வெள்ளி, 2 ஜூலை, 2021

நீட் தேர்வில் பாஜகவின் வன்மத்தை அம்பலப்படுத்த அனைத்துக்கட்சிகள் முடிவு....

 தீக்கதிர் - சின்னையா காசி : சென்னை: நீட்தேர்வில் பாஜகவின் வன் மத்தை மக்களிடம் அம்பலப்படுத்த சென்னையில் திராவிடர் கழகம் அழைப்பின் பேரில் நடைபெற்ற அனைத்துக்கட்சிகள் மற்றும் அமைப்புகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது,
கிராமப்புற மாணவர்களை கரை சேர்க்க ஒரே வழி நீட் ரத்து. அதனால்தான், திமுக அரசு அதை ஒரு கொள்கை முடிவாக ஆளுநர் உரையிலும் அறிவித்துள்ளது.
மக்களின் தீர்ப்பே ஜனநாயகத்தில் இறுதியானது என்பதால், நீட் தேர்வின் பாதகம், சாதகம் குறித்தும் ஆய்வு செய்ய நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத் துள்ளது.
இந்த குழு தனது அறிக் கையை தராத நிலையில் பாஜகவின் சார்பில் அப்படி ஒரு குழு அமைத்ததே சட்டப்படி செல்லாது என  நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.


நீட்டை ஆதரித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடுத்துள்ள நிலையில், அதனை எதிர்க்கொள்ளும் வகையில் திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் வியாழனன்று (ஜூலை 1)  நடந்த கூட்டத்தில் கி.வீரமணி (திக) முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன், ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர். இளங்கோ(திமுக), கே.எஸ்.அழகிரி, கோபண்ணா (காங்கிரஸ்), க.பீம்ராவ், ஆர்.பத்ரி (சிபிஎம்), மு.வீரபாண்டியன், பெரியசாமி (சிபிஐ), மல்லை இ.சத்யா, வந்தியத்தேவன் (மதிமுக), தொல்.திருமாவளவன், வன்னியரசு (விசிக), வேணுகோபால் (தவாக), கே.எம். காதர்மொகிதீன் (ஐயுஎம்எல்), எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக),  கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சுப.வீரபாண்டியன்,(திராவிட இயக்க தமிழர் பேரவை)  டி.எம்.என். தீபக் (டிசம்பர் 3 இயக்கம்) உள்ளிட்ட 32 அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு விரிவாக விவாதித்தனர். மேலும், பல்வேறு ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.
நியாயமற்ற வழக்கு
நீட் தேர்வு ஒதுக்கப்பட்ட மக்களின் சமூகநீதியைப் பாதிக்கும் என்பதால் அந்த மக்களுக்கு பரிகாரம் தேடி, பாதுகாக்க வேண்டிய மகத்தான கடமை தமிழ்நாடு அரசுக்கு உண்டு. ஆகவே, நீட் தேர்வின் தாக்கம் பற்றி ஆராய குழு அமைக்கும் உரிமை மாநில அரசுக்கு இருக்கிறது. இதை யாராலும் மறுக்க முடியாது. அதைத்தான் அரமைப்புச் சட்டமும் வகுத்துள்ள கடமையும், பொறுப் பும் கூட. ஆகவே, பாஜக போட்டுள்ள வழக்க நியாயமற்றது மட்டுமல்ல, சட்டவிரோதமும், மக்கள் விரோதமும் கொண்டது என்று இந்த கூட்டம்கருதுகிறது.மக்கள் குறைதீர்க்கும் வகையில், நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இந்த கூட்டம் ஆதரவு தெரிவிப்பதுடன், சமூக நீதியைப் பாதுகாக்க தக்க சட்ட நடவடிக்கைகளை மேற் கொள்ளவும், மக்களாட்சியின் மாண்புகளை காப்பற்றவும் அரசின் நிலைப்பாட்டை உறுதியாக ஒவ்வொரு கட்சியும், இயக்கமும் தனித்தனியாக, அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் வழக்கில் இணைத்துக்கொள்வது என்று கூட்டத்தில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
பிரதமரிடம் வலியுறுத்த முடிவு
தமிழ்நாட்டின் மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும் பிரதிபலிக்கும் வகையில் பிரதமரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதுடன், ஏற்கெனவே, ஓராண்டு விலக்கு அளித்ததை முன் உதாரணமாகக்கொண்டு, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு அளிக்க பிரதமரிடம் வலியுறுத்துவது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வெகுமக்களை கொச்சைப்படுத்தும் பாஜக
உயர்நீதிமன்றத்தில் பாஜக தொடர்ந்த வழக்கில் “சாதாரண, அதற்கும் குறைவான அறிவுடையவர்கள்கூட நீட் தேர்வு இல்லையெனில் மருத்துவர்கள் ஆகிவிடக் கூடும்” என்று தங்கள் மனுவில் குறிப் பிட்டுள்ளனர். இது வெகுமக்களை இழிவுப்படுத்துவது, கொச்சைப் படுத்துவது என்பதால் வன்மையாக கண்டிப்பதுடன், ஒரு குறிப்பிட்டோருக்கு மட்டும் கல்வி உரியதென்று மறைமுகமாகத் குறிப்பிடுகிறது. ஆகவே, சமூக நீதிக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் குறித்தும் நீட் தேர்வு விவகாரத்தில் பாஜகவின் வன்மம், இரட்டை வேடங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல பிரச்சாரம் மேற்கொள்வது என்றும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
#தீக்கதிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக