செவ்வாய், 29 ஜூன், 2021

புதிய டிஜிபி சைலேந்திரபாபு: அரசாணை வெளியீடு!

 மின்னம்பலம் : தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்று (ஜூன் 29) மாலை இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதைய தமிழக டிஜிபியான ஜே.கே. திரிபாதியின் பதவிக்காலம் வரும் ஜூன் 30 ஆம் தேதியோ டு முடிவடைகிறது. இதையொட்டி அடுத்த டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான நிர்வாக நடைமுறைகள் கடந்த மாதத்தில் இருந்தே தொடங்கிவிட்டன.
அதன்படி அடுத்த டிஜிபிக்கான தரவரிசையில் உள்ள அதிகாரிகளின் பட்டியலை ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யு.பி.எஸ்.சி)த்துக்கு கடந்த மே 18 ஆம் தேதி அனுப்பி வைத்தது தமிழக அரசு. அந்தக் கடிதத்தின் கோரிக்கைப்படி ஜூன் 28 ஆம் தேதி தமிழகத்தின் புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான யு.பி.எஸ்.சி. யின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் கூடியது. 

இதில் தமிழக தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், தற்போதைய டிஜிபி ஆகியோரும் ஒன்றிய உள்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவில் தமிழக அரசு அனுப்பிய அதிகாரிகள் பட்டியலில் இருந்து மூவரை தேர்ந்தெடுத்து தமிழக அரசுக்கு அனுப்பியது யுபிஎஸ்சி.

“யுபிஎஸ்சி ஆணையத்தின் பரிந்துரைகளை தமிழக அரசு கவனமாகவும் சுதந்திரமாகவும் ஆராய்ந்ததோடு, அந்த பட்டியலில் இருந்த அதிகாரிகளின் கடந்த கால பணிப் பதிவுகளையும் பரிசீலித்தது.

இதன்முடிவில் தமிழ்நாடு 1987 பணிநிலையைச் சேர்ந்த டாக்டர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் தமிழ்நாடு காவல்துறையின் டிஜிபியாக ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து பொறுப்பேற்கிறார்” என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தற்போது ரயில்வே டிஜிபியாக இருக்கும் சைலேந்திரபாபு ஐபிஎஸ் இதுவரை தான் வகித்த அனைத்து பொறுப்புகளிலும் மக்களோடு நேரடியாகத் தொடர்பில் இருந்து பணியாற்றியவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். உடல் நலம், மன நலம் ஆகியவற்றை தொடர்ந்து வலியுறுத்தி வரும் சைலேந்திரபாபு குறிப்பாக மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டவர்.

சமூக தளங்கள் மூலம் தொடர்ந்து மக்களோடு தொடர்பில் இருக்கும் அரிதான சில அதிகாரிகளில் முக்கியமானவர் சைலேந்திரபாபு. டிஜிபிக்கான பட்டியலில் இடம்பெற்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே அதிகாரியான சைலேந்திரபாபு டிஜிபி ஆனதை ஒட்டி அவருக்கு சமூக தளங்களில் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல பல்வேறு துறைகளைச் சார்ந்த பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக