சனி, 10 ஜூலை, 2021

கொங்குநாடு தனி யூனியன் பிரதேசமாகிறது .. மேற்கு மண்டலம் .. தினமலர்

யூனியன் பிரதேசம், மேற்கு மண்டலம் ,கொங்கு நாடு

தினமலர் :மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என, தி.மு.க.,வினர் கூறி வருவதால் கடும் அதிருப்தியில் உள்ள மோடி அரசு, அதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
தமிழகத்தின் மேற்கு பகுதியான கொங்கு மண்டலத்தை, 'கொங்கு நாடு' என்ற பெயரில், தனி யூனியன் பிரதேசமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை துவக்கியுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்குப் பின், அரசியல் களம் மந்த நிலையை நோக்கிச் செல்லும் என அனைவரும் நினைத்த நேரத்தில், பா.ஜ., மேலிடத்தின் அடுத்தடுத்த நகர்வுகள், அதை சூடு பிடிக்க வைத்துள்ளன.
புதிதாக பதவியேற்ற தமிழக அரசு, ஜி.எஸ்.டி., கூட்டத்தில் எதிர்ப்பு, 'நீட்' தேர்வின் தாக்கத்தை ஆய்வு செய்ய குழு அமைத்தது என, மத்திய அரசுடன் மோதல் போக்கை பின்பற்றி வருகிறது. இதன் உச்சகட்டமாக தமிழக சட்டசபையில், 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையை களங்கப்படுத்தி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் உறுப்பினர் ஈஸ்வரன் பேசியது, மத்திய அரசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈஸ்வரன், தி.மு.க.,வின் உதய சூரியன் சின்னத்தில் நின்று, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றவர். ஜெய்ஹிந்த் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசிய போது, அதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.,வினர் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

மேலும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சமீப காலமாக மத்திய அரசை ஒன்றிய அரசு எனக்கூறி வருவது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒன்றிய அரசு என்ற வார்த்தையை, தி.மு.க.,வினர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். பிரிவினைவாதத்தை துாண்டும் நோக்கத்தில் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்துவதாக, தேசபக்தர்களும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

தி.மு.க.,வினரின் இந்த நடவடிக்கைகள், மத்திய அரசையும், பா.ஜ., மேலிடத்தையும் கடும் கோபம் அடையச் செய்துள்ளன.ஏற்கனவே இது தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பினர் தரப்பில், மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.,வினரும், இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு மேலும் பொறுமை காக்க முடியாது என்ற எண்ணத்தில், இதற்கு பதிலடி கொடுக்க, மத்திய அரசு தயாராகி வருகிறது. இதன் வெளிப்பாடாகவே, சமீபத்தில் மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற முருகனை பற்றிய குறிப்புகளில், கொங்கு நாடு என்ற வார்த்தை இடம் பெற்றதாகவும், மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


90 சட்டசபை தொகுதிகள்


தமிழகத்தின் மேற்கு பகுதியில் உள்ள கொங்கு மண்டலத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, நீலகிரி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த மண்டலத்தில், 10 லோக்சபா தொகுதிகளும், 61 சட்டசபை தொகுதிகளும் உள்ளன. இவற்றோடு அருகில் உள்ள சில தொகுதிகளையும் சேர்த்து, மொத்தம் 90 சட்டசபை தொகுதிகளுடன் கொங்கு நாடு என்ற பகுதியை பிரித்து, அதை புதுச்சேரி போல, தனி யூனியன் பிரதேசமாகஅறிவிக்கவும், மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கொங்கு மண்டலத்தில், பா.ஜ.,வுக்கென தனியாக ஓட்டு வங்கி உள்ளது. சமீபத்தில் இப்பகுதியில் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., படுதோல்வியை சந்தித்துஇருந்தது. இதை வைத்து, எதிர்காலத்தில் தி.மு.க.,வுக்கு விளையாட்டு காட்ட, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன், பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த மண்டலத்தைச் சேர்ந்த முருகன், மத்திய இணை அமைச்சராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக இந்த பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் வாயிலாக கொங்கு மண்டலத்தில், தி.மு.க.,வுக்கு நேரடி போட்டியாக பா.ஜ.,வை முன்னிறுத்துவதற்கான முயற்சிகள் துவங்கிஉள்ளன.புதிதாக அமையும் யூனியன் பிரதேசத்துக்கு கொங்கு நாடு என, பெயர் சூட்டவும் திட்டம் தயாராக உள்ளது. இதற்காக துணை நிலை கவர்னரை நியமிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

வரும், 2024ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, கொங்கு நாடு யூனியன் பிரதேசத்தை அமைக்கும் நடவடிக்கைகள் துவக்கப்பட உள்ளன. ஒன்றிய அரசு என வெறுப்பேற்றி வருவோருக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், தமிழகத்தில் தங்கள் கட்சி எதிர்காலத்தில் வலுவான கட்சியாக காலுான்றவும், இந்த யூனியன் பிரதேச அஸ்திரத்தை, பா.ஜ., கையில் எடுத்துள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- புதுடில்லி நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக