சனி, 10 ஜூலை, 2021

சசிகலா : தோற்றுவிட்டேன் என்று ஜெயலலிதா அழுதார்... வீட்டுக்கு வந்து மோடி கேட்டும் மறுத்தார் - வெளிப்படையாக நினைவுகளை

News18 Tamil :  சொத்துகுவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்துள்ள சசிகலா அ.தி.மு.க கட்சித் தொண்டர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்ந்து பேசிவருகிறார்.
அந்த தொலைபேசி உரையாடலின் போது மீண்டும் அ.தி.மு.க தலைமைப் பொறுப்பை ஏற்பேன் என்று கூறிவருகிறார்.
அதனால், அ.தி.மு.கவில் சலசலப்பு ஏற்பட்டுவருகிறது. இந்தநிலையில், தி விக் ஆங்கில வார இதழுக்கு சசிகலா பேட்டியளித்தார்.
அந்தப் பேட்டியில் ஜெயலலிதாவுடனான ஆரம்ப கால நட்பு முதல் ஜெயலலிதாவின் இறுதி நாள் வரை பல்வேறு நிகழ்வுகளை சசிகலா பகிர்ந்துள்ளார்.
அதில், ‘எம்.ஜி.ஆரின் இறந்த செய்தி அறிந்து நானும், அக்காவும்(ஜெயலலிதா) வேகமாக ராமாவரம் தோட்டத்துக்கு விரைந்தோம்.
அப்போது அங்கே கதவு மூடப்பட்டிருந்தது. நாங்கள் அதனை உடைத்து திறந்தோம். அப்போது அக்கா அழுது கொண்டிருந்தார்.



அப்போது, எம்.ஜி.ஆரின் குடும்பத்தினர் அக்காவை ஒரு அறைக்குள் அடைக்க முயற்சி செய்தனர். ஆனால், நாங்கள் அங்கிருந்து நகரவில்லை. எம்.ஜி.ஆரின் உடல் முதல்தளத்திலிருந்து கீழே கொண்டுவருவதைப் பார்த்துகொண்டிருந்தோம். அவரது உடல் கீழே கொண்டுவரப்பட்டு ஆம்புலன்ஸில் வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.

உடனே, நாங்கள் காரில் வேகமாக ஆம்புலன்ஸை பின்தொடர்ந்து சென்றோம். டி.டி.வி.தினகரன்தான் காரை ஓட்டிச் சென்றார். எம்.ஜி.ஆரின் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனத்திலிருந்து அக்கா கீழே தள்ளிவிடப்பட்டார். அப்போது, அக்காவுக்கு அடிபட்டது. நாங்கள் போயஸ் கார்டன் வீட்டுக்குச் சென்றுவிட்டோம். போயஸ்கார்டன் சென்றபிறகு அக்காவின் அம்மா சந்தியாவின் புகைப்படம் முன்பு தோற்றுவிட்டேன் என்று ஜெயலலிதா அழுதார். அப்போது, நான் அவருடன் இருக்க முடிவு செய்தேன்.

அதன்பிறகு சில ஆண்டுகளுக்குப் பிறகு கட்சியை அக்காவுக்கு விட்டுத் தரவேண்டும் என்று ஜானகி அம்மாவிடம் கேட்கப் போகப் போகிறேன் என்று அக்காவிடம் சொன்னேன். அக்கா வேண்டாம் என்று மறுத்தார். ஆனால், நான் பிடிவாதமாக ஜானகி அம்மாவிடம் போய் கேட்கப்போகிறேன் என்றேன்.

நானும், எனது கணவர் நடராஜனும் போய் ஜானகி அம்மாவைச் சந்தித்து கட்சித் தலைமையை அக்காவுக்கு கொடுக்கவேண்டும் என்று கேட்டோம். அவர் அதனை ஏற்றுகொண்டார்’ என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ‘1999-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க அரசுக்கு வழங்கும் ஆதரவை திரும்பப் பெறும் முடிவுக்கு நான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தேன்.

வேண்டாம் என்று அக்காவிடம் கெஞ்சிக் கேட்டேன். அவருடன் சண்டையிட்டேன். ஆனால், அக்கா என்னுடைய பேச்சைக் கேட்கவில்லை. அவருடைய முடிவில் பிடிவாதமாக இருந்தார். அதேபோல, 2003-ம் ஆண்டு சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரைக் கைது செய்யவேண்டாம் என்று அக்காவிடம் கெஞ்சிக் கேட்டேன்.

இரவு முழுவதும் அக்காவுடன் சண்டையிட்டேன். ஜெயேந்திரரைக் கைது செய்தால் கட்சிப் பெயர் பாதிக்கும் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவருடைய காலில் விழுந்து கூடக் கேட்டேன். ஆனால், அவர் என்னுடைய அறிவுரையைக் கேட்கவில்லை. யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று கூறிவிட்டார்’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘அக்காவுக்கு பிடித்தமான தலைவராக அத்வானி இருந்தார். ஆனால், மோடி எப்போதும் நல்ல நண்பராக இருந்தார். 2015-ம் ஆண்டு மரபை மீறி பிரதமர் மோடி, அக்காவைச் சந்திக்க போயஸ் கார்டனுக்கு வந்தார். மோடிக்கு சிறப்பான சைவ உணவுகள் பறிமாறப்பட வேண்டும் என்று அக்கா கூறினார். ஆப்பம் செய்யச் சொன்னார். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது, மோடி மீண்டும் மீண்டும் ஆப்பம் கேட்டு வாங்கிச் சாப்பிட்டார்.

சாப்பிட்டு முடித்த பின்பு ஜி.எஸ்.டி சட்டத்துக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று மோடி கேட்டார். ஆனால், அக்கா அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். அப்போது, அ.தி.மு.க நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது. ராஜ்ய சபாவில் 11 எம்.பிக்கள் இருந்தனர்’ என்று தெரிவித்தார். அந்த நேர்காணலில், ‘ஜெயலலிதாவுக்கு பிடித்த உணவுகள் ஆடைகள், மருத்துவமனையில் இருந்த இறுதிநாள்கள், கட்சியிலிருந்து தன்னை ஜெயலலிதா நீக்கியது ஏன்? என்று பல்வேறு விவகாரங்கள் குறித்து சசிகலா தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
Published by:Karthick S

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக