திங்கள், 28 ஜூன், 2021

கலைஞரைக் குற்றம் சொல்பவர்கள் வாயில் இருந்து ராஜபக்சே என்ற வார்த்தையே வருவதில்லை

 Ravishankar Ayyakkannu  : கடந்த சில நாட்களாக Clubhouseல் (புலம் பெயர்) ஈழத் தமிழர்கள் பலருடன் பேசிய பிறகான என் புரிதல்:
* விடுதலைப் புலிகளின் மீதான எந்தவொரு விமர்சனப் பார்வைக்கும் அவர்கள் தயாராக இல்லை.
* விடுதலைப் புலிகளை உணர்வுரீதியாக மட்டுமே அவர்களால் அணுக முடிகிறது.
* விடுதலைப் புலிகள் 10 தவறுகள் செய்திருந்தால் அதில் ஒரே ஒரு தவறைக் கூட அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
* தமிழ்நாட்டுத் தமிழர், குறிப்பாக திமுக, அவர்களுக்குப் போதிய அளவு உதவவில்லை என்று உரிமையுடன் கடிந்து கொள்கிறவர்கள், இந்தப்போராட்டத்தால் தமிழ்நாடு இழந்தது என்ன என்பதைப் பற்றிய எந்தவொரு பொறுப்புணர்வோ, குற்றவுணர்வோ, நன்றியுணர்வோ கொள்வதில்லை.
* தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈழம் குறித்து குற்றவுணர்விலேயே சாக வேண்டும் என்று வலிந்து திணிக்கிறார்கள்.
* ஈழ விடுதலைக்கு இந்தியாவிடம் லாபி செய்வதற்கான களமாகத் தமிழ்நாட்டைப் பார்க்கிறார்களே தவிர, தமிழ்நாட்டுத் தமிழர் மீது அவர்களுக்குத் துளி அளவும் அக்கறை இல்லை.
* மூச்சுக்கு முன்னூறு முறை கலைஞரைக் குற்றம் சொல்பவர்கள் வாயில் இருந்து ராஜபக்சே என்ற வார்த்தையே வருவதில்லை


மேற்கண்ட என் புரிதல் எல்லாம் தவறு என்று உணர்த்தும் வகையில் பேசிய ஈழத்தமிழரை நான் Clubhouseல் காணவில்லை. அப்படியே அவர்கள் என் கருத்தோடு உடன்பட்டாலும் பொதுவெளியில் ஒப்புக் கொள்வதில்லை. Inbox உரையாடல்களில் மட்டுமே ஒப்புக் கொள்கிறார்கள்.
இந்தப் போரைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தொடங்கவும் இல்லை, நடத்தவும் இல்லை, கோரமாக முடித்து வைக்கவும் இல்லை. நாங்கள் ஏன் குற்றவுணர்வுடன் வாழ வேண்டும்?
போரை நடத்திய விடுதலைப் புலிகளும் ராஜபக்சேவும் தான் இதைப் பற்றிக் குற்றவுணர்வு கொள்ள வேண்டும். ராஜபக்சே மீண்டும் அங்கே ஆட்சிக்கு வந்து விட்டார். தமிழ்நாட்டைப் போட்டு இன்னும் உலுப்பிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?
விடுதலைப் புலிகள் மீதான சுய விமர்சனம், பகுப்பாய்வு என்பது ராஜபக்சே மீது சுமத்தியுள்ள இனப்படுகொலை, போர்க்குற்றங்களை நீர்த்துப் போகச் செய்து விடும் என்று அஞ்சுகிறார்கள். இந்த அச்சம் நியாயமானது.
அவர்களுக்கு நீதி கிடைக்க, தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் ஆதரவு கோருவதும் புரிந்து கொள்ளத் தக்கது.
இதற்காக தமிழ்நாட்டில் இருந்து யார் ஆதரித்தாலும் ஏற்றுக் கொள்வார்கள். சீமான் ஆதரித்தாலும் சரி. பாஜக ஆதரித்தாலும் சரி.
அவர்களின் தேவைக்கு இது ராஜதந்திரமாகப் படலாம்.
ஆனால், இதற்காக இவர்கள் உணர்வூட்டியும் பணம் அனுப்பியும் விடுதலைப் புலி பிரச்சாரம் செய்தும் தமிழ்நாட்டில் ஏற்படுத்தும் மாற்றங்கள்,
தமிழ்நாட்டு அரசியலை நாசம் செய்வதைப் பற்றி அவர்களுக்குக் கொஞ்சமும் கவலை இல்லை என்பதே வருத்தத்திற்குரிய உண்மை.
ஈழத்துக்கு ஒரு விடியல் வர வேண்டும் என்றால், அது தற்போது இலங்கையில் வாழும் தமிழர்களிடம் இருந்து ஒரு தலைமை உருவாவதன் மூலமே முடியும். இதைப் புலம்பெயர் தமிழர்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு outsource செய்யலாம் என்ற எண்ணத்தைக் கைவிடுங்கள்.
பக்கத்து வீட்டில் ஒரு பிரச்சினை என்றால் எல்லோரும் உதவத் தான் முயல்வார்கள். ஆனால், அது தன் வீட்டுக்கே இழப்பாக முடியும்  போது விலகி நிற்கவே துணிவார்கள்.
ஈழத்துக்கு விடுதலை வாங்குவோம் என்று,
தமிழ்நாடு இழந்தது போதும்.
நம்ம புள்ளைக் குட்டியைப் படிக்க வைப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக