செவ்வாய், 6 ஜூலை, 2021

ஆப்கானிஸ்தான் மீண்டும் தாலிபன்களின் வசமாகிறதா? வெளிநாட்டுக்கு தப்பி ஓடும் ஆப்கான் படை வீரர்கள்

BBC : ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் தாக்குதலுக்கு அஞ்சி ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுமார் 1,000 ராணுவ வீரர்கள் அண்டை நாடான தஜிகிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தங்களது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவர்கள் பின்வாங்கியதாக தஜிகிஸ்தானின் எல்லைப் பாதுகாப்புப் படைகூறியுள்ளது.
கடந்த சில வாரங்களாக ஆப்கானிஸ்தானின் பல்வேறு இடங்களிலும் தாலிபன் இயக்கத்தினர் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நேட்டோ படையினர் வெளியேறியிருக்கும் நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடக்கின்றன.
 
எஞ்சியிருக்கும் வெளிநாட்டுப் படையினர் வரும் செப்டம்பருக்குள் வெளியேற கெடுவிதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் ஏற்கெனவே வெளியேறிவிட்டனர்.


உடன்பாட்டுக்குப் பிறகும் தாக்குதல் ஏன்?

தாலிபன்களுடன் அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் ஒர் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கின்றன. இதன்படி அல்-கய்தா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களை தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இயங்குவதற்கு அனுமதிப்பதில்லை என தாலிபன் ஒப்புக் கொண்டிருக்கிறது.
தாலிபன் அமைப்பின் தலைவர்கள் (கோப்புப்படம்)

அதே நேரத்தில் ஆப்கன் ராணுவத்துடன் சண்டை நிறுத்தம் செய்து கொள்வதற்கு தாலிபன்கள் ஒப்புக்கொள்ளவில்லை. தலிபான்களிடம் இப்போது ஆப்கானிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதி கட்டுப்பாட்டில் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

அவர்கள் நாள்தோறும் மேலும் சில பகுதிகளை கைப்பற்றி வருகிறார்கள். குறிப்பாக, தஜிகிஸ்தான் எல்லைக்கு வெகு அருகே உள்ள பாதக்ஷான், தக்கார் மாகாணங்களில் தாலிபன்கள் வெகுவாக முன்னேறி வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தான் படையினர் தஜிகிஸ்தான் எல்லைக்குள் தஞ்சம் அடைவது கடந்த மூன்று நாட்களில் இது மூன்றாவது முறை. கடந்த இரு வாரங்களில் இது ஐந்தாவது முறையாகும். ஆஃப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளை எதிர்கொள்ள முழு திறன் பெற்றுள்ளதாக அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கானி வலியுறுத்தி வருகிறார்.

அதே சமயம், அந்த நாட்டு படையினர் பலரும் சமீப காலமாக பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் எல்லைக்குள் தஞ்சம் அடைவதாக தகவல்கள் வருகின்றன. ஆஃப்கானிஸ்தானில் தாக்குதல்கள் தீவிரமானால், போர் நடக்கும் இடங்களில் வாழும் மக்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள மத்திய ஆசிய நாடுகளை நோக்கி அகதியாக தஞ்சம் அடையலாம் என்கிற நிலையும் நிலவுகிறது.

பிபிசியின் சர்வதேச தலைமை செய்தியாளர் லீஸ் டூசெட், ஆஃப்கானிஸ்தானில் உள்ள மக்களின் வாழ்க்கை நிச்சயமற்றதாக உள்ளது என்று கூறியுள்ளார்.

இவர்களின் தாய்நாடு எதை நோக்கிச் செல்கிறது என்பது நிச்சயமற்று உள்ளது. தங்களின் சொந்த கிராமம், நகரம், தங்களின் குடும்பம் மற்றும் வாழ்க்கை என்னவாகும் என்பதை அறியாதவர்களாக இவர்கள் உள்ளனர் என்கிறார் லீஸ் டூசெட்.

எனினும், தீவிரமாகும் வன்முறைக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று தாலிபன் தரப்பு செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

பல மாவட்டங்களில், போரிட ஆஃப்கானிஸ்தான் படையினர் மறுத்து விட்டதால், மத்தியஸ்தம் மூலமே அவை தங்கள் வசம் வந்ததாக சுஹைல் ஷாஹீன் கூறியுள்ளார்.

ஆஃப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த தாலிபன்களை 2001ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை அகற்றியது.

அமெரிக்காவில் 9/11 தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய ஒசாமா பின் லேடன், அல்-காய்தாவைச் சேர்ந்தவர்களுடன் தாலிபன்கள் சேர்ந்து செயல்பட்டதால் அங்கு ஆக்கிரமிப்பு செய்து புதிய ஆளுகையை அமெரிக்கா நிறுவியது.

மேற்கு நாடுகளுக்கு எதிரான வெளிநாட்டு ஜிஹாதிகளின் முகாமாக ஆஃப்கானிஸ்தான் மாற்றப்படாது என்பதை அமெரிக்க படையினர் உறுதிப்படுத்தி விட்டதால், அந்த நாட்டில் இருந்து தமது படையினர் விலக்கிக் கொள்ளப்படுவது சரியானது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார்.
தாலிபன்கள் யார்?

தாலிபன்கள் என்றால் பஷ்தோ மொழியில் மாணவர்கள் என்று பொருள். 1990-களின் தொடக்கத்தில் மதராஸாக்களில் பயின்ற சுமார் 50 மாணவர்கள் முல்லா ஒமர் தலைமையில் இணைந்து உருவாக்கிய இயக்கம் இது. இவர்களிடம் பத்துப் பதினைந்து துப்பாக்கிகள் மட்டுமே இருந்தாகக் கூறப்படுகிறது.

1980-களில் ஆப்கானிஸ்தானில் நடந்த சோவியத் போரின் கொடுமைகளில் இருந்தும், உள்நாட்டுப் போரின் சித்திரவதைகளில் இருந்தும் தப்பித்து பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் தங்கியிருந்த அகதிகள் இந்த இயக்கத்தில் இணையத் தொடங்கினர்.தாலிபன் அமைப்பு தங்களைக் கொடுமையில் இருந்து விடுவிக்க வந்த இயக்கம் என்று அவர்கள் நம்பினர்.
ஆப்கானிஸ்தானில் அதிகரிக்கும் தாலிபான் செல்வாக்கு: பாகிஸ்தான் பதறுவது ஏன்?

அப்போது பாகிஸ்தானின் ராணுவத் தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப், தாலிபன் இயக்கத்துக்குத் தேவையான உதவிகளை வழங்கினார். ராணுவ வீரர்களும் தாலிபன் இயக்கத்தில் சேருவதற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் மூலம் 1996-ம் ஆண்டு காபூலைக் கைப்பற்றிய தாலிபன்கள் 2001-ம் ஆண்டு அமெரிக்கா மீதான பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் நடக்கும்வரை ஆப்கானிஸ்தானை தங்களது பிடியில் வைத்திருந்தனர்.

இந்தக் காலகட்டத்தில்தான் ஆப்கானிஸ்தானில் அல்-காய்தா இயக்கத்தின் பயிற்சி முகாம்கள் திறக்கப்பட்டன. ஒசாமா பின் லேடனும், அல்-ஜவாஹிரியும் அல்-காய்தா இயக்கத்துக்கு ஆள் சேர்த்து வந்தனர். இவர்களை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தாலிபன்கள் ஏற்காததையடுத்து, நேட்டோ படைகள் ஆப்கனுக்குள் புகுந்தன.

இதன் பிறகு தாலிபன்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டாலும், கடந்த இருபது ஆண்டுகளில் பல்வேறு தாக்குதல்கள் மூலம் தங்களது இருப்பை உணர்த்திக் கொண்டே இருக்கின்றனர்.
20 ஆண்டுகளில் நடந்தவை என்னென்ன?

2001 செப்டம்பர் 2001: ஒசாமா பின் லேடன் தலைமையிலான அல் காய்தா அமைப்பு அமெரிக்காவில் மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியது. நான்கு விமானங்கள் கடத்தப்பட்டு, நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையம், வாஷிங்டனில் உள்ள பென்டகன் கட்டடம் உள்ளவை தாக்குதலுக்கு உள்ளாகின. சுமார் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

2001 அக்டோபர் 7: அமெரிக்கக் கூட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்த தாலிபன்கள் மற்றும் அல்-கய்தா முகாம்கள் மீது முதல் முறையாக வான்வெளித் தாக்குதலைத் தொடங்கின. காபூல், காந்தஹார், உள்ளிட்ட இடங்கள் தாக்கப்பட்டன. பின் லேடனை ஒப்படைக்க தாலிபன்கள் மறுத்தனர்.

2001 நவம்பர் 13: மேற்கு நாடுகளின் ஆதரவுடன் தாலிபன்களுக்கு எதிரான படைகள் காபூலைக் கைப்பற்றின. தாலிபன்கள் காபூலை விட்டு வெளியேறினர்.

2004 ஜனவரி 26: ஆப்கானில் புதிய அரசியல் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன் படி 2004 அக்டோபர் மாதத்தில் அதிபர் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

2004 டிசம்பர் 7: புதிய அரசியல் சட்டப்படி முதல் அதிபரானார் ஹமீத் கர்சாய்

2006 மே: ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் தாலிபன்களுக்கு எதிரான போரில் பிரிட்டிஷ் படை களமிறங்கியது.

2009 பிப்ரவரி 17: ஒபாமா அமெரிக்க அதிபரான பிறகு ஆப்கானிஸ்தானில் படைகளை அதிகரிக்க உத்தரவிட்டார். ஒரு கட்டத்தில் 1.4 லட்சம் வீரர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்தனர்.

2011 மே 2: பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் ஒசாமா பின் லேடன் அமெரிக்க நேவி சீல் படையின் ரகசிய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

2013 ஏப்ரல் 23: தாலிபன்கள் இயக்கத்தை நிறுவிய முல்லா முகமது ஒமர் மரணமடைந்தார். ஆப்கன் உளவுத்துறை தகவலின் அடிப்படையில், அவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்ததாகத் தெரியவந்தது.

2014 டிசம்பர் 28: நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் தங்களது நடவடிக்கைகளை முடித்துக் கொண்டன. அமெரிக்காவும் தங்களது படைகளை வெகுவாகக் குறைக்கத் தொடங்கியது.

2015: தாலிபன்கள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தினர். நாடாளுமன்றக் கட்டடம் தாக்கப்பட்டது. தாலிபன்கள் மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கினர்.

2019 ஜனவரி 2019: 2014-ஆம் ஆண்டு நேட்டோ படைகள் வெளியேறிய பிறகு நடந்த சண்டைகளில் ஆப்கனின் 45,000 வீரர்கள் கொல்லப்பட்டதாக அதிபர் அஷ்ரப் கானி அறிவித்தார்.

2020 பிப்ரவரி 29: அமெரிக்காவும் நேட்டோ கூட்டுப் படைகளும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்கு தாலிபன்களுடன் உடன்பாடு செய்து கொண்டன.

2021 செப்டம்பர் 11: அமெரிக்காவில் தாக்குதல் நடத்தப்பட்டு சரியாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதே நாளில் அமெரிக்கப் படைகளை முழுமையாக விலக்கிக் கொள்வதற்கு நாள் குறிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக