திங்கள், 5 ஜூலை, 2021

26 தனிப்பிரிவு காவலர்கள் ஒரே நாளில் கூண்டோடு டிரான்ஸ்பர்!

nakkheeran.in - இளையராஜா :நாமக்கல் மாவட்டக் காவல்துறை தனிப்பிரிவில் பணியாற்றி வரும் 26 தலைமைக் காவலர்களை எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் ஒரே நாளில் கூண்டோடு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.ஒவ்வொரு மாவட்டக் காவல்துறையிலும் எஸ்.பி.யின் நேரடி பார்வையின் கீழ் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவின் தலைமையிடத்தில் தனி காவல் ஆய்வாளர், எஸ்.ஐ.க்கள், தலைமைக் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.மாவட்டம் முழுவதும் அன்றாடம் நடக்கும், நடக்கப்போகும் நிகழ்வுகள் மட்டுமின்றி சில நேரங்களில் மோதல்கள், கொலைகள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் குறித்தும் முன்கூட்டியே தகவலறிந்து மாவட்ட எஸ்.பி.க்கு அளிக்கும் பணிகளைச் செய்து வருவது இப்பிரிவின் முதன்மைப் பணியாகும்.

மாவட்ட தலைமை இடத்தில் உள்ள தனிப்பிரிவுக்கு உதவியாக ஒவ்வொரு காவல்நிலையத்திற்கும் தனியாக தலைமைக் காவலர் அல்லது சிறப்பு எஸ்.ஐ.யும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்தந்த காவல்நிலைய எல்லைக்குள் நடந்த நிகழ்வுகள், குற்றச்சம்பவங்கள் மட்டுமின்றி, நடக்கப்போகும் நிகழ்வுகளையும் ஒற்றறிந்து தலைமையிட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர், தேவைப்பட்டால் நேரடியாக எஸ்பிக்கும் தகவல் அளிக்க வேண்டியது தனிப்பிரிவு காவல்நிலைய தலைமைக் காவலர்களின் பணியாகும்.

 காவல்நிலையங்களில் பணியாற்றி வரும் தனிப்பிரிவு காவலர்களை பெரும்பாலும் பணியிட மாற்றம் செய்வதில்லை. இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர், பொறுப்புக்கு வந்த நாள்முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

 இந்நிலையில் ஜூலை 2- ஆம் தேதி, தனிப்பிரிவு காவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். மாலை 04.00 மணிக்கு தொடங்கிய இக்கூட்டம், இரவு 10.00 மணிக்கு முடிந்தது. 

 ஒவ்வொரு காவல்நிலைய எல்லையிலும் நடந்த கடந்த கால சம்பவங்கள், சாதிய மோதல்கள், குற்ற நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். ஆய்வுக்கூட்டம் முடிந்து கிளம்பும்போது திடீரென்று, மாவட்டத்தில் உள்ள 26 காவல்நிலையங்களிலும் பணியாற்றி வரும் தனிப்பிரிவு தலைமைக் காவலர்கள், சிறப்பு எஸ்.ஐ.க்கள் 26 பேரையும் வெவ்வேறு காவல்நிலையத்திற்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

 எஸ்.பி.யிடம் இருந்து இப்படியொரு உத்தரவு வரும் என்று ஒருவரும் எதிர்பார்க்காததால், இடமாற்ற உத்தரவைக் கேட்டதும் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரே இடத்தில் பல ஆண்டாக பணியாற்றியவர்கள் மட்டுமின்றி 5 மாதம் மட்டுமே பணியாற்றியவர்களும் மாறுதலுக்கு உள்ளாகி உள்ளனர். 

 இடமாற்றம் செய்யப்பட்ட புதிய காவல்நிலையங்களில் அனைவரும் ஜூலை 5- ஆம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக