திங்கள், 21 ஜூன், 2021

தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக சட்டசபை இன்று கூடுகிறது கவர்னர் உரையாற்றுகிறார்

 தினத்தந்தி : தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) கூடுகிறது. இதில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.
சென்னை, ஒவ்வொரு ஆண்டும் கூடும் சட்டசபை முதல் கூட்டத்தில் கவர்னர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது.
அதேபோல், புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டத்திலும் கவர்னர் உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில், 16-வது சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, முதல் சட்டசபை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற இருக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்ற இருக்கிறார்.


சரியாக காலை 9.55 மணிக்கு கலைவாணர் அரங்கத்திற்கு வரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சபாநாயகர் மு.அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று கூட்ட அரங்கிற்கு அழைத்து செல்வார்கள். கவர்னருடன் அவரது செயலாளர் ஆனந்த்ராவ் வி.பாட்டிலும் வருகை தருவார்.

சட்டசபை கூட்ட அரங்கத்திற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகை தந்ததும் நேராக சபாநாயகர் இருக்கைக்கு செல்வார். அங்கு சென்றதும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அவர் வணக்கம் தெரிவிப்பார்.

புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு

அதன்பின்னர், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்ற தொடங்குவார். கவர்னர் இருக்கைக்கு வலதுபுறம் போடப்பட்டிருக்கும் இருக்கையில், சபாநாயகர் மு.அப்பாவுவும், இடதுபுறம் போடப்பட்டிருக்கும் இருக்கையில் கவர்னரின் செயலாளர் ஆனந்த்ராவ் வி.பாட்டிலும் அமர்ந்திருப்பார்கள்.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்துவார். இந்த உரை சுமார் 1½ மணி நேரம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது உரையில் புதிய அறிவிப்புகள் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அவர் பேசி முடித்ததும், அந்த உரையை தமிழில் சபாநாயகர் மு.அப்பாவு வாசிப்பார்.

அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்

அத்துடன் முதல் நாள் கூட்டம் முடிவுக்கு வரும். அதன்பின்னர், சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில், சட்டசபையில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள்.

அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாள் நடத்துவது? என்பது குறித்து முடிவு செய்யப்பட இருக்கிறது. அனேகமாக வரும் வியாழக்கிழமை வரை (24-ந் தேதி) கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.

நன்றி தெரிவிக்கும்தீர்மானத்தின் மீது விவாதம்

முதல் 2 நாள் கூட்டத்தில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். இதில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசுவார்கள். நிறைவு நாளில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதில் உரையை வழங்குவார்.

கொரோனா பரவலுக்கு மத்தியில் சட்டசபை கூட்டம் நடைபெறுவதால், கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகளின் அடிப்படையிலேயே சட்டசபையில் அவர்கள் பங்கேற்கும் வகையில், அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக