புதன், 16 ஜூன், 2021

பாளையம் புதூர் ஊர் வலசு பட்டி புரம் பதி எல்லாம் ஊர்களின் பெயர்கள்

May be an image of text that says '1828 பாளையம் என முடியும் ஊர்கள் புதூர் என என முடியும் ஊர்கள் ஊர் என முடியும் ஊர்கள் வலசு என முடியும் ஊர்கள் 565 561 493 185 90 55 54 பட்டி என முடியும் ஊர்கள் புரம் என முடியும் ஊர்கள் பதி என முடியும் ஊர்கள் காடு என முடியும் ஊர்கள் கரை என முடியும் ஊர்கள் குட்டை என முடியும் ஊர்கள் மங்கலம் என முடியும் ஊர்கள் நல்லூர் என முடியும் ஊர்கள் புத்தூர் என முடியும் ஊர்கள் 33 33 26 18 10 ஒடு, தொழுவு, குறிச்சி, நிலை, பாடி, கயம், மி, வாவி என முடியும் ஊர்களும் உள்ளன. பயர்கள் உடையவை.'

Magudeswaran Govindarajan  : பாளையம், பட்டி என்று முடியும் ஊர்ப்பெயர்களைக் குறித்து அண்மையில் நானெழுதிய பதிவொன்று நினைவிருக்கலாம். கோவைப் பகுதி ஊர்ப்புறப் பெயர்கள் பெரும்பாலும் ‘பாளையம்’ என்றே முடியும் என்றும், கற்பனையாய் இப்பகுதியின் ஓர் ஊர்ப்பெயரைக் குறிப்பிட நேர்ந்தால் பட்டி என்பதனைவிடவும் பாளையம் எனல் வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தேன். அந்தப் பதிவின் முதல் பின்னூட்டத்திலேயே “இங்கும் பட்டிகள் இருக்கின்றன. அவை குறைவாகத்தான் இருக்கும்.’ என்றிருந்தேன். இன்னோரிடத்தில் பத்துப் பாளையங்கள் இருக்குமிடத்தில் இரண்டு பட்டிகள் இருக்கின்றன என்றும் கூறியிருந்தேன்.
அந்தப் பதிவானது ‘திரைப்படத்தில் புனைவாய் ஓர் ஊர்ப்பெயர் வைப்பதைப் பற்றியது’ என்பதால் அதற்குமேல் நான் இடையீடு செய்யாமல் நண்பர்கள் கூறுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். என்னுடைய கருத்தினை உறுதிப்படுத்திக்கொள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஊர்ப்பெயர்களையும் மாவட்டத்து இணையத்தின் வழியாகச் சரிபார்த்தேன். இருநூற்றுத் தொண்ணூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சிப் பெயர்களில் ( ஓர் ஊராட்சியில் ஏழெட்டுச் சிற்றூர்கள் இருக்கும்) பாதிக்கும் அருகிலான எண்ணிக்கையில் பாளையங்கள் இருந்தன. நான் சொன்னதுபோலவே பத்துக்கு இரண்டு பட்டிகளும் இருந்தன. அதனை எடுத்தெழுத நேரமின்மையால் விடுபட்டுவிட்டது.


புலவர் செ. இராசுவின் “ஈரோடு மாவட்ட வரலாறு” என்ற நூலில் ஊர்ப்பெயர்களைப் பற்றிய முடிவான தொகுப்பு எண்ணிக்கை கண்ணில் பட்டது. ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்கள் யாவற்றிலும் ஒரே நிலவரம்தான். நான் முன்சொன்னபடி ஆயிரக்கணக்கான ஊர்ப்பெயர்கள் பாளையம் என்றே ஈரோடு மாவட்டத்திலும் காணப்படுகின்றன.  இந்தச் செய்தியானது இம்மாவட்டங்களின் ஊர்ப்பெயர் ஆராய்சிக்கு உறுதுணை செய்யும். இது பழைய ஈரோடு மாவட்டத்திற்கானது என்பதையும் நினைவிற்கொள்க.
இதோ பட்டியல் :
பாளையம் என முடியும் ஊர்கள் 1828
புதூர் என முடியும் ஊர்கள் 565
ஊர் என முடியும் ஊர்கள் 565
வலசு என முடியும் ஊர்கள் 493
பட்டி என முடியும் ஊர்கள் 185
புரம் என முடியும் ஊர்கள் 90
பதி என முடியும் ஊர்கள் 55
காடு என முடியும் ஊர்கள் 54
கரை என முடியும் ஊர்கள் 33
குட்டை என முடியும் ஊர்கள் 33
மங்கலம் என முடியும் ஊர்கள் 26
நல்லூர் என முடியும் ஊர்கள் 18
புத்தூர் என முடியும் ஊர்கள் 10
இவை தவிர “ஓடு, தொழுவு, குறிச்சி, நிலை, பாடி, கயம், பள்ளி, பேட்டை, குழி, வாவி என முடியும் ஊர்களும் உள்ளன.” என்கிறார் புலவர் இராசு.
நான் முன்பே சொன்ன ஒன்றையும் நினைவூட்டுகிறேன். ஒரு மாவட்டத்திற்குள்ளேயே இவ்வாறு ஐயாயிரம் ஊர்ப்பெயர்கள் இருக்கின்றன என்றால் தமிழகத்தின் சிற்றூர்ப் பெயர்கள் அனைத்தையும் சேர்த்தால் ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் மேலாக வரக்கூடும். அப்பெயர்களிலின் தூய தமிழ் வடிவத் தோற்றுவாயைத் தேடிப் போனால் இம்மொழியின் வழக்கிழந்த சொற்கள், அழிவுற்ற சொற்கள், மருவிய திரிந்த சொற்கள் என அனைத்தையும் அகழ்ந்தெடுத்துவிடலாம். ஊர்ப்பெயர்களில் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட மொழிவளம் புதைந்திருக்கிறது.

தமிழ் இளந்திரையன்  :  மலை என முடியும் ஊர்களும் நிறைய உள்ளன.
திருவண்ணாமலை
சின்னமலை
சுவாமிமலை
சென்னிமலை
திருமலை
செம்மலை
ஆனமலை
திருநீர்மலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக