வியாழன், 1 ஜூலை, 2021

தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 நக்கீரன் :பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (30/06/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "எம்.கே.டி. என்று அன்போடு அழைக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர், தமிழ் திரைப்பட உலகின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனும், மிகச்சிறந்த கர்நாடக சங்கீத பாடகருமாகத் திகழ்ந்தவர் ஆவார்.
அவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக தமிழகத்தில் அன்றைய காலகட்டத்தில் உலா வந்தன. குறிப்பாக, 1944- ஆம் ஆண்டு வெளியான 'ஹரிதாஸ்' என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த இவர், தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராகக் கருதப்பட்டார்.


தமிழ் திரையுலகில் மிகப்பிரபலமாக அக்காலக்கட்டத்தில் விளங்கிய எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழிப்பேரன் சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினர்,
தற்போது மிகவும் வறிய நிலையில், குடியிருக்க வீடின்றி, மிகவும் சிரமமான சூழ்நிலையில் வசித்து வருவதை அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாய்ராம் குடும்பத்தினருக்கு அரசு சார்பில், குறைந்த வாடகையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், பொது ஒதுக்கீட்டின் கீழ் வீடு ஒன்றினை ஒதுக்கித் தர உத்தரவிட்டுள்ளதோடு,
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக