செவ்வாய், 22 ஜூன், 2021

பெரியாரிஸ்டுகளுக்கும் இணைய அரக்கர்களுக்கு இடையே குடுமி பிடி சண்டை .. சாதுர்யம் பேசாதீடி சரித்திரத்திற்கு பதில் சொல்லடீ!

Elangovan Muthiah  : இறுதிப் போருக்கு முன்னதாகவோ, முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்குப் பிறகோ ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் நண்பர்கள் பலர் எனக்கு உண்டு. அவர்களில் பெரும்பாலோர்க்கு, கவனிக்க பெரும்பாலோர்க்கு திமுகவின் மீது பெரிய அளவிலான விமர்சனங்கள் ஏதுமில்லை.

முள்ளிவாய்க்காலில் 'நின்ற' ஒருவரே "கலைஞர் கருணாநிதி அவரால் இயன்றதைச் செய்தார்" எனும் வார்த்தைகளோடு உரையாடலை முடித்துக் கொள்பவராகவே இருக்கிறார்.
அதிலொரு மெல்லிய கசப்பு இருக்கவே செய்யும்.
எல்லா வாசல்களும் அடைக்கப்பட்ட நிலையிலிருந்து வாழ்வை மீட்டெடுத்தவர்களின் அனைத்தின் மீதான கசப்பு அது. இங்கிருக்கும் நம்மால் அதன் பத்திலொரு பாகத்தைக் கூட விளங்கிக்கொள்ள முடியாது.
புலிகளுக்கான ஆதரவு, எதிர்ப்பு என்கிற இரண்டு நேரெதிர் பிரச்சனைகளுக்காக ஆட்சி அதிகாரத்தை இழந்த விசித்திர வரலாறு திமுகவுக்கு உண்டு.


திமுகவுக்கும், புலிகளுக்குமான உறவென்பது கசப்பும், காதலும் பிண்ணிப் பிணைந்த ஒன்று. 1983ல் இருந்து இன்று வரை திமுகவின் அதிகாரப்பூர்வ தலைவர்கள் யாரும் வெளிப்படையாக புலிகளை விமர்சித்ததில்லை. அதே நேரம் ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பிறகு வெளிப்படையாக ஆதரித்ததுமில்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்ட கட்சியான திமுகவின் கைகள் கட்டப்பட்டிருக்கும் இடம் இது. இதை விளங்கிக்கொள்ள சின்ன அளவிலான அரசியல் அறிவே போதும்.
அப்படியானால் இப்போது இவ்விரு இயக்கங்களை அரசியலின் எதிர்நிலையில் இருப்பதாகத் தொடர்ந்து கட்டமைப்பவர்கள் யார்?

"தாங்கள் கட்சி உறுப்பினர்கள் கிடையாது, கட்சியின் தலைமை இடும் உத்தரவுகளோ, அறிவுரைகளோ எங்களைக் கட்டுப்படுத்தாது" என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டு, திமுகவின் சார்பாக சமூக ஊடகங்களில் தொடர்ந்து கருத்துப்பரிமாற்றங்களை முன்னெடுக்கும், கட்சித் தலைமை அங்கீகரிக்காத, அல்லது கட்சித் தலைமையின் அங்கீகாரத்தைக் கோராத இணைய உடன்பிறப்புகள், திராவிடம் 2.0, அரக்கர்கள் என்றெல்லாம் அறியப்படுபவர்கள் ஒரு புறம்...
இவர்கள் ஒரு வகையில் பண்டைய சோழ அரசர்களின் மெய்க்காவல் படையான 'கைக்கோளப்படை' வீரர்களைப் போன்றவர்கள். தங்கள் உயிரைக் கொடுத்தாவது அரசனின் உயிரைக் காப்பாற்றுபவர்கள். அரசன் யாராக இருந்தாலும் இவர்களுக்கு அது ஒரு பொருட்டில்லை, அரசனின் உத்தரவுகளே இவர்களைக் கட்டுப்படுத்தாது என்பதைப் போலவே, தன்னைக் காப்பதற்காக இவர்களில் எத்தனை பேர் செத்தாலும் அரசனுக்கும் இவர்களைப் பற்றிக் கவலையில்லை.

இறுதிப்போர் முடிந்த பிறகு,  விடுதலைப்புலிகளின், ஈழ விடுதலைப் போரின் தமிழ்நாட்டு அரசியல் முகமாக, தாங்களே தங்களைக் கருதிக்கொண்டு தங்களது அரசியல் செயல்பாடுகளை வரித்துக்கொண்ட நாம் தமிழர் கட்சியின் தொடர் பிரச்சாரங்களால் உந்தப்பட்ட, உண்மையான ஈழ வரலாறைப் பற்றி எந்த ஒரு பெரிய அறிவுமில்லாத, இறுதிப் போருக்குப் பின்னதாக, அதாவது புலிகள் இயக்கம் முற்றிலும் அழித்தொழிக்கப்பட்ட பிறகு ஈழ அரசியலைப் பற்றி தெரிந்து கொண்ட, அதிமுக ஆதரவாளர்களாக இருந்து ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு எடப்பாடி, பன்னீர்செல்வம் தலைமையை ஏற்க முடியாமல், அதே நேரம் அது வரை அவர்கள் மனதில் ஆழப்பதிந்திருந்த திமுக மீதான வெறுப்பின் காரணமாக வேறு வழியின்றி, மாற்று அரசியல் என்கிற கருத்து நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்களாக மாறிப்போனவர்கள் மறுபுறம்.

இவர்களை தங்களது தமிழ்நாட்டு அரசியல் முகமாக ஈழத்தவர்கள் அங்கீகரித்திருக்கிறார்களா என்னும் நகைப்புக்குரிய கேள்வியை நான் உங்களிடமே விட்டுவிடுகிறேன். இதிலேதும் சந்தேகமிருந்தால் அவரவர் ஈழ நண்பர்களிடமோ, 1983ல் இருந்தே ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் நிலைத்து நிற்கும் பிற இயக்கங்களின் ஆட்களுடனோ உரையாடித் தெரிந்து கொள்ளுங்கள்.
இதில் ஈழ விடுதலை வரலாற்றில் ஆரம்பத்திலிருந்தே தங்களது நிலைப்பாட்டைத் தெளிவாக அறிவித்து இன்றுவரை அந்த நிலையில் மாற்றம் ஏதும் இல்லாதிருக்கும் வைகோ, நெடுமாறன் போன்றோரை நான் இந்தப் பிரச்சனைக்குள் கொண்டுவரவில்லை. நான் 'இந்தப் பிரச்சனை' என்று குறிப்பிடுவது இங்கு நாள்தோறும் இணையத்தில் காணக் கிடைக்கும் குடுமிப்பிடி சண்டைகளை...
ஆக..
இணைய திமுகவினரின் கருத்துகள் எப்படி அதிகாரப்பூர்வமான திமுகவின் கருத்துகள் கிடையாதோ, அது போலவே நாம் தமிழர் சுடுகுஞ்சுகளின் கருத்துகளும் ஈழ மக்களின் கருத்துகள் கிடையாது.
ஃபேஸ்புக் மொழியில் சொல்வதென்றால் இது, ஒரிஜினல் ஐடிகள் அமைதியாக இருக்கையில், இரண்டு ஃபேக் ஐடிக்களுக்கு இடையே நடக்கும் சண்டை.
பேசப்பட வேண்டிய சமகாலப் பிரச்சனைகளிலிருந்து நம்மை, நம் கவனத்தை மடைமாற்ற வேண்டுமானால் இவை பயன்படலாம்.

மற்றபடி, இவற்றையெல்லாம் ஓரமாய் நின்று வேடிக்கை பார்த்தால் நன்றாகப் பொழுது போகும் என்பதைத் தாண்டி இவற்றில் பொருட்படுத்த வேறு எதுவுமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக