று (ஜூலை 22) ஒரே நேரத்தில் முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய மூவரைக் குறிவைத்தும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைகள் நடத்தத் திட்டமிடப்பட்டன. ஆனால் ஏனோ ஒரே ஒரு மாஜியை மையமாக வைத்து மட்டும் இன்று சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. பாக்கி இரண்டு மாஜிகளுக்கு சோதனை நடத்தும் தகவல்கள் லீக் ஆகி, அதனால் சோதனை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதா அல்லது வேறு காரணம் ஏதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் வெகு விரைவில் அடுத்தடுத்த மாஜிக்கள் மீது திமுக அரசின் பாய்ச்சல்கள் அதிகமாகும்” என்கிறார்கள்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக