புதன், 7 ஜூலை, 2021

அமரர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் கொலை .. டெல்லியில் உள்ள வீட்டில் ..

BBC : காலம்சென்ற முன்னாள் இந்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி டெல்லியில் தமது வீட்டில் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் கூறுகிறது.
68 வயதான இவர், வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தார்.
தெற்கு டெல்லியில் வசந்த் விகாரில் உள்ள தமது வீட்டில் இவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னொருவரை போலீஸ் தேடி வருவதாகவும் டெல்லி போலீஸ் துணை ஆணையரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது ஏ.என்.ஐ. செய்தி முகமை.
அவரது வீட்டில் துணை துவைப்பவராக இருந்தவர், அவரது இரண்டு உதவியாளர்களுடன் செவ்வாய்க்கிழமை இரவு இந்தக் கொலையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்கள் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்.


குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ராஜு லக்கான் (24) கைது செய்யப்பட்டிருக்கிறார்.
வீட்டு உதவிப் பணியாளர் மஞ்சு என்பவர் புகார் அளித்தபோது போலீசுக்கு இது குறித்து தெரியவந்தது.
கிட்டியின் கணவர் ரங்கராஜன் குமாரமங்கலம் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற அரசியல் குடும்பத்தில் தோன்றியவர். அவரது தாத்தா சுப்பராயன் விடுதலைக்கு முந்திய சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர். இவரது தந்தை மோகன் குமாரமங்கலம் புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் தலைவராக இருந்து காங்கிரஸ் கட்சிக்கு மாறியவர்.
ரங்கராஜன் குமாரமங்கலமும் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளில் இருந்தவர். நரசிம்மராவ், வாஜ்பேயி ஆட்சிகளில் இந்திய அரசில் அமைச்சராக இருந்தவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக