திங்கள், 26 ஜூலை, 2021

இலங்கையின் (அரசியல் வர்த்தக) ஊடக துறை கிங் மேக்கர் ராஜ மகேந்திரன் காலமானார்

 kuruvi.lk  : இலங்கையின் வர்த்தகப்புலி – கிங் மேக்கர் கிளி – என்றெல்லாம் அழைக்கப்பட்ட திரு.ராஜ மகேந்திரன்  இன்று காலமானார். இவர் 1943 மே 19 ஆம் திகதி பிறந்தவர்.
எழுபதுகளின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து தென்னிலங்கைக்கு வந்த ராஜேந்திரனின் இரண்டாவது மகன் ராஜ மகேந்திரன் .
யாழ்ப்பாணம் – மானிப்பாயை பூர்வீகமாகக்கொண்ட ராஜேந்திரன், எழுபதுகளின் பிற்பகுதியில் தென்னிலங்கைக்கு வந்து மகாதேவா என்பவருடன் இணைந்து, வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டாக இலங்கையில் ஏற்றுமதி – இறக்குமதி வியாபாரத்தில் ஈடுட்டார்.
இவர்கள் இருவரதும் வர்த்தக சிரத்தையின் பயனாக, எஸ் – லோன் பைப் நிறுவனத்தை எழுபதுகளின் இறுதியில் ஆரம்பித்தார்கள்.
ஜப்பானுடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், மகாராஜாவின் வர்த்தக பயணத்தில் – எதிர்பாராத ஒரு புள்ளியில் – மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.


அதாவது, எண்பதுகளின் ஆரம்பத்தில் ஜனாதிபதி பிரேமதாசவினால் ஆரம்பிக்கப்பட்ட மாதிரி வீட்டுத்திட்டதிற்கான பைப் விநியோகம் மகாராஜா நிறுவனத்துக்கு கிடைத்த கையோடு, மகாராஜா நிறுவனம் சிறிலங்காவில் நிஜமான மகாராஜாவாகவே அரியணையில் ஏறிவிட்டது.

அன்றிலிருந்து மகாராஜா நிறுவனம் ஐக்கிய தேசிய கட்சியோடு பின்னிப்பிணைந்துகொண்டது. கட்சியின் மத்தியகுழு உறுப்பினராக ராஜமனோகரன் இணைந்துகொள்ளமளவுக்கு ஐக்கிய தேசிய கட்சியுடனான மகாராஜாவின் பிணைப்பு இறுக்கமானது. பிரேமதாஸவின் மகளுக்கு மகாராஜா நிறுவனம் லண்டனில் ஒரு வீடு வாங்கிக்கொடுக்குமளவுக்கு மகாராஜா நிறுவனம், யானையை  (யு என் பி ) தனது பின் தொழுவத்திலேயே கட்டிவைத்திருந்தது.

அதற்குப்பிறகு, மகாராஜாவின் அடுத்தடுத்த வர்த்தக பயணங்கள் அனைத்தும் வெற்றிகரமாக  அமைந்தது. பெப்ஸியை இலங்கைக்கு கொண்டுவந்தது முதல், சிங்கப்பூர் நிறுவனத்துடன் இணைந்து எம்.டி.வி. நிறுவனத்தை ஆரம்பித்ததுவரை பல கம்பனிகள் இவர்களது காலடியில் ஆழ வேரூன்றி வளரத்தொடங்கின.

ஆனால், ஊடகங்களின் மீது ராஜ மகேந்திரனுக்கு  தீராத மோகம், அதன் வழி அவரை ஆழமாக இழுத்துச்சென்றது.
இதன் பயனாக, எம்.டி.வியின் கீழ் ஏழு ஊடகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. சிரஸ, சக்தி, யெஸ், ஹிட் என்று மும்மொழிகளிலும் ஆரம்பிக்கப்பட்ட ஏழு அலைவரிசைகள் மகாராஜாவின் எக்ஸ்ட்ரா கரங்களாக சிறிலங்காவை வளைத்து வைத்திருந்தன.
இவற்றின்வழி, சிறிலங்காவின் அரசியலை தீர்மானிக்கவல்ல ஊடக சக்தியாக மகாராஜா வியாபித்தது. மகாராஜா நிறுவனத்தின் சக்தி என்ன என்பதை படிப்படியாக உணர்ந்த தென்னிலங்கை சிங்கள கடும்தேசியவாதிகள், ராஜ மகேந்திரனுக்கு புலிவால் வைத்து அப்போது போஸ்டர் ஒட்டினார்கள்.

மகாராஜா நிறுவனம் இன்றுவரை அதே அதிகாரத்தோடும் – புகழோடும் – சிறிலங்காவில் கோலாச்சிக்கொண்டுதானிருக்கிறது.
ராஜ மகேந்திரனின்  மகன் சசிதரன் ஒருகால கட்டத்துக்கு பின்னர், கூட்டு நிறுவனங்களின் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார். ஆனால், தகப்பனைப்போன்று எல்லா நிறுவனங்களின் மீதுமான தீவிர ஈடுபாடு அவருக்கு அவ்வளவு இல்லாதபோதும், ஆழ வேரூன்றிய மகாராஜாவின் பெயர் தொடர்ந்தும் தென்னிலங்கையில் கர்ஜித்துக்கொண்டுதானிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக