வெள்ளி, 30 ஜூலை, 2021

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் இறந்த சிறுமி: தோண்டி எடுக்கப்பட்ட உடல்

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமியின் சடலம் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது.

BBC :இலங்கை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றி வந்த நிலையில், தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் இன்று (30) மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.
கொழும்பு - புதுகடை நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த 26ம் தேதி வழங்கப்பட்ட உத்தரவிற்கு அமைய இந்த சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 16 வயதான சிறுமி வேலை செய்து வந்த நிலையில், மர்மமான முறையில் தீ காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் கடந்த 3ம் தேதி அனுமதிக்கப்பட்டது.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு தொடர்ந்தும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், குறித்த சிறுமி கடந்த 15ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.


உடலில் சுமார் 72 வீதமான பகுதிக்கு தீ காயங்கள் ஏற்பட்டமையினால் இந்த மரணம் நேர்ந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அத்துடன், குறித்த சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டமை பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.
முன்னாள் அமைச்சரின் மனைவி, மாமனார் கைது

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், கொழும்பு தெற்கு விசேட போலீஸ் பிரிவு, பொரள்ளை போலீஸார் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆகியன இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் இடைதரகர் ஆகியோர் கடந்த 23ம் தேதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துமாறு கொழும்பு - புதுகடை நீதவான் நீதிமன்றம் கடந்த 24ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.

அத்துடன், ரிஷாட் பதியூதீன் 2015 முதல் 2019ம் ஆண்டு வரை அமைச்சு பதவிகளை வகித்த போது, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அதிகாரபூர்வ இல்லத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த மற்றுமொரு யுவதி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரனும் கைது செய்யப்பட்டிருந்தார்.
சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டமை

குறித்த சந்தேகநபரையும் தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் கடந்த 24ம் தேதி, போலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதன்படி, குறித்த நான்கு சந்தேகநபர்களும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, கடந்த 26ம் தேதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்ததுடன், சந்தேகநபர்களை எதிர்வரும் 9ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிரதம நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணைகளின் போது, சட்ட மாஅதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திலிப பீரிஸ், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்கொலையா அல்லது படுகொலையா?

சிறுமியின் உயிரிழப்பு தற்கொலையா, அல்லது படுகொலையா என்பதில் பாரிய சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சிறுமி கடந்த 3ம் தேதி அதிகாலை 6.45 அளவில் தீ காயங்களுக்கு உள்ளாகியிருந்ததுடன், அந்த சிறுமி காலை 8.20 அளவிலேயே 1990 அம்பியூலன்ஸின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
 
சிறுமி தங்கியிருந்த வீட்டில் வாகனங்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லாத நிலையில், சிறுமியை அம்பியூலன்ஸின் உதவியுடன் தாமதமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிறுமியின் பெயர் மற்றும் வயது மாற்றப்பட்டே, மருத்துவமனையின் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் கூறியுள்ளார்.

உயிரிழந்த சிறுமி தங்கியிருந்த இடமானது, ஒரு கூடாரத்தை போன்றது எனவும், அந்த இடத்தில் காணப்பட்ட கட்டிலின் மீது மண்ணெண்ணெய் அடங்கிய போத்தல் மற்றும் தலையணைக்கு கீழ் லயிட்டர் ஆகியன காணப்பட்டதாகவும் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திலிப பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த வீட்டில் மண்ணெண்ணெய் உபயோகிப்பதற்கான எந்தவித தேவையும் கிடையாது என கூறிய அவர், குறித்த வீட்டில் இதற்கு முன்னர் பணிப் பெண்களாக வேலை செய்ய யுவதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணைகளிலும் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றார்.
'வாகன ஓட்டுநர் கொண்டு வந்த மண்ணெண்ணெய்'

தமது வீட்டில் வேலை செய்யும் ஓட்டுநரால் இந்த மண்ணெண்ணெய் கொண்டு வரப்பட்டதாக ரிஷாட் பதியூதீனின் மனைவியின் தாய் வாக்குமூலம் வழங்கியுள்ள போதிலும், ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் தாம் அவ்வாறு மண்ணெண்ணெய் கொண்டு வரவில்லை என கூறியுள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ரிஷாட் பதியூதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமியின் சடலம் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது.

அத்துடன், ரிஷாட் பதியூதீனின் மனைவியினால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தில் பரஸ்பரம் காணப்படுகின்றமை, சந்தேகத்தை மேலும் அதிகரிக்கின்றது என அவர் கூறுகின்றார்.

இதேவேளை, சிறுமி உயிரிழந்ததன் பின்னர், பாதுகாப்பு பிரிவிற்கு சமமான ஆடையொன்றை அணிந்து சென்ற நபர் ஒருவர், குடும்பத்தாருடன் இந்த விடயம் தொடர்பில் சமாதானம் பேசியுள்ளமை, அழுத்தங்களை விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை மறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை, இந்த விடயத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இதேவேளை, சிறுமி எதிரத்நோக்கிய துன்புறுத்தல்களுக்கு வீட்டுத் தலைவன் என்ற வகையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்த பிரதி சொலிஸ்டர் ஜெனரல், இந்த வழக்கில் ரிஷாட் பதியூதீனின் பெயரையும் இணைத்துக்கொண்டு விசாரணைகளை நடத்த எதிர்பார்;த்துள்ளதாக நீதவான் முன்னிலையில் தெரிவித்திருந்தார்.
இந்திய வம்சாவளியினர் பகுதி இளம்பெண்கள்

இந்திய வம்சாவளித் தமிழர்கள் அதிகளவில் வாழும் மலையகத்தின் டயகம பகுதியிலிருந்தே இந்த சிறுமி அழைத்து வரப்பட்டுள்ளதுடன், ரிஷாட் பதியூதீனின் வீட்டில் இதற்கு முன்னர் பணியாற்றிய 10 இளம்பெண்களும் அதே பகுதியிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
இலங்கை முன்னாள் அமைச்சர் வீட்டில் இறந்த சிறுமி: தோண்டி எடுக்கப்பட்ட உடல்

இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுமிகளில் இருவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளமை குறித்தும் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

மேலும், ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றியதாக கூறப்படும் ஐந்து இளம்பெண்கள் உள்ளிட்ட 9 பேரிடம் போலீஸார் இதுவரை விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில், கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு அமைய உயிரிழந்த சிறுமியின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்பட்டது.

நுவரெலியா நீதவான் லுஷாகா குமார ஜயரத்னவின் அனுமதியுடன், அவரின் முன்னிலையில் சடலம் இன்று தோண்டி எடுக்கப்பட்டது.

இந்த சடலத்தை தோண்டி எடுப்பதற்காக மூவரடங்கிய சிறப்பு மருத்துவ குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில், நீதவான் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, சடலம் உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, இரண்டாவது பிரேத பரிசோதனைகளுக்காக கண்டி - பேராதனை போதனா மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

பேராதனை மருத்துவமனையில் 2வது பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, அறிக்கை விரைவில் கொழும்பு - புதுகடை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமியின் உயிரிப்புக்கு நீதிக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தலைநகரம், வடக்கு, கிழக்கு, மலையகம் மாத்திரமன்றி, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் போராட்டங்கள் ஒவ்வொரு நாளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக