ஞாயிறு, 25 ஜூலை, 2021

சார்பட்டா’ மிக வருத்தமளிக்கிறது...'' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

நக்கீரன் செய்திப்பிரிவு :   பா. இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், துஷாரா, ஜான் கொக்கென் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம், அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், விமர்சன ரீதியாக பலராலும் கொண்டாடப்பட்டுவருகிறது.
‘சார்பட்டா’ படத்தில் எம்ஜிஆரை தவறாக சித்தரித்துள்ளது வருத்தமளிப்பதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ''‘சார்பட்டா’ படம் முழுக்க முழுக்க திமுக பிரச்சார படமாகவே இருக்கிறது. எம்ஜிஆருக்கும் விளையாட்டுத் துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. கலை மூலம் உண்மைகளை மறைப்பது, வருங்கால தலைமுறைக்குச் செய்யும் துரோகம். விளையாட்டை விடாப்பிடியாக கைக்கொண்ட எம்ஜிஆர், எத்தனையோ வீரர்களை ஊக்குவித்தவர். அவரை தவறாக சித்தரித்துள்ளது வருத்தமளிப்பதாக உள்ளது'' என தெரிவித்துள்ளார்.

 Karthikeyan Fastura  :   #சார்பட்டா  படம் வந்த அன்று நள்ளிரவில் பார்த்ததற்கு பிறகு நேற்று மீண்டும் ஒருமுறை அந்த படத்தை பார்த்தேன்.
இன்னும் நிறைய முறை இந்த படத்தை பார்க்க படத்தில் அழகான காட்சிகள்,  கதாபாத்திரங்கள் உண்டு.


ஒவ்வொரு படத்திற்கும் அழகு அந்த படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் transformation. அதுவரை சாதாரணமாக தெரிபவர்கள் அந்த ஒரு காட்சியில் மொத்தமாக ஒரு புது வடிவம் எடுத்து இருப்பார்கள்.  
அது படத்தின் இறுதிக் காட்சியை விட மிகவும் வலிமையாக இருக்கும்.
இந்தப் படத்திலும் சில transformation காட்சிகள் உண்டு.
1. கபிலன் ராமனை சண்டைக்கு இழுக்கும் காட்சி. அப்போதுதான் கபிலனின் இயல்பான திறன் வாத்தியாருக்கு தெரிகிறது. அகம் மகிழ்ந்து போகிறார். அங்கே கபிலன் கதாபாத்திரம் உருமாற்றம் அடைகிறது.
2. மாரியம்மா கதாபாத்திரம் மிக அழகாக படைக்கப்பட்டிருக்கும். முதல் இரவில் அவர் திடீரென்று குத்தாட்டம் போடுவது கூட பெரிய மாற்றம் என்று சொல்ல மாட்டேன். கபிலனின் கண்டுகொள்ளாமையை பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, டேய் நில்லுடா ஒரு நாள் இங்க ஒருத்தி இருக்கா என்ற நினைப்பு உனக்கு இருக்கா இல்லையா.. என்று ஆரம்பித்து.., வா வந்து எனக்கு சோறு ஊட்டி விடு. என்று தனது பாத்திரத்தின் வலிமையை உரிமையை உரக்கச் சொல்வார்.



3. டாடி கதாபாத்திரத்தை துணை பாத்திரமாக எண்ணி இருக்கும்போது, கபிலனுக்கு அவன் அம்மாவிற்கும் முதன்முறையாக பாக்ஸிங் போட்டு வந்தவுடன் நடக்கும் சச்சரவில் குழம்பிப்போன கபிலனை தெளிய வைப்பார். இப்பதான் நீ கரெக்டான பாதைக்கு போக ஆரம்பிச்சுருக்கிற இனி அப்படியே போக வேண்டியதுதான். அந்த ஓல்டு லேடி பேசுவதை பெருசா எடுத்துக்காத என்று தந்தையாக ஞானகுருவாக பலப்படுத்துவார்.

4. கபிலனின் அம்மா பாத்திரம் கபிலன் முதல் சண்டைக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவனது பாக்ஸிங்கை ஏற்றுக் கொண்டிருப்பார். அது உருமாற்றம் அல்ல. இறுதிக் காட்சிக்கு சற்று முன்பு எவன்டா அவன் என் பிள்ளைய பாக்ஸிங் விளையாடக் கூடாதுன்னு சொன்னது.? Daddy இப்ப பீடி தாத்தா எங்கே இருப்பார்? " என்று சரியான வழியைக் காட்டி தைரியம் கொடுப்பார். அங்கிருந்துதான் கிளைமாக்ஸ் காட்சிக்கான வலு சேரும்.

5. அதுவரை நண்பனாக வரும் கௌதமன் கபிலனுக்கு வேம்புலியுடன் சண்டை போட வேண்டும்,ஆனால் வாத்தியாருடன் இல்லை என்ற வருத்தத்தில் இருக்கும் போது நன்றாக உரைப்பது போல் எடுத்துச் சொல்வான். "இங்க வாய்ப்புங்கிறது நமக்கு அவ்வளவு சுலபமாக கிடைக்கிறது இல்லை. இது நம்ம ஆட்டம். எதிர்த்து ஆட வர்றவன் எவனாயிருந்தாலும் கலகலத்துப் போகணும். நீ ஆடு கபிலா.. என்று சொல்வான். அங்கேதான் இறுதி காட்சிக்கான தேவை உணர்த்தப்படுகிறது. அதுவரை நண்பனாக அறியப்பட்டவன் அந்த நிமிடம் பெரும் moral support ஆக மாறுகிறான்.

6. எதிரிகள் கூட்டத்தில் முக்கிய எதிரிக்கு நண்பனைப் போல வரும் கதாபாத்திரம் திடீரென்று பாக்ஸிங் அவதாரம் எடுக்கும். அதுதான் டான்சிங் ரோஸ். அப்பொழுது கூட நமக்கு அந்தக் கதாபாத்திரத்தின் வீரியம் புரியாது. ரங்கன் வாத்தியார் கபிலனுக்கு எடுத்துச் சொல்லும்போது " நீ வேம்புலி கூட மோத கூடிய அளவுக்கு ஆட்ட காரணமாக இருக்கலாம் அதுக்காக டான்சிங் ரோசை ஈசியாக கெலிச்சிடலாம்னு நினைத்திராத.. என்று சொல்லும்போது டான்சிங் ரோஸின் கதாபாத்திரம் உருமாற்றம் கொள்ளும். அந்த ஆட்டம் இரண்டு ரவுண்ட் என்றாலும் மிகச் சிறப்பாக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதில் அந்த கதாபாத்திரத்தின் வீரியத்தை சொல்ல முகமது அலியின் பிரசித்திபெற்ற வாக்கியத்தை வாத்தியார் சொல்வார். ரிங்குள்ள போயிட்டா.. பட்டாம்பூச்சி மாதிரி பறக்கணும் தேனீ மாதிரி கொட்டணும். அவன்தான் ஆட்டக்காரன். என்பார். உண்மையில் முகமது அலியின் அந்த சொற்றொடருக்கு ஏற்றார்போல விளையாடும் குத்துச்சண்டை வீரனாக ரோஸ் மட்டுமே இருப்பார். அதனால்தான் அந்த கதாபாத்திரம் எல்லோருக்கும் பிடித்துப் போனது.

நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் திடீரென்று ஒரு புது அவதாரம் எடுப்பார்கள். ஏன் நமக்கே கூட இது மாதிரி உருமாற்றம் நிகழ்த்தும் வாய்ப்பு கிடைத்து இருக்கலாம். அதுவரை நம்மை பார்த்தவர்களின் பார்வை மாறி அவர்களின் புருவம் சற்று உயர்ந்து நிற்கும். என் வாழ்வில் பல இடங்களில் இதுபோன்று நடந்து இருக்கிறது. இனியும் நடத்தவேண்டும் என்பதே எனக்கான வாழ்வின் சுவாரஸ்யமாக இருக்க முடியும். அதற்கு நம்மை நாமே உடைத்துக்கொண்டு வெளியில் வர முயற்சிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக