திங்கள், 19 ஜூலை, 2021

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது

 மாலைமலர் :மாணவர்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சென்னை:   கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. கடந்த கல்வியாண்டு முடிந்து, நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகளும் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ்-அப் வாயிலாக தொடங்கி நடைபெற்று வருகின்றன.
கடந்த கல்வியாண்டில் (2020-21) மாணவ-மாணவிகளின் நலன் கருதி, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வு உள்பட மற்ற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வும் ரத்து செய்யப்படுவதாகவும், தேர்வு எழுதாமலேயே அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் அரசால் அறிவிக்கப்பட்டது.



இதில் பிளஸ்-2 மதிப்பெண் உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு மிகவும் அவசியம் என்பதால், அந்த பொதுத் தேர்வுக்கு மட்டும் மதிப்பெண் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் எஸ்.எஸ்.எஸ்.சி. பொதுத் தேர்வில் இருந்து 50 சதவீதம், பிளஸ்-1 பொதுத் தேர்வில் இருந்து 20 சதவீதம், பிளஸ்-2 செய்முறை தேர்வில் 30 சதவீதமும் என 100 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கான பணிகளில் அரசு தேர்வுத் துறையும், கல்வித் துறையும் கடந்த சில நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அரசு அறிவித்தபடி, ஒவ்வொரு மாணவர்களின் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 பொதுத் தேர்வு மதிப்பெண், பிளஸ்-2 வகுப்பு செய்முறைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அனைத்தும் பெறப்பட்டு 100 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டன.

கோப்புபடம்

அந்தவகையில் இந்த பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில், இந்த மதிப்பெண்களை கணினியில் பதிவிடும் பணி நடந்து வந்தன. இதையடுத்து பிளஸ்-2 வகுப்பு முடிவு இன்று வெளியானது.

சென்னை, டிபிஐ வளாகத்தில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மதிப்பெண் பட்டியலை வெளியிட்டார்.

பள்ளி மாணவர்கள் http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in, http://dge.tn.gov.in என்ற இணையதளங்களில் தங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மாணவர்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும்.

மேலும் பள்ளி மாணவர்கள் வருகிற 22-ந்தேதி காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில் தங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக