புதன், 28 ஜூலை, 2021

9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்: படையெடுக்கும் கழகங்கள்!

9  மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்:  படையெடுக்கும் கழகங்கள்!

 minnambalam :தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணிகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியிருக்கிறது.

2011 ஆம் ஆண்டு தமிழகம் முழுதும் உள்ளாட்சித் தேர்தல் நடந்த நிலையில், அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2016 ஆம் ஆண்டோடு முடிந்தது. அடுத்த உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாரான நிலையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். இதனையடுத்து அதிமுகவில் நிகழ்ந்த அதிகார யுத்தத்தால் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப் போனது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2019 ஆம் ஆண்டு கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் 27 மாவட்டங்களில் தேர்தல் நடந்தது.

மீதியிருக்கும் மாவட்டங்களில் நிர்வாகப் பிரிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்ததால் பிரிக்கப்பட்ட மாவட்டங்களையும் சேர்த்து 9 மாவட்டங்களில் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை. இந்நிலையில் அண்மையில் உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து ஆளுங்கட்சியான திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களில் அதற்கான பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டது.

நேற்று (ஜூலை 27) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனையும் நடைபெற்ற நிலையில் இன்று (ஜூலை 28) தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வாக்குச் சாவடி அமைத்தல், வாக்காளர் பட்டியல் தயாரித்தலுக்கான அறிவுரைகள் அடங்கிய கையேட்டை வெளியிட்டுள்ளது.

இதன்படி உள்ளாட்சித் தேர்தலுக்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் முறைப்படி தொடங்கிவிட்டது.

எனவே விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை. திருப்பத்தூர், நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடப்பது உறுதியாகிவிட்டது. எனவே ஒன்பது மாவட்டங்களை நோக்கி ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் கவனிப்பு தொடங்கிவிட்டது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக