வியாழன், 29 ஜூலை, 2021

தாது வருடப் பஞ்சம் ! தமிழர்கள் சாபிட்டாச்சா சாப்பிட்டாச்சான்னு ஏன் கேட்கிறார்கள்? வரலாற்று பின்னணி

May be an image of 4 people and people standing
May be a black-and-white image of 2 people

பாண்டியன் சுந்தரம்    : மிகப்பெரிய தாது வருடப் பஞ்சம்: நாம் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் போது ‘சாப்பிட்டாச்சா’ எனக் கேட்டுக் கொள்ளும் வழக்கம் ஆரம்பித்தது பஞ்ச காலத்தில் இருந்துதான்!
வற்றிய உடலும் ஒட்டிய வயிறுமாக, தோல் போர்த்தப்பட்ட எலும்புக் கூடுகள் என நினைக்குமளவிற்குப் பெரியவர்கள், குழந்தைகள் என ஒருசேர காட்சி தருகிற இந்தப் புகைப்படங்கள் தாது வருடப் பஞ்சத்தின் சாட்சி.
தன் தாயின் வற்றிபோன மார்பகங்களில் தனக்கான உணவைத் தேடிக் கொண்டு இருக்கும் குழந்தை, மரப்பொந்தில் எறும்புப் புற்றை தேடி ஏமாந்து போய் நடக்கமுடியாமல் அமர்ந்திருக்கும் சிறார்,
பசியோடு செய்வதறியாது அமர்ந்து இருக்கும் குடும்பம்...
துயரத்தின் வலியை உணர்த்தும் படங்கள்...
நூறாண்டுகள் கடந்தும் பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைக்கும் இந்தப் புகைப்படங்கள் ஆப்ரிக்காவிலோ, சோமாலியாவிலோ எடுக்கப்பட்டதல்ல. 1876 முதல் 1878 வரை நம் சென்னை மாகாணத்தில் தலைவிரித்தாடிய தாது வருடக் கொடும் பஞ்சத்தின் போது வில்லோபை வாலஸ் ஹூப்பர் என்ற புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்டது.

கிழக்கிந்தியக் கம்பெனிதான் சென்னை மாநகரை உருவாக்கியதென்பது நாம் அறிந்ததே. அதன் ஆட்சியில் 1640 இல் துவங்கி 1907 வரை சுமார் 17 முறை அன்றைய சென்னை மாகாணத்தை உணவுப் பஞ்சங்கள் தாக்கின.
துவாதசப் பஞ்சம், தாதுப் பஞ்சம், குண்டூர்ப் பஞ்சம், ஒரிஸ்ஸா பஞ்சம் என்று பஞ்சங்களுக்குப் பெயர் வைக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை இந்தப் பஞ்சங்கள் காவு வாங்கின. சென்னை மாகாணத்தில் தென்னார்க்காடு மாவட்டத்தில் இந்தப் பஞ்சம் நிகழ்த்திய கொடூரம் சொல்லிமாளாதது. இன்றும் அந்த மாவட்டத்தில் இந்தப் பஞ்சத்தைச் சொல்லி கும்மிப்பாட்டுகள் பாடப்பட்டு வருகின்றது
1876-1878ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த சென்னை மாகாணத்தில் கடுமையான உணவுப் பஞ்சம் நிலவியது. மிக சரியாக இரண்டு ஆண்டுகள் நீடித்த இப்பஞ்சம், முதலில் தென்னிந்தியப் பகுதிகளான சென்னை, பம்பாய், ஹைதராபாத், மைசூர் போன்ற நகரங்களைப் பாதித்தது
இரண்டாம் ஆண்டின் இறுதியில் வட இந்தியா, மத்திய மாகாணங்களின் பகுதிகளுக்கும் அடுத்தடுத்துப் பரவியது. சுமார் ஐந்து கோடியே 80 லட்சம் மக்கள் உணவு தானியங்கள் இல்லாமல் பாதிக்கப்பட்டும், ஏறத்தாழ 5.5 மில்லியன் மக்கள் பட்டினியின் கொடுமையால் உயிரிழந்த உலகத்தின் மிகப்பெரிய பஞ்சம் இதுதான் என்கிறது வரலாற்றுத் தரவுகள்.

1876 மே 1-இல் எம்ப்ரஸ் ஆஃப் இந்தியா என்ற பதவியை அரசி விக்டோரியா ஏற்ற அதே வருடம்தான் வறட்சியும் ஆரம்பம் ஆனது. இந்தியா அரசி விக்டோரியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு ஏற்பட்ட மூன்று பஞ்சங்களில் இதுவே முதலாவது பஞ்சம். இந்த வறட்சிக்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியக் காரணம் பருவமழை பொய்த்துப் போனதுதான். அதுவரை சராசரியாக 27.6 இன்ச்  என வருடந்தோறும் பெய்து வந்த மழையின் அளவு 1876-இல் வெறும் 6.3 இன்ச்சாகக் குறைந்ததால் வறட்சி ஏற்பட்டது.
நீரில்லாமல் விவசாயம் செய்ய முடியாது விவசாயிகள் தத்தளித்தனர். விவசாயம் பொய்த்துப் போக, உள்ளூர் சந்தைகளில் தானியங்களின் வரத்து முற்றிலுமாக நின்று போனது.

வறட்சி ஏற்பட்டபோது மக்கள் விதை நெல்லைக் கூடச் சமைத்துச் சாப்பிடும் நிலை ஏற்பட்டது. ஆயினும் கூட தானிய ஏற்றுமதியை ஆங்கிலேயர்கள் நிறுத்தவில்லை. கப்பல் கப்பலாக கோதுமையும் பருத்தியும் உணவுப் பொருட்களும் தொடர்ந்து அனுப்பப்பட்டு வந்தன.

1858-இல் நடந்த சிப்பாய் கலகத்திற்குப் பிறகு சென்னை மாகாணம், கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டிலிருந்து பிரிட்டிஷ் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டது. இதனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ரயில்கள், தானிய வணிகம், பருத்தி பயிரிடல் ஏற்றுமதி என பலவற்றை இந்தியாவில் அறிமுகப் படுத்தினர். இதனால் உள்ளூர் சந்தைகள் நலிவு  பெறத் துவங்கின.

 மேலும் உணவு தானியங்கள் பயிரிடுவதைக் குறைத்து தங்களுக்குத் தேவையான பருத்திகளை அதிகளவில் பயிரிட பிரிட்டிஷ் அரசு விவசாயிகளை வற்புறுத்தியது.
கடும் வறட்சியால் தானியங்களின் உற்பத்தி முற்றிலுமாக குறைந்துவிட்ட போதிலும் ஏற்றுமதிக்கு வசதியாக ரயில்வே போக்குவரத்து இருந்ததால் ஏற்றுமதியாளர்களும், பெரும் செல்வந்தர்களும் இந்தியாவில் விளைந்த சொற்ப தானியங்களையும் சுலபமாக வெளியே ஏற்றுமதி செய்து எஎெவந்தனர். இதனால் பஞ்சம் தன் கோரப் பற்களால் ஏழை மக்களை வேட்டையாடிக் குவிக்கத் தொடங்கியது.

கட்டுப்பாடற்ற தானிய ஏற்றுமதியினால் தாழ்த்தப்பட்ட ஏழை மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உணவு தானியங்கள் கிடைக்காமல் அவதிப்பட்டனர். ஏற்றுமதிக்காக அதிகாரவர்க்கத்தினர் தானியங்களை வேறு பதுக்கி விட்டனர். ஏழை மக்களிடம் பணம் இருந்தும் வாங்க முடியாமல் போனதால் கலவரம் வெடிக்கத் தொடங்கியது.
தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று சொல்லக்கூடிய தஞ்சாவூரே தடுமாறும் அளவிற்கு உனவுப் பஞ்சமும், வறட்சியும், பட்டினிச் சாவுகளும் ஏற்பட்டது.
பஞ்சகாலத்தில் மக்கள் வேலை வாய்ப்பினை முழுதாக இழந்தனர். வருமானமற்ற நிலையில் நகைகள், பாத்திரங்கள், ஆடுகள், மாடுகள், துணிகள், வீட்டுக் கதவுகள், ஜன்னல்கள் என்று அனைத்தையும் விற்று உணவு உண்டனர். பணம் கரைந்ததும் நாடோடி வாழ்க்கை வாழும் நிலைக்குப் பெரும்பாலான மக்கள் தள்ளப்பட்டனர்.

வேலை பெறுவதற்காக மக்கள் கிராமங்களைக் காலி செய்து நடைப் பயணமாக பெரு நகரங்களை நோக்கிச் சென்றனர். கொடிய வெப்பத்தில் உணவும் நீரும் இன்றி நெடு நாட்கள் நடந்ததால் வயதானவர்களும், குழந்தைகளும் பாதி வழியிலேயே ஆங்காங்கே சுருண்டு விழுந்து இறந்தனர்.
‘கீழே கிடந்த ஓர் எலும்புத்துண்டை நாய் கவ்விக்கொண்டு ஓடுவதை மக்கள் காண்கிறார்கள். உடனே அந்த நாயைத் துரத்திக் கொன்று ஒரு துண்டு எலும்புக்காக தங்களுக்குள் அடித்துக்கொண்டார்கள்’ என்று அன்றைய நிலையை பதிவு செய்த ஓர் அறிக்கை கூறுகிறது.

மக்கள் எறும்புப் புற்றுகளைத் தேடிச் சென்று அதிலிருந்து தானியங்களை எடுத்து உண்பதைக் கண்டதாக அன்றைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மெக்குகே கூறி இருக்கிறார்.
ஊர்வன, பறப்பன என தங்களுக்கு கிடைத்த அனைத்தையும் மக்கள் உண்ணத் துவங்கினர். வயிற்றைப் புண்ணாக்கி எரிச்சல் ஏற்படுத்தும் காட்டுக் கிழங்குகளைக் கூட விட்டு வைக்கவில்லை. பழக்கமில்லாத உணவினாலும், சில நச்சுள்ள காய், கொட்டை, கிழங்குகளை உண்டதாலும் பலர் நோயுற்று இறந்தனர்.
பசியால் மக்கள் எலும்பும் தோலுமாகி கொத்துக் கொத்தாகச் செத்து மடிந்தனர். எப்படியாவது உயிர் பிழைத்தாக வேண்டும் என்று நினைத்தவர்கள் இலங்கை, பிஜி, தென்னாப்பிரிக்கா, பர்மா என்று உலகின் பல்வேறு பகுதிகளுக்குக் கொத்தடிமை முறையில் சேவகத்துக்குப் போனார்கள்.

இப்பஞ்சம் தாக்கிய வருடங்களில் சென்னை மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இலங்கைக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை மட்டும் 3லட்சத்துக்கும் அதிகம் என்கிறது புள்ளிவிவரம்.
இந்தப் பஞ்சத்தில் மடிந்தவர்களின் எண்ணிக்கை பற்றி உறுதியான புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை. ஆயினும்,இந்தப் பஞ்சம் பற்றி ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர் டேவிட் ஆர்னால்ட் கொடுக்கும் தகவல் படி இறந்தவர்களின் எண்ணிக்கை 35 லட்சம் பேர்.

பசியால் வாடிய மக்களில் சிலர் வெள்ளைக்காரர்கள் மற்றும் செல்வந்தர்களின் தானியக் கிடங்குகளைச் சூறையாடி தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். சந்தைகளில் பூட்டியிருந்த கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன.
பசியின் கொடுமை தாளாமல் சிறுவர்களும் பெரியவர்களும் பல இடங்களில் வன்முறையுடன் கூடிய கொள்ளைகளில் ஈடுபட்டனர். சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது பல இடங்களில் ஆங்கில அரசிற்கு பெரும் சவாலானது.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த இந்திய கவர்னர் ஜெனரல் லார்ட் லைட்டன் பிறப்பித்த உத்தரவின் பேரில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் பஞ்ச நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆங்காங்கே வேலைத் திட்டங்களைச் செயல்படுத்த முன்வந்தனர். பல இடங்களில் தண்டவாளம் அமைக்கும் பணிகளையும் சாலைகள் அமைக்கும் பணிகளையும் ஏற்படுத்தி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க முயன்றனர். வேலை செய்தவர்களுக்குக் கூலியாக ஒரு வேளை உணவு வழங்கப்பட்டது. கடற்கரையில் ஏற்றுமதி ஆகும் தானியங்கள் கீழே கொட்டினால் அதை சேகரித்துத் தின்ன பலர் போட்டி போட்டனர்.

இன்றும் சென்னையின் ஒரு சில இடங்கள் பஞ்சங்களை நினைவு கூறும் அடையாளங்களாகத் திகழ்வதைக் காணலாம். பக்கிங்ஹாம் கால்வாய் ஒரு முக்கிய அடையாளம். இந்தக் கால்வாய், தாது வருடப் பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை கொடுப்பதற்காகவே வெட்டப்பட்டது.பல ஆண்டுகள் இக்கால்வாய் போக்குவரவுக்குப் பயன்பட்டது. வீடுகளின்பெருக்கத்தாலும், தொழிற்சாலைகளாலும் இந்தக் கால்வாய் இன்று சாக்கடையாகச் சுருங்கிவிட்டது.

நிவாரண உதவிகளை முடுக்கிவிட வேண்டிய இந்தக் காலகட்டத்தில்தான் அப்போதைய சென்னை மாகாண கவர்னராக  இருந்த ரிச்சர்ட் க்ரென்வில் பொழுதுபோக்கு சுற்றுலாவிற்காக அந்தமான், நிக்கோபார், பர்மா என பயணித்துக் கொண்டிருந்தார். அவர் இலங்கை சென்றடையும்போதுதான் சென்னையில் உணவுப் பஞ்சத்தால் ஏற்பட்டக் கலவரம் பற்றியே அவருக்குத் தெரிய வந்தது.
உடனே அவர் இதை  இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த ராபர்ட் பல்வர் லிட்டனிடம்  தெரியப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அப்போது இந்திய அரசாங்கத்தின் பஞ்சக்குழு ஆணையர் ரிச்சார்ட் டெம்பிள்  "டெம்பிள் வேஜ்’’  என்ற புதிய ஊதியக் கொள்கையை உருவாக்குகிறார். இதன்படி பிரிட்டிஷ் அரசின் கீழ் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மட்டும் 450 கிராம்(அப்போது சேர் கணக்குதான். நமக்குப் புரிவதற்காக கிராமில்) பருப்பும் ஒரு அணா காசும் வழங்கப்பட்டது.

பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் இதைவிடக் குறைவான அளவே வழங்கப்பட்டது. அதேசமயம் நிவாரணக் கூலி பெற்றவர்களைக் கடுமையாக வேலை வாங்கவும் செய்தனர். சென்னை நகரின் அருகில் உள்ள பக்கிங்காம் கால்வாய் இவ்வாறுதான் வேலை வாங்கி, கட்டப்பட்டது. இந்த நிவாரணம் போதாது என்று கூறி போராட்டம் வலுத்ததன் விளைவாக 1877-இல் பருப்பின் அளவு 570 கிராமாக உயர்த்தப்பட்டாலும் பஞ்சத்தால் உடல் நலிந்திருந்த மக்களை மலேரியா தாக்கியதில் மேலும் பல லட்சம் பேர் உயிரிழந்தனர்.
இந்தப் புகைப்படங்களை  எடுத்த வில்லோபை வாலஸ் ஹூப்பர் அப்போது பிரிட்டிஷ் இராணுவத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த குதிரைப்படை பணியில் இருந்தார்.புகைப்படக்கலை இவரது பொழுதுபோக்கு என்பதால் இராணுவப் பணி செய்தபடியே  புகைப்படங்களும்  எடுத்துக் கொண்டிருந்தார். 1872-இல் ’’இந்தியாவின் மக்கள்’’ என்ற மிகப் பிரபலமான புகைப்படத் தொகுப்பை வெளியிட்டார்.

இந்தச் சூழலில்தான் அப்போது ஏற்பட்ட பஞ்சத்தையும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களையும் தனது கேமராவினால் பதிவு செய்தார்.  பிரிட்டிஷ் இந்தியாவில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தின் துயரத்தை உலகத்திற்குக் காட்டியதில் வில்லோபை வாலஸ் ஹூப்பரின் புகைப்படங்களே முக்கியக் காரணமாக  இருந்தன.
அதேசமயம் பஞ்சத்தைக் காட்டுவதற்காக பட்டினியால் வாடிக் கொண்டிருந்த பலரை அவரது ஸ்டுடியோவிற்கே அழைத்துச் சென்று புகைப்படம் எடுத்துவிட்டு, அவர்களுக்கு உணவைக்கூட அளிக்காமல் திருப்பி அனுப்பும்போது பலர் இறந்துபோயினர். இந்தக் கொடும் செயலால் கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளானார் ஹூப்பர்!

நாம் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்போது ‘சாப்பிட்டாச்சா’ என்று  கேட்டுக்கொள்கிறோமே, இந்த வழக்கம் ஆரம்பித்தது தாது வருடப் பஞ்ச காலத்தில்தான் என்பது நினைவில் கொள்ளத்தக்கது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக