ஞாயிறு, 6 ஜூன், 2021

பிரபாகரன் எமக்கு நட்பு சக்திதான்... மானசீகன்

 பிரபாகரன் உங்களின் நட்பு சக்தி என்று இன்றுவரை கூறும் உங்களை போன்றவர்களால்தான் ஈழத்தமிழர்களின் தொண்ணுறு வீதமான அழிவுகள் அரங்கேறியது..
ஈழவிடுதலை போராட்டத்தை வெறும் புலிப்பாசிசமாக மாற்றியது தமிழ்நாடுதான்  
கலைஞரை தவிர தமிழ்நாட்டின் அத்தனை தலைவர்களும் கட்சிகளும் இலங்கையில் நடந்த சகோதர படுகொலைக்களின் கூட்டு குற்றவாளிகள்தான்
ஈழமக்களின் துன்பத்தில் தங்கள் அரசியலை நடத்தியது வெறும் நெடுமாறன் வைகோ திருமா மட்டுமல்ல பெரியார் இயக்கங்களும் கம்யூனிஸ்டு கட்சிகளும்கூட  புலிகளின் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பதில் கூறவேண்டியவர்கள்தான்
இலங்கை ராணுவத்தை வீட அதிகமாக தமிழர்களை கொன்று குவித்தது புலிகள்தான்  உங்களின் புரிதலில் எக்கச்சக்கமான அக்கிரமங்கள நிறைந்து இருக்கிறது
இதற்கு எல்லாம் நீங்கள் நேர்மையான பதில் தரமாட்டீர்கள் என்பதுவும் தெரிந்ததே,


ஸ்ரீ சபாரத்தினம் கொலையின் சூத்திரதாரி எம்ஜியார்தான்  அதில் பிரபாகரன் வெறும் அம்புதான்.
முதலில் எம்ஜியார் உமா மகேஸ்வரனைதான் இதற்கு அணுகினார் . அவர் மறுத்தார் பின்பு பிரபாகரன் செய்தார் இன்னும் எவ்வளவோ அக்கிரமங்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளால் அங்கே நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.
புலிகளின் முஸ்லிம்கள் மீதான இனச்சுத்திகரிப்பை பெரியார் இயக்கங்களும் கூட ஆதரித்தனவே?  
இல்லையென்று கூற முடியுமா? எதாவது ஒரு ஒற்றை உதாரணத்தையாவது காட்ட முடியுமா?
இனியாவது தவறுகளை பொதுவெளியில் ஒப்புக்கொண்டு தேவை ஏற்படின் மன்னிப்பும் கேளுங்கள்      

Maanaseegan  : இலங்கை பிரச்சினையை மையமாக வைத்து கட்சிகள்  இயங்குவதை நிறுத்தும் நாளில்தான் தமிழக  அரசியல்  ஆரோக்யமான திசை நோக்கி நகரும்.
அவர்களுக்கு நாம்  தார்மீக  ஆதரவு தரும் நட்பு சக்தியாக மட்டுமே  இருக்க முடியும்.
தமிழகத்தின்  திராவிட  அரசியலை மடைமாற்றி இந்துத்துவ சக்திகள் காலூன்ற  ஈழ  அரசியல்  எப்படி உதவிக் கொண்டிருக்கிறது என்பதற்கு நிகழ்காலமே சாட்சி.
இது தமிழகத்தின் தனித்தன்மைக்கு கேடு விளைவிக்கக் கூடியது.  எல்டிடிஈ னரை அதீதமாக  எதிர்நிலையில் வைக்கிற சோனக ஆதரவு நிலைப்பாட்டையும் சேர்த்தேதான் விமர்சிக்கிறேன்.
அவரவர் மண்ணுக்கான அரசியலை அவரவர் முன்னெடுப்பதே யதார்த்தத்தை உள்வாங்கிக் கொண்ட ஜனநாயகமாக இருக்க முடியும்.
ராஜீவ் படுகொலைக்கு முந்தைய நிலைவேறு.  அப்போது மிகப்பெரிய  இந்திய  ஒன்றியமே ஈழப் போராட்டத்துக்கு நேரடியாகவோ , மறைமுகவாகவோ ஆதரவு தந்தது.  தமிழகத்தில்  இருந்த அரசியல் சக்திகள் போட்டி போட்டுக் கொண்டு ஈழத்தவரை உளச்சுத்தியோடு ஆதரித்தன.
இன்றைய நிலை வேறு.  சகல  அதிகாரங்களும், ராணுவ பலமும்  கொண்ட  ஒன்றிய  அரசைப் பகைத்துக்  கொண்டு தமிழகத்தால் ஒன்றுமே செய்ய  இயலாது. அதுதான் யதார்த்தம்.  இதை உணராதவர்கள் ஏமாந்த சோனகிரிகள். அல்லது தெரிந்தோ யாரையோ ஏமாற்றிக் கண்டிருக்கிறார்கள்.  இது ரெண்டும் இல்லையன்றால் அவர்கள் வேறொரு ரகசியமான நோக்கத்திற்காக உங்களை கச்சாப் பொருள் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கிருக்கும் பலர்  வெளிநாடுகளில் வசிக்கும் வசதி படைத்த  ஈழமக்களின் கற்பனாவாத நம்பிக்கைகளை முதலீடாக்கி அறுவடை செய்து கொண்டிருக்கின்றனர் . இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பது ஈழ  ஆதரவு இல்லை.  ஈழ வியாபாரம். இப்போதைய நிலையில் இங்கிருக்கும் தமிழக  அரசியல்வாதிகளால் ஈழமக்களின் நல்வாழ்விற்காக ஒரு துரும்பைக் கூடத்' தூக்கிப் போட முடியாது.  கசப்பாக  இருந்தாலும்  இதுதான் உண்மை . உங்களின் துயரங்களை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு அவர்கள் அழித்துக் கொண்டிருப்பது எம் மண்ணின்' சகலரையும் உள்ளடக்கிய மதச்சார்பற்ற முற்போக்கு அரசியலை'. அதை எம்மால் ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது.  அவர்கள் ராஜபக்சேயைப் பற்றிப் பேசுவதேயில்லை . கலைஞர்தான் அவர்களின் குறி. ஆயிரம் விமர்சனங்கள்  எல்டிடிஈ மீது இருந்தாலும் தன் வாழ்வில் ஒருமுறை கூட  புலிகளை பொதுவெளியில் குறைத்துப் பேசாத கலைஞர்  'ஈழவிரோதி'. பிரபாரனை தூக்கில் போட வேண்டும்  என்று சொன்ன ஜெயலலிதா  'ஈழத்தாய்  'என்றே அவர்கள்  இங்கே கட்டமைத்து வைத்திருக்கிறார்கள்..மோடியையும் , ஜனநாயகப் பண்புகளால் மிளிரும் ராகுலையும் ஈழப்பிரச்சனையின் ஒற்றைப்படையான பார்வை கொண்டு இவர்கள் ஒரே தட்டில் வைக்கிறார்கள் . இந்தப் போக்கு எங்கள் தலைமுறையையே பாதிக்கும் .விடுதலைப் புலிகளின் அரசியல் தவறுகளை அறிந்திருந்தும் மௌனம் காத்த பலரும்  இவர்களின் வரம்பு மீறிய போலிப்பிரச்சாரங்களின் எதிர்வினையாகவே இப்போது உண்மைகளைப் பேசி வருகின்றனர்.  இப்போதும் சொல்கிறோம் .உங்கள் மீது  எமக்கு அன்பு உண்டு.  அனுதாபம் உண்டு.  ஒரே மொழி பேசினாலும் நம் மண்ணும், அரசியலும் வேறு வேறு.
உலகத்தில் உள்ள  அனைத்து நாடுகளுக்கும் சென்று உங்கள் திறமையாலும், உழைப்பாலும் சம்பாதித்த பணத்தை இந்தப் போலிகளின் காலடியில் கொட்டுவதை விடுத்து இலங்கை மண்ணில் ஏழைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர் நலன்களுக்கு செலவழியுங்கள்.
உண்மையைச் சொல்லப் போனால் உங்கள் எதிரிகளை விட  இவர்கள் கொடூரமானவர்கள் .இவர்கள் சுடுகாடுகளிலேயே நின்று கொண்டு அரிசியைத் தின்று விட்டு  நெற்றிக்காசோடு புறப்படுகிறவர்கள் . தங்களின் பிழைப்புக்காக அந்த  ஊர் சுடுகாடாகவே இருக்க வேண்டும்  என்று ஆசைப்படுகிறவர்கள். இவர்களை நம்பி  எம் தமிழ் மண்ணின் பாரம்பரிய  அரசியலை விமர்சித்தால் நீங்களும்  எம் எதிர்நிலையில் இருபபவரே. ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் கடும் நெருக்கடிக்குள்ளாயிருக்கும் நிகழ்காலச் சூழலில் எங்களால் இப்படித்தான் புரிந்து கொள்ள முடியும்.
உள்ளுக்குள் ஆயிரம் அன்பைக் கொண்டிருந்தாலும் பசுமையான நினைவுகளை சுமந்தபடி நாம் பிரிய வேண்டிய நேரம் வந்து விட்டது நண்பா!
பிரபாகரன் எமக்கு நட்பு சக்திதான்.ஆனால் பெரியாரையும். அண்ணாவையும் ,கலைஞரையும் நிராகரிக்கக் கற்றுத் தருவதுதான் அந்த நட்பு சக்தியால் ஏற்படும் விளைவென்றால் நீ அந்தப் படத்தையும் தூக்கிக் கொண்டு போய் விடு நண்பா! ஆம்; அன்றும், இன்றும், என்றும்  இவர்களே எம் மண்ணின் அடையாளங்கள்.
* மானசீகன் *

Kothai Sengottuvel  : மிகச்சரியான பதிவு. நம் வரலாறு அவர்களுக்கு தெரியாது. அவர்களது நமக்கும் தெரியாது. இங்கே ஈழம் என்ற பெயரில் பேசப்படுவது புலிக்கதைகளே.
இதே கருத்தை 1990 களிலே இடதுசாரிகளும் (தா.பா,ஜெயகாந்தன்...) வலியுறுத்தினார்கள். கேட்பாரில்லை. வியட்நாம் போருக்கு பிறகு அமெரிக்கா இலங்கைக்குள் ஈழப்பிரச்சனையை கொண்டு நுழையும் என்பதாலேயே இந்திரா காந்தி நுழைந்தார்.
அவருக்கு பின் நோக்கம் தடம் மாறிவிட்டது. இனியாவது நம் பொழப்ப பார்க்கலாம். புலிக்கதைகளால் தமிழ்நாடு இழந்தது அதிகம். புலிகள் மட்டுமே ஈழம் அல்ல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக