வியாழன், 24 ஜூன், 2021

இங்குள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல; ஈழத் தமிழர்களுக்காகவும் தி.மு.க அரசு குரல் கொடுக்கும்” : முரசொலி !

 முரசொலி - premjourn  : தமிழுக்காகவும், தமிழர் நலத்துக்காகவும் தொடங்கப்பட்ட இயக்கம் ஒன்று ஆட்சிக்கு வந்தால் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் தி.மு.கழக அரசு செய்யத் தொடங்கி இருக்கிறது என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு தமிழும், தமிழனும் இருகண்கள் என்பது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அவர்கள், “தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்பது ஆளுநர் உரையிலேயே இருக்கிறது. நீங்கள் சொன்னதைப் போல, முதல்வர் அவர்கள் தமிழுக்கு முக்கியத்துவம் தருகிறார். அந்த வகையிலே வேலைவாய்ப்பிலே முன்னுரிமை கொடுக்கப்படும் என்ற வரியும் இருக்கிறது” என்பதை விளக்கினார்.



“தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர்க்கு அதிகமாக வேலைவாய்ப்பு கிடைப்பது எப்படி?'' என்றும் வேல்முருகன் கேள்வி எழுப்பினார். அதற்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். “கடைசி பத்தாண்டு காலத்தில் எந்த அரசாணையின் அடிப்படையில் எந்தெந்த சட்டத்தின் அடிப்படையில் எந்தெந்த பொது நிறுவனங்களின் திட்டங்களில் தமிழர்களைத் தவிர வேறு மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அல்லது நபர்களுக்கு வாய்ப்பு கிடைக்கப் பெற்றது என்பதை ஆய்வு செய்வோம். அது எந்த அரசாணையின் கீழ் வந்தது என்பதை ஆய்வு செய்து முற்றிலும் மாற்றி அதை தவிர்ப்பதற்கு முதலமைச்சரின் உத்தரவின்படி அதைச் செய்ய விருக்கிறோம்” என்று சொல்லி இருக்கிறார்.
“இங்குள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல; ஈழத் தமிழர்களுக்காகவும் தி.மு.க அரசு குரல் கொடுக்கும்” : முரசொலி !

தமிழுக்காகவும், தமிழர் நலத்துக்காகவும் தொடங்கப்பட்ட இயக்கம் ஒன்று ஆட்சிக்கு வந்தால் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்யத் தொடங்கி இருக்கிறது. இவை ஆளுநர் உரையில் மிகத் தெளிவாக உள்ளது. “தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் அரசுப் பதவிகளுக்கான வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும்” என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த நோக்கத்துக்கு மாறாக கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளையும், உத்தரவுகளையும் மாற்றி அமைக்கவும், ரத்து செய்யவும் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஆளுநர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மாநில அரசு அலுவலகங்களில் மட்டுமல்ல; ஒன்றிய அரசு அலுவலகங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் வலியுறுத்துவோம் என்றும் ஆளுநர் உரையில் சொல்லப்பட்டுள்ளது.

இதனை அழுத்திச் சொல்வதற்குக் காரணம் அ.தி.மு.க ஆட்சியில் போடப்பட்ட அரசாணை ஆகும். தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பைப் பெறுவதற்கு தமிழ் மொழிப் பாடத்தில் நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்தது அ.தி.மு.க அரசு. அதனால் தான் வேறு மாநிலத்தவர்களும் இங்கு பணி வாய்ப்பை பெற முடிந்தது. இது முதல் கொடுமை.

இன்னொரு கொடுமை ஒன்றிய அரசுப் பணிகளான அஞ்சல், ரயில்வே உள்ளிட்ட பணியிடங்களில் தமிழ்ப்பாடத்தில் வெளி மாநிலத்தவர்கள் ‘ஆல்பாஸ்' ஆகும் மோசடியும் நடந்துள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்தில் வெளிமாநிலத்தவர்கள் அதிகம் வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இதனைத்தான் கவனத்தோடு கழக அரசு கண்காணிக்கத் தொடங்கி உள்ளது. இந்த இரண்டு கொடூரங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
“இங்குள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல; ஈழத் தமிழர்களுக்காகவும் தி.மு.க அரசு குரல் கொடுக்கும்” : முரசொலி !

தமிழ் மொழியை இந்திய அலுவல் மொழிகளில் ஒன்றாக அறிவிக்க ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும், தமிழ்நாட்டிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்பட அனைத்து ஒன்றிய அரசு நிறுவனங்களிலும் தமிழ்மொழி இணை அலுவல் மொழியாக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் இதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 343 இல் உரிய திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் ஒன்றிய அரசை தி.மு.க அரசு வலியுறுத்தி வருகிறது. செம்மொழித் தமிழாய்வு மையத்துக்கு புத்துயிர் அளிக்கவும் கோரிக்கை வைத்துள்ளது.

இங்குள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல; ஈழத் தமிழர்களுக்காகவும் குரல் கொடுக்கும் ஆட்சியாக தி.மு.க அரசே உள்ளது. ஈழத்தமிழர்க்கு சம குடிமைசார் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதி செய்திட இலங்கை அரசை வலியுறுத்துமாறு ஒன்றிய அரசை கழக அரசு வலியுறுத்தி உள்ளது.

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கத் தேவையான சட்டங்களையும், சட்டத் திருத்தங்களையும் மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை கழக அரசு வலியுறுத்தி இருக்கிறது. மனித வளம் என்பது தமிழ்நாட்டிலேயே ஏராளமாக உள்ளது. அனைத்து துறையிலும் திறமையான இளைஞர்கள் அதிகம் உருவாகி விட்டார்கள்.

கல்வித் திறமை மட்டுமல்ல; தனித் திறமை கொண்டவர்களாகவும் தமிழர்கள் வளர்ந்து வருகிறார்கள். எனவே, இவர்களுக்கு முழுமையாக வேலைவாய்ப்பை வழங்கும் கடமை அரசுக்கு இருக்கிறது. அதனை உணர்ந்த அரசாக கழக அரசு இருக்கிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மண்ணின் மைந்தர்க்குத்தான் வேலை என்ற முழக்கம் ஒலித்து வருகிறது. இது தமிழகத்திலும் ஒலித்து வருகிறது.

இந்தக் குரலை திராவிட முன்னேற்றக் கழகமும் ஒலித்து வருகிறது. அதனை நிறைவேற்றித் தர வேண்டிய இடத்துக்கு இன்று கழகம் வந்துள்ளது. இதனை மனதில் வைத்து திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையிலேயே இவற்றைத் தெளிவுபடுத்தி உள்ளது. பச்சைத்தமிழர் ஆட்சி மலர்ந்துவிட்டது என்ற பெருமிதம் கொள்வோம்!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக