புதன், 21 ஜூலை, 2021

முறைகேடான டெண்டர்கள் ரத்து செய்யப்படும்: கே.என்.நேரு

 மின்னம்பலம் :டெண்டர்களில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் அது ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் இன்று (ஜூலை 21) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதன்பின் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
“கோயம்புத்தூர் ,சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாநகராட்சிகள் , நகராட்சிகள் , பேரூராட்சிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளில் தற்போதைய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த பணிகளை விரைவாக முடிக்கவும், ஆரம்பிக்கப்படவுள்ள பணிகளில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் எதனால் தாமதம் ஏற்படுகிறது என்றும் ஆலோசிக்கப்பட்டது. பாதாளச் சாக்கடை திட்டம், குடிநீர் வழங்கல் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை விரைவாக முடிக்க முதல்வர் ஆய்வை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்படி சம்பந்தப்பட்ட மாநகராட்சி ஆணையர்கள் இன்றைய கூட்டத்தில் விளக்கமளித்தனர்” என்றார்.



இதன்பின் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த அவர், “துறைவாரியாக வரும் புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, இந்த துறையில் நடந்துள்ள ஊழல் குறித்து ஆளுநரிடமும், நீதிமன்றத்திலும் புகார் தொடுத்தார். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடந்து வருகிறது. இதில் தவறு நடந்தது தெரிய வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சிக்காலத்தில் முறைகேடாக டெண்டர்கள் போடப்பட்டது கண்டறியப்பட்டால் ரத்து செய்யப்படும். ஏற்கனவே சென்னையில் 120 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் எங்கெங்கு மழைநீர் தேங்குகிறது என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். பக்கிங்ஹாம் கால்வாயில் சாக்கடை நீர் கலக்கிறது. எனவே, சாக்கடை நீர், நதிகளில் கலக்காமல் தனியாகக் குழாய்கள் மூலம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் 330 கழிவுநீர் கலக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அதனைச் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆட்சியில் விடப்பட்ட பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிங்கார சென்னை திட்டம் குறித்து முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவிப்பார்.

உள்ளாட்சித் தேர்தலைப் பொருத்தவரை, மாநகராட்சியில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்றார்போல் வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. புதிய மாநகராட்சி நகராட்சியை உருவாக்குவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறோம். அப்படி உருவாக்கப்பட்டால், இதில் சில மாற்றங்கள் ஏற்படும். இதையும் நாங்கள் கணக்கில் எடுக்க வேண்டும்.

ஏற்கனவே ஊரக பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் 5 ஆண்டுகள் பதவிக்காலம் அப்படியே இருக்கும். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பணியாற்றுவார்கள். தேர்தல் மாறி மாறிதான் நடைபெறும். எத்தனை மாநகராட்சிகள் நகராட்சிகள் உருவாக்கப்படும் என்று முதல்வர்தான் அறிவிப்பார் எனக் கூறினார்.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக